Environmental Changes: 'காலநிலை மாற்றம்' உருகும் பனிமலைகள், இடமாறும் எவெரஸ்ட் பேஸ் கேம்ப்..!
மலையேறிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. காலநிலை மாற்றத்தால் நிகழும் மாற்றங்களினால் புவி வெப்பமடைதலின் தாக்கமாகவே இந்நிகழ்வு உற்று நோக்கப்படுகிறது
இந்தியாவின் எல்லை நாடான நேபாளின் பெரும்பகுதியில் அமைந்துள்ளது எவெரஸ்ட் சிகரம். ஆண்டுதோறும் வசந்தகாலத்தில் (மார்ச் முதல் மே வரையில்) எவெரஸ்ட் சிகரம் மீது மலையேற்றத்தில் ஈடுபடுவோர் பயணம் மேற்கொள்ள ஏதுவாக அமைக்கட்டிருக்கும் Base Camp-ஐ மாற்றப் போவதாக நேபாளம் கூறியுள்ளது. இந்த அறிவிப்பு மலையேறிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. காலநிலை மாற்றத்தால் நிகழும் மாற்றங்களினால் புவி வெப்பமடைதலின் தாக்கமாகவே இந்நிகழ்வு உற்று நோக்கப்படுகிறது.
மலையேற்ற விரும்பிகள் நாடும் முதல் இடம்
நேபாள நாட்டில் அமைந்துள்ள எவரெஸ்ட் சிகரம் உலகில் மிக உயர்ந்த சிகரமென்பதால் மலையேற்றத்தில் ஆழ்ந்த அனுபவமுள்ள மற்றும் அலாதி விருப்பமுள்ளவர்களின் மலையேற்றத்திற்கான முதன்மையான சிகரம் எவரெஸ்ட் என்பதில் மாற்றில்லை. உலகின் தலைசிறந்த மலையேற்ற வீரர்கள், மலையேற்ற விரும்பிகள் உட்பட அனைத்து தரப்பினரும் எவரெஸ்டின் உச்சியை வாழ்வில் ஒரு முறையேனும் அடைய வேண்டும் என்பதினை லட்சியமாகக் கொண்டுள்ளார்கள்.
அவ்வாறான விருப்பமுள்ளவர்கள் தங்களது பயணத்தினை திட்டமிடலுடன் தொடங்குவதற்கான இடமாக அமைக்கப்பட்டுள்ளது இந்த பேஸ் கேம்ப் எனும் பனிமலைத் தங்குமிடம். இந்த பேஸ் கேம்பானது கடல் மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 5360 மீட்டர்(17500 அடிகளுக்கும் மேல்) உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் 1500-க்கும் மேற்பட்டவர்கள் தங்கிச் செல்லும் அளவில் உள்ளது. 2021-ம் ஆண்டில் மட்டும் 400-க்கும் அதிகமான அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பகுதியில் அமைந்துள்ள கும்பு பனிப்பாறை (Khumbu Glacier) உருகுதலின் அளவு அதிகரித்துள்ளதே இதற்கான முதன்மை காரணமாக சொல்லப்படுகிறது.
அச்சுறுத்தும் பனிப்பாறைகளின் உருகும் தன்மை
மலை ஏறுபவர்கள் தங்கிச் செல்லும் இந்த பேஸ் கேம்பினை மாற்றுவது தான், பனிமலையின் உருகும் தன்மை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் இந்த சூழலில் நன்மையாக அமையும் என்று மலையேற்ற திட்டமிடல்களை செய்யும் அமைப்புகளும் நிறுவனத்தை சேர்ந்த பலரும் ஆமோதிக்கும் கருத்தாக உள்ளது. கும்பு பனிப்பாறை ஆண்டிற்கு 1 மீட்டர் அளவில் உருகுவதாக ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இவ்வாறான உருகுதல்களுக்கு காலநிலை மாற்றத்தால் புவி வெப்பமடைதல் முக்கிய காரணமென்றாலும், மலையேற்றத்தின் போது கொண்டு செல்லப்பட்டு அத்தியாவசிய தேவைகளுக்காக பயப்படுத்தப்படும் மண்ணெண்ணெய், கேஸ் உள்ளிட்ட பொருட்களின் வெப்ப வெளியேற்றத்தினையும் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளதாக மலையேறிகளில் சிலர் கூறுவதும் கவனிக்கதக்கதாக உள்ளது.
பேஸ் கேம்பிற்கு மிக அருகிலேயே பனிமலைகள் மற்றும் பாறைகள் உருகுவதும் பனிப்பாறைகள் வெடித்து நகர்வதும் சமீப காலங்களில் அதிகரித்துள்ளதாக சொல்லும் சிலர் பேஸ் கேம்ப் பகுதியில் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் சிறு சிறு குளம் போன்ற பகுதிகள் உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். இது மனிதர்கள் தங்கிச் செல்வதிற்கான ஸ்திரத்தன்மையினை கேள்விக்குள்ளாக்குவது போல் உள்ளது.
எவெரஸ்ட் மலையேற்றத்தின் புதிய பேஸ் கேம்ப்
இந்நிலையில் தான் நேபாளச் சுற்றுலாத் துறையின் இயக்குனர் பேஸ் கேம்பிற்கான மாற்றிடத்தினை தேடத் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் புதிய பேஸ் கேம்பானது தற்போது அமைந்துள்ள இடத்திலிருந்து 200 மீட்டர் முதல் 400 மீட்டர் வரை கீழே அமைவதற்கான வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அவ்விடத்தில் ஸ்திரத்தன்மை பல்வேறு ஆய்களின் மூலமும் சுற்றுச்சூழல் மற்றும் பருவ மாற்றங்களை தீவிரமாக கண்காணிக்கும் அமைப்புகளிடமும் விஞ்ஞானிகளிடமும் கருத்துக்களையும் பெற்று அதன் அடிப்படையிலேயே அமைக்கப்படும் எனத் தெரிகிறது. பேஸ் கேம்ப் நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்களிடம் இது குறித்து கலந்து பேசுவதோடு மட்டுமில்லாமல், அப்பகுதியில் வாழும் மக்களின் கருத்துகளும் கலாச்சாரத்தின் தொன்மைகளும் கருத்தில் கொள்ளப்படும் என தெரிகிறது. நேபாள அதிகாரிகள் அதிகாரபூர்வமாக இப்பணிகள் நிறைவடைய சில ஆண்டுகள் பிடிக்கும் என தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்வு காலநிலை மாற்றத்தினை கவனமோடு சம்மந்தப்பட்ட நாடுகளும், அமைப்புகளும் கையாள விடுக்கப்பட்ட எச்சரிக்கை மணியாக பாவித்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசரம் என எச்சரிக்கின்ற்னர் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்தினை கவலையோடு கவனிக்கும் ஆர்வலர்கள்.