பொது இடங்களில் மாஸ்க் அணியுங்கள், சமூக இடைவெளியை பின்பற்றுங்கள் - புதுக்கோட்டை கலெக்டர் கவிதா ராமு
பொதுமக்கள் அனைவரும் பொது இடங்களில் சமூக இடைவெளியினை பின்பற்றவும், கைகளை சோப்புப் போட்டு கழுவவும், முகக்கவசம் அணிவதன் மூலம் கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம் - கலெக்டர் கவிதா ராமு
கடந்த 2020 ஆம் ஆண்டு சீனாவில் தொடங்கி பல்வேறு நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் பரவியது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக லட்சக்கணக்கான மக்கள் பல்வேறு நாடுகளிலும் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் தடுப்பூசி மூலம் சிறிது சிறிதாக சூழல் கட்டுக்குள் வந்தன. அதுமட்டுமல்லாமல் உலக நாடுகளில் பலவிதமான மாற்றங்கள் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டது. பொருளாதாரம், வேலைவாய்ப்பு, வாழ்க்கை முறை என அனைத்து வகையிலும் ஏராளமான மாறுதல் ஏற்பட்டன. கொரோனா வைரஸ் இரண்டாம் அலையும் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், 2021ம் ஆண்டு தீவிரமாக பரவிய கொரோனா மெல்ல மெல்ல குறைந்து கட்டுக்குள் உள்ளது. இந்த நிலையில் சீனாவில் ஓமிக்ரானின் புதிய திரிபான பிஎப் 7 வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் ஹாங்காங், அமெரிக்கா, பிரேசில், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த புதிய உருமாற்ற வைரஸ் பெரும்பாலும் மேல் சுவாசக் குழாயை பாதிக்கிறது. காய்ச்சல், இருமல், தொண்டை புண், மூக்கு ஒழுகுதல் ஆகியவை அறிகுறிகளாக கொண்டுள்ளன. இந்த வைரஸ் குஜராத் மாநிலத்தில் 3 பேருக்கும், ஒடிஸா மாநிலத்தில் ஒருவருக்கும் பரவியுள்ளது. இதனால் மற்ற மாநிலங்களில் பிஎப் 7 வேரியண்ட் பரவாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த மாநில அரசுகள் எடுத்து வருகின்றது.
மேலும் வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு வேளை வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளில் யாருக்கேனும் கொரோனா அறிகுறிகள் இருந்தால், அவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரத்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திலேயே இருக்கிறது. கடந்த 24 மணி நேர நிலவரப்படி தமிழ்நாட்டில் மொத்தமாக 6 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதில் சென்னையில் மட்டும் 2 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், மரபணு மாற்ற கொரோனா வைரஸை கண்டறிய தேவையான கட்டமைப்புகள் தமிழகத்தில் இருப்பதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து தமிழக அரசு உத்தரவின்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கோவிட் முன்னெச்சரிக்கை ஒத்திகை நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது கோவிட் சிகிச்சைக்குத் தேவையான படுக்கை வசதிகள், மருந்துகள், பரிசோதனை வசதிகள் மற்றும் ஆக்ஸிஜன் போதுமான அளவில் இருப்பு வைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து அவர் மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் கேட்டறிந்தார். மேலும் கோவிட் பாதிப்பு அதிகம் தென்படும் நாடுகளிலிருந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகைத்தரும் பயணிகள் அனைவருக்கும் விமான நிலையத்தில் கோவிட் தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதை உறுதி செய்யவும், பரிசோதனைகள் முடிவுகள் வரும் வரை அவர்களை தொடர்ந்து கண்காணித்திடவும் கலெக்டர் கவிதா ராமு தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், வட்டார அரசு மருத்துவமனைகளிலும், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் கொரோனா சிகிச்சை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், தேவையான இடங்களில் பரிசோதனைகளை மேற்கொள்ளவும், பரிசோதனை முடிவுகளை விரைவில் வெளியிடவும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்குத் தேவையான சிகிச்சைகள் அளிக்கவும், அவர்களுடன் தொடர்புடைய நபர்களுக்கும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொண்டு தொடர்ந்து கண்காணித்திடுவதற்கான வழிமுறைகள் குறித்தும் மருத்துவ அலுவலர்களுடன் கலெக்டர் கவிதா ராமு ஆலோசனை நடத்தி மேற்கொண்டார்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )