திருச்சி புத்தூரில் மாநகராட்சி கட்டும் வணிக வளாகப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியது
திருச்சி மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டு வந்த இந்த வணிகவளாக கட்டிடம் விரைவில் இறுதி கட்டத்தை எட்ட உள்ளது. இதன் மூலம் மாநகராட்சிக்கு வருவாய் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தஞ்சாவூர்: திருச்சி புத்தூர் வணிக வளாகப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருச்சி மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டு வந்த இந்த வணிகவளாக கட்டிடம் விரைவில் இறுதி கட்டத்தை எட்ட உள்ளது. இதன் மூலம் மாநகராட்சிக்கு வருவாய் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பல வணிக நிறுவனங்கள் ஒரே இடத்தில் இங்கு அமைவது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அலைச்சலையும், நேர விரயத்தையும் குறைக்கும் என்பதால்.

திருச்சி மாவட்டத்தில் மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டு வந்த புத்தூர் வணிக வளாகம், பல வருட தாமதத்திற்குப் பிறகு வரும் டிசம்பரில் நிறைவடையும் என்ற தகவல்கள் உலா வந்து கொண்டு இருக்கிறது. ரூ.20 கோடி செலவில் ஸ்மார்ட் சிட்டிஸ் மிஷன் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட இந்த வளாகம், நிதி மற்றும் ஆட்கள் பற்றாக்குறையால் பலமுறை காலக்கெடுவைத் தவறவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த வணிக வளாகம், திருச்சியில் உள்ள புத்தூரில், திருச்சி மாநகராட்சியால் கட்டப்பட்டு வருகிறது. தற்போது, இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த வணிக வளாகத்தின் கட்டுமானப் பணிகள் டிசம்பர் மாதத்திற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருச்சி மாநகராட்சி முக்கிய கட்டுமானப் பணிகளை முடித்துவிட்டது. புத்தூர் சந்தையை இடித்துவிட்டு, ஸ்மார்ட் சிட்டிஸ் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.20 கோடி செலவில் இந்த குளிரூட்டப்பட்ட வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது. நகரில் உள்ள மற்ற உள்கட்டமைப்பு திட்டங்களுடன் ஒப்பிடும்போது, இதன் பணிகள் மிகவும் மெதுவாக நடந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் 2019 இல் ஆரம்பப் பணிகள் தொடங்கினாலும், அக்டோபர் 2020 இல் தான் பணிகள் வேகம் எடுத்தன. பலமுறை காலக்கெடுவைத் தவறவிட்ட பிறகு, டிசம்பர் 2022 இல் நிறைவடைய வேண்டிய பணிகள் இழுத்துக்கொண்டே சென்றன. பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட நிதி நெருக்கடி, மூலப்பொருட்கள் மற்றும் ஆட்கள் பற்றாக்குறை ஆகியவை தாமதத்திற்கான காரணங்களாகக் கூறப்படுகின்றன. இந்த வணிக வளாக கட்டுமானப் பணிகள் தொடங்கி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகியும், இந்த வளாகம் இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை.
சமீபத்திய மாநகராட்சி மன்றக் கூட்டத்தில், சில கவுன்சிலர்கள் இந்த வசதியை பயன்பாட்டிற்குக் கொண்டுவர மேயரை வலியுறுத்தினர். "இந்த தாமதத்தால், கடைகளை வாடகைக்கு விடுவதன் மூலம் மாநகராட்சிக்குக் கிடைக்கக்கூடிய கணிசமான வருவாயை இழந்துவிட்டது," என்றும் கவுன்சிலர்கள் தரப்பில் தெரிவித்தனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், 10 சதவீத பணிகள் மட்டுமே மீதமுள்ளன. அவை பெரும்பாலும் சிறிய மற்றும் வெளிப்புறப் பணிகள்தான். அதுவும் விரைவில் முடிந்து விடும். பணிகள் முடிந்ததும், இந்த வளாகம் வணிக நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடப்படும். மாநகராட்சி டிசம்பருக்குள் பணிகளை முடிக்க எதிர்பார்க்கிறது என்று தெரிவித்தனர்.
1.06 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த வளாகம், தரைத்தளம் மற்றும் இரண்டு மாடிகளைக் கொண்டிருக்கும். அடித்தளம் வாகன நிறுத்துமிடத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வளாகம் முதலில் மூன்று மாடிகளுடன் வடிவமைக்கப்பட்டது. ஆனால் நிதி நெருக்கடி காரணமாக, மாநகராட்சி ஒரு மாடியைக் கைவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. பல வணிக நிறுவனங்கள் இதில் அமைய உள்ளதால் புத்தூர் பகுதி மக்கள் தங்களின் அலைச்சல் மற்றும் நேர விரயம் முழுமையாக குறைந்து விடும் என்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.





















