(Source: ECI/ABP News/ABP Majha)
திருச்சிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு.. ஒரு தொகுப்பு..
சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் இருந்து கடந்த சில மாதங்களாக திருச்சிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
தமிழநாட்டில் கொரோனா பெருந்தொற்று மற்றும் அதன் தொடர்ச்சியான ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகள் தமிழக சுற்றுலா தலங்கள் அனைத்தும் களை இழந்தன. குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வரத்து நின்று போனதால் இங்குள்ள டிராவல்ஸ் ஏஜெண்டுகள் மற்றும் ஓட்டல் தொழிலாளர்கள் வேலை இழந்தனர். இந்த நிலையில் நடப்பாண்டில் கொரோனா கட்டுக்குள் இருப்பதால் வெளிநாட்டினரின் வருகை தொடங்கியுள்ளது. தற்சமயம் சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்த நாட்டைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் இந்தியாவுக்கு வரத்தொடங்கி உள்ளனர். அவர்களின் வசதிக்காக திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மற்றும் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவுக்கு விமானங்கள் நேரடியாக இயக்கப்படுகின்றன. இதனால் அந்நாட்டைச் சேர்ந்தவர்கள் திருச்சி வந்து இறங்கி பின்னர் தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களில் உள்ள சுற்றுலா தலங்களுக்கும் செல்கின்றனர். இதன் எதிரொலியாக திருச்சி மாநகரில் அனைத்து லாட்ஜூகள் மற்றும் தங்கும் விடுதிகளில் சிங்கப்பூர், மலேசியா வாசிகள் ஒன்று இரண்டு பேராவது தங்கி இருக்கின்றனர். திருச்சி சிங்காரத்தோப்பு, என்.எஸ்.பி. ரோடு, மேலரண் சாலை, வர்த்தக நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதியில் இருக்கும் லாட்ஜூகள் அனைத்தும் வெளிநாட்டினரால் ஹவுஸ் நிரம்பி இருக்கின்றன.
திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் மேலாளர் ஒருவர் கூறும்போது, எங்கள் ஓட்டலில் கடந்த ஒரு மாதமாக சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அதிகம் தங்கி செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ரூ.1 லட்சம், 2 லட்சம் பேக்கேஜ் அடிப்படையில் பணம் கட்டி வருகின்றனர். திருச்சி விமான நிலையம் வந்து இறங்கியதும் நேராக மார்க்கெட் பகுதிகளில் உள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்குகின்றனர். பின்னர் அதிகாலையில் எழுந்து வாடகை வேனில் தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் உள்ள புண்ணிய ஸ்தலங்கள் மற்றும் சுற்றுலாத்தலங்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர். அதன் பின்னர் நாடு திரும்புவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பாக மீண்டும் திருச்சி லாட்ஜில் தங்குகின்றனர். மேலும் அப்போது ஜவுளி, மளிகை பொருட்களை வாங்கி பேக்கிங் செய்து எடுத்துச் செல்கின்றனர். வர மிளகாய், ெகாத்தமல்லி போன்றவற்றை வாங்கி லாட்ஜ் ரூம் பாய்கள் மூலம் அரைத்து பொடியாக்கி பேக்கிங் செய்து கொண்டு செல்கிறார்கள். நம்முடைய உணவு முறை அவர்களுக்கு மிகவும் பிடித்துள்ளதால் அதனை தற்போது வசிக்கும் நாட்டிலும் தொடர அவர்கள் முடிவு செய்துள்ளனர். அதேபோல் வீடுகளில் விசேஷம் வைத்திருக்கும் சுற்றுலா பயணிகள் பலர் இங்கேயே அழைப்பிதழ் கூட அச்சடித்து எடுத்து செல்கின்றனர். இதற்கு வசதியாக பெரும்பாலானவர்கள் மார்க்கெட் பகுதியில் உள்ள லாட்ஜ்களை நாடுகின்றனர்.
சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் இருந்து வருபவர்களில் சிலர் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டிருக்கிறார்கள். பிழைப்புக்காக வெளிநாடுகளுக்கு சென்றிருந்தாலும் அவர்கள் தங்கள் குலதெய்வ கோவில்களுக்கு வந்து மறக்காமல் நேர்த்திக்கடன் செலுத்தி மொட்டை போட்டு வருகின்றனர். திருச்சி மாநகரில் உள்ள பெரும்பாலான பெரிய ஓட்டல்கள் மற்றும் ரெசிடென்சிகள் வெளிநாடுகளை சேர்ந்த வாடிக்கையாளர்களை அதிகம் நம்பி இருக்கிறார்கள். 2 ஆண்டுகள் கடும் பின்னடைவை சந்தித்த நிலையில் இப்போது சுற்றுலா தொழில் புத்துயிர் பெற்றுள்ளது. வெளிநாட்டினரின் வருகையால் சுற்றுலா மற்றும் அதனை சார்ந்த தொழிலாளர்களின் கைகளிலும் பணப்புழக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.