China Unidentified Object: சீன கடல்பகுதிக்கு மேலே மர்மபொருள்..! என்னதான் நடக்கிறது?
கிங்டாவ் நகரின் வானில் காணப்பட்ட அந்த மர்ம பொருளை சுட்டு வீழ்த்த சீன ராணுவம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
![China Unidentified Object: சீன கடல்பகுதிக்கு மேலே மர்மபொருள்..! என்னதான் நடக்கிறது? China Spots Unknown Object Over Its Waters To Shoot It Down know more details China Unidentified Object: சீன கடல்பகுதிக்கு மேலே மர்மபொருள்..! என்னதான் நடக்கிறது?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/13/75d97eea5a19a88a2c8a2007faf763271676302087558333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கடந்த ஒரு வார காலமாக, சீன உளவு பலூன் விவகாரம் உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சீன உளவு பலூன் என சொல்லப்பட்டு வந்த ஒன்றை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியதையடுத்து அமெரிக்க, சீன நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவி வருகிறது.
சீன பலூன் சுட்டு வீழ்த்தப்பட்ட ஆறே நாள்களில் அடையாளம் தெரியாத ஒரு மர்ம பொருள் அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தின் வானில் பறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அடையாளம் தெரியாத அந்த மர்ம பொருளையும் அமெரிக்க ஜெட் விமானங்கள் நேற்று சுட்டு வீழ்த்தியது.
சீனாவிலும் மர்ம பொருள்:
இதைத்தொடர்ந்து, கனடா வான்பரப்பில் அத்துமீறி பறந்த அடையாளம் தெரியாத மர்மப் பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இன்று அறிவிக்கப்பட்டது. இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்பே, சீனாவின் எல்லைக்குட்பட்ட கடல் பகுதியின் வான்பரப்பில் அடையாளம் தெரியாத ஒரு மர்ம பொருள் காணப்பட்டது.
கிங்டாவ் நகரின் வானில் காணப்பட்ட அந்த மர்ம பொருளை சுட்டு வீழ்த்த சீன ராணுவம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கிங்டாவ் ஜிமோ மாவட்டத்தின் கடல் மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரி கூறுகையில், "அப்பகுதியில் உள்ள மீனவர்கள் பாதுகாப்பில் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்" என்றார்.
சுட்டுவீழ்த்தப்பட்ட மர்மபொருள்:
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் உத்தரவின் பேரில் அமெரிக்க போர் விமானம் ஒன்று, அடையாளம் தெரியாத பறக்கும் பொருளை நேற்று சுட்டு வீழ்த்தியது.
இதுகுறித்து ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில், ”கனடா வான்வெளியில் அத்துமீறி பறந்த அடையாளம் தெரியாத ஒரு பொருளை சுட்டு வீழ்த்த உத்தரவிட்டேன். கனடா மற்றும் அமெரிக்க விமானங்கள் சேர்ந்து இந்த முயற்சியில் ஈடுபட்டன. அப்போது, அமெரிக்காவின் F-22 விமானம் அந்த மர்ம பொருளை சுட்டு வீழ்த்தியது. இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் உடன் தொலைபேசி மூலமாக பேசினேன். சுட்டு வீழ்த்தப்பட்ட மர்மப் பொருளின் பாகங்களை சேகரித்து அவற்றை ஆய்வு செய்யும் பணிகளை, கனடா மேற்கொள்ளும். வட அமெரிக்கா பிராந்தியத்தை கண்காணிப்பதற்காக அமெரிக்க படைகளுக்கு நன்றி” என்றார்.
வடக்கு அமெரிக்காவின் வான்வெளி பரப்பில் கடந்த 2 வாரங்களில் மூன்று முறை அத்துமீறல்கள் நடைபெற்று உள்ளன. இதனால் அந்த பிராந்தியத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஏலியன் வேலையா?
இந்த மர்ம பொருள்களை சீன பறக்கவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சீன கடலின் மேலே மர்ம பொருள் காணப்பட்டது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா, கனடா, சீனா வான்பரப்பில் காணப்பட்ட இந்த பொருட்கள் விமான ஓட்டி இல்லாமல் அந்த பொருட்கள் எப்படி பறந்தன? அவை எந்த நாட்டிற்கு சொந்தமானது? ஏலியன் விமானமா? எதற்காக பறந்தது? மக்களுக்கு இது ஆபத்து விளைவிக்குமா என்பது தொடர்பான ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)