தொடர்ந்து 6வது இடம் பிடிப்பு... ஆனால் இம்முறை கூடுதல் பயணிகள்: திருச்சி விமான நிலையத்தின் சாதனை
திருச்சி விமான நிலையம் 6-வது இடம் பிடித்துள்ளது. எதற்காக என்று தெரியுங்களா?

திருச்சி சர்வதேச விமான நிலையம் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு செல்லும் விமான நிலையங்களில் 6-வது இடத்தை பிடித்து உள்ளது .
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்ளிட்ட அரபு நாடுகள் மற்றும் தாய்லாந்து, வியட்நாம் ஆகிய வெளிநாடுகளுக்கும், சென்னை, ஐதராபாத், மும்பை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கும் விமான சேவை உள்ளது. இதனால் எப்போதும் திருச்சி விமான நிலையம் பரபரப்பாகத்தான் காணப்படும்.
வாரத்திற்கு சுமார் 100 சர்வதேச விமானங்கள், சுமார் 70 உள்நாட்டு விமானங்களும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி சர்வதேச விமான நிலையம் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு செல்லும் விமான நிலையங்களில் 6-வது இடத்தை பிடித்து உள்ளது . ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் இதே 6-வது இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது. 2024-25 நிதியாண்டில், திருச்சி சர்வதேச விமான நிலையம் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு செல்லும் விமான நிலையங்களில் 6-வது இடத்தை தக்க வைத்துள்ளது. சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அளித்த தகவலின்படி, திருச்சி விமான நிலையம் 9.4 லட்சம் பயணிகளைக் கையாண்டுள்ளது.
இது கடந்த ஆண்டை விட அதிகம். 2023-24 ஆம் ஆண்டில் 9 லட்சம் பயணிகள் மட்டுமே பயணம் செய்தனர். தற்போது அதையும் தாண்டி 9.4 லட்சம் பயணிகளை கையாண்டுள்ளது. திருச்சியிலிருந்து தென்கிழக்கு ஆசியாவிற்கு செல்லும் விமானங்களின் எண்ணிக்கை மாறவில்லை. வாரத்திற்கு 62 விமான சேவைகள் உள்ளன.
ஆனால், விமானங்களில் அதிக இடங்கள் நிரம்பியதால் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது 4.5 சதவீதம் உயர்வு என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த நிதியாண்டில், திருச்சி விமான நிலையம் மூன்று தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு மட்டுமே விமான சேவைகளை வழங்கியது. அவை கோலாலம்பூர் (மலேசியா), சிங்கப்பூர் மற்றும் பாங்காக் (தாய்லாந்து). இதில் சிங்கப்பூர் மற்றும் கோலாலம்பூர் வழித்தடங்களில் 58 சதவீதம் மற்றும் 40 சதவீதம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். பாங்காக் வழித்தடத்தில் 2 சாவடீதட பயணிகள் மட்டுமே பயணம் செய்துள்ளனர்.
பாங்காக் விமான சேவை நிறுத்தப்பட்ட பிறகும், திருச்சி விமான நிலையம் கோலாலம்பூர் மற்றும் சிங்கப்பூருக்கு மட்டுமே சேவைகளை வழங்கியது. இருந்தும், ஹைதராபாத் மற்றும் கொச்சி போன்ற பெரிய விமான நிலையங்களை விட அதிக பயணிகளை கையாண்டுள்ளது. விமானங்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இன்னும் கூடுதல் மற்றும் பிரீமியம் விமான சேவைகளுக்கு தேவை உள்ளது. இந்திய விமான நிறுவனங்கள் இந்த துறையை கவனிக்காமல் விட்டுவிட்டன. இதனால் வெளிநாட்டு விமான நிறுவனங்களே திருச்சியை தென்கிழக்கு ஆசியாவுடன் இணைக்கின்றன என்று விபரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மலேசியா மற்றும் சிங்கப்பூரைத் தவிர, தாய்லாந்து மற்றும் வியட்நாம் போன்ற மற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் விமான சேவைகள் தேவைப்படுகின்றன. ஹோ சி மின் நகரத்திற்கும் திருச்சிக்கும் இடையே இருந்த விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். வியட்நாமைச் சேர்ந்த தொழில்கள் தமிழ்நாடு முழுவதும் தோல் அல்லாத காலணி மற்றும் வாகன உற்பத்தி துறைகளில் முதலீடு செய்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சாதனை குறித்து திருச்சி விமான நிலைய ஆலோசனை குழுவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ கூறியதாவது: கோலாலம்பூர் மற்றும் சிங்கப்பூரைத் தாண்டி, தென்கிழக்கு ஆசியாவை அடைய திருச்சி விமான நிலையத்தை ஒரு மையமாக மாற்ற வேண்டும். இந்திய விமான நிறுவனங்களை அணுகி புதிய விமான சேவைகளைத் தொடங்கவும், திருச்சியில் அதிகரித்து வரும் தேவையை பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். திருச்சி விமான நிலையம் பயணிகளை கையாள்வதில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது.





















