தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் வாக்குப்பதிவு நிறைவு
தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கான வாக்குப்பதிவு இரவு 7 மணியுடன் நிறைவு பெற்றது.
தமிழ்நாட்டில் இன்று 234 தொகுதிகளுக்கும் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. திட்டமிட்டபடி, இன்று காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தலில், 3,585 ஆண்கள், 411 பெண்கள், மூன்றாம் பாலினம் 2 பேர் என மொத்தம் 3,998 பேர் போட்டியிட்டனர். அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 77 பேரும், அரவக்குறிச்சியில் 31 பேரும் போட்டியிட்டனர்.
எடப்பாடியில் முதல்வர் பழனிசாமி, கொளத்தூரில் திமுக தலைவர் ஸ்டாலின், போடிநாயக்கனூரில் துணை முதல்வர் பன்னீர் செல்வம், கோவில்பட்டியில் அமமுக பொதுச்செயலாளர் தினகரன், கோவை தெற்கில் மநீம தலைவர் கமல்ஹாசன், திருவொற்றியூரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் போட்டியிட்டனர்.
88,937 வாக்குச்சாவடிகளில் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்காளர்கள் வாக்களித்தனர். பெரியளவில் அசம்பாவிதங்கள் மற்றும் சண்டை சச்சரவுகள் ஏதுமின்றி வாக்குப்பதிவு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும், கேரளாவில் உள்ள 140 சட்டமன்றத் தொகுதிகளிலும், புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. அசாமில் நடைபெற்ற மூன்றாம் கட்ட வாக்குப்பதிவும் நிறைவு பெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.