Minister Ponmudi: அமைச்சர் செஞ்சி மஸ்தான், எம்பி ரவிக்குமாரை புகழ்ந்து தள்ளிய அமைச்சர் பொன்முடி
ஓய்வு பெற்ற போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு பணப் பலன்கள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான், எம்பி ரவிகுமாரை புகழ்ந்து தள்ளிய அமைச்சர் பொன்முடி.
விழுப்புரம் தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு மற்றும் விருப்ப ஓய்வு பெற்றவர்கள் பணியின் போது உயிரிழந்த வாரிசு தாரர்களுக்கு பணி ஓய்வு கால பணப்பலன்கள் வழங்கும் நிகழ்வு வழுதரெட்டியிலுள்ள சட்டக்கல்லூரியில் போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது. இதில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி , சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சுமணன் புகழேந்தி எம்பி ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது அமைச்சர் பொன்முடி பேசுகையில், தமிழக மக்களின் நலன் கருதி எந்த துறையை யாரிடம் கொடுக்க வேண்டும் என்பதை உணர்ந்து போக்குவரத்து துறையை சிவக்குமாரிடம் முதல்வர் வழங்கி உள்ளதாகவும் அதனை சிறப்பாக நடத்தி வருவதாகவும் கூறினார். அந்த காலத்தில் இருந்து தற்போது வரை கழகத்திற்காக பாடுபட்டு வரும் அன்பிற்குரிய நண்பர், சகோதரர் கே.எஸ் மஸ்தான் எனவும், எப்பொழுதும் இலக்கிய நயத்தோடு பேசும் ஆற்றல் மிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் என கூறினார். ஆனால் இதற்கு முன்னர் வழக்கமாக அமைச்சர் மஸ்தான் அவர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் அவர்களுக்கும் என சுருக்கமாக கூறி அமைச்சர் பொன்முடி முடிப்பார். ஆனால் இன்றைய தினம் அவர்களை புகழ்ந்து பேசியது அங்க இருந்தவர் மத்தியில் நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.எஸ்.எஸ்.சிவசங்கர் கூறுகையில்,
தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப்பொறுப்பேற்ற நாளிலிருந்து போக்குவரத்துத்துறை சிறப்பான முறையில் செயல்பட்டிடும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். இதுமட்டுமல்லாமல், போக்குவரத்துத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களின் நலனை கருத்திற்கொண்டு, கடந்த ஆட்சிக்காலத்தில் வழங்கப்படாமல் இருந்த நிலுவைத் தொகையினை எல்லாம் வழங்கி வருகிறார்கள். முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்கள்தான், போக்குவரத்துறையினை ஏற்படுத்தினார்கள். அந்த வகையில், இந்தியாவிலேயே 21000க்கும் அதிமான பேருந்து இயங்கும் நிலை தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளது. இதுமட்டுமல்லாமல், போக்குவரத்துறை ஊழியர்கள் ஓய்வூ பெற்ற பின்னரும் ஓய்வூதியம் பெற்று பயனடைந்தும் வருகிறார்கள்.
டாக்டர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக 2006 முதல் 2011 வரையிலான கால கட்டத்தில் 15,000-க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் நியமிக்கப்பட்டனர். தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் போக்குவரத்துத்துறையினை சீரமைத்து, அனைத்து பணியாளர்களும் மாதம் முதல் தேதியன்றே ஊதியம் பெறுகின்ற நிலையினை உருவாக்கிக் கொடுத்துள்ளார்கள். மேலும், பொதுமக்கள் நலனை கருத்திற்கொண்டு பேருந்து கட்டணத்தினை உயர்த்தாமல் உள்ளார்கள். இதுமட்டுமல்லாமல், மகளிர் கட்டணமில்லா பேருந்து சேவை வசதியினையும் தொடர்ந்து வழங்கி வருகிறார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் போக்குவரத்துறைக்கென்று கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆண்டொன்றுக்கு ரூ.2,500/- கோடி நிதியுதவி வழங்கி வருகிறார்கள். இதன் காரணமாகவே, போக்குவரத்துத்துறை ஊழியர்கள் மாதந்தோறும் ஊதியம் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்பொழுது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், புதியதாக பேருந்துகள் வாங்குவதற்கான நிதிஒதுக்கீடு செய்துள்ளார்கள். மேலும், அரசு போக்குவரத்து கழகத்திற்கும், கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்திற்கும் புதிய ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் நியமிக்கவும் அரசாணை வழங்கியுள்ளார்கள்.
எனவே, போக்குவரத்துத்துறை சிறப்பாக செயல்படுவதற்கும், போக்குவரத்துத்துறை பணியாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக்கொள்ளவும் வழிவகை ஏற்படுத்திக்கொடுத்துள்ளார்கள் எனத் தெரிவித்தார்.