’திருச்சியை தெறிக்க விட வருகிறது 2 உயர்மட்ட பாலங்கள்’- போக்குவரத்து நெரிசலை குறைக்க திட்டம்
’’முதற்கட்டமாக திருச்சி சிந்தாமணியிலிருந்து சத்திரம் பேருந்து நிலையம்-மரக்கடை வழியாக ஜங்ஷன் வரை புதிய உயர்மட்ட பாலம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க 2.65 கோடி ஒதுக்கீடு’’
திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் முக்கிய இடங்களில் உயர்மட்ட பாலம் அமைக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவித்திருந்தார். அதை தொடர்ந்து திருச்சி தலைமை தபால் நிலையத்தில் இருந்து ஒத்தக்கடை வழியாக எம்ஜிஆர் சிலை வரையும், சிந்தாமணி ஓடத்துறை காவேரி பாலத்திலிருந்து கலைஞர் அறிவாலயம் வழியாக மல்லாச்சிப்புரம் வரையிலும் 2 உயர்மட்ட பாலம் கட்டப்படும் என்று சட்டசபையில் நெடுஞ்சாலை மானிய கோரிக்கையில் அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார். இதை தொடர்ந்து திருச்சி சிந்தாமணியிலிருந்து சத்திரம் பேருந்து நிலையம்-மரக்கடை வழியாக ஜங்ஷன் வரை புதிய உயர்மட்ட பாலம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ரூபாய் 2.65 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருச்சி சிந்தாமணி அறிஞர் அண்ணா சிலையில் இருந்து மரக்கடை வழியாக ரயில்வே ஜங்ஷன் வரை உயர்மட்ட பாலம் அமைக்க நெடுஞ்சாலை துறை திட்டமிட்டு அதற்கு ரூபாய் 2.65 கோடியில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் நிறுவனத்தை தேர்வு செய்வதற்கு மாநில நெடுஞ்சாலைத்துறை டெண்டர் கோரியுள்ளது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது,அவர்கள் கூறியது.. திருச்சி மாநகரின் முக்கிய வழித்தடம் பகுதிகளில் ஒன்றான சிந்தாமணி அண்ணாதுரை சிலையில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம், தெப்பகுளம் மேலப்புலிவார்டு சாலை மரக்கடை, பாலக்கரை, மேலப்புதூர், தலைமை தபால் நிலையம் வழியாக ரயில்வே ஜங்ஷன் வரை 6.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது.
இப்பாலத்தில் நாள்தோறும் சென்று வரக்கூடிய உத்தேச வாகனங்களின் எண்ணிக்கை, அமைக்கப்பட வேண்டிய தூண்கள், மற்றும் காரிடர்கள் எண்ணிக்கை, முக்கிய சந்திப்புகளில் இணைப்பு சாலைகள், பாலம் கட்டுவதற்கு தேவையான மொத்த நிலம் அதில் கையகப்படுத்த வேண்டிய நிலத்தின் அளவு, திட்ட பணிகளுக்கான செலவு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து விரிவான திட்ட அறிக்கை தயார் செய்வதற்கான நிறுவனத்தை தேர்வு செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது.
இந்த உயர்மட்ட பாலத்தின் சத்திரம் பேருந்து நிலையம், தெப்பக்குளம் ஆகிய இடங்களில் இரண்டு சுரங்கப் பாதையும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. முடிந்தவரை இப்போதுள்ள சாலையை ஒட்டியே இந்த உயர்மட்ட பாலம் அமையும், குறைந்த அளவிலான நிலம் மட்டுமே கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் புதிதாக வடிவமைக்கப்படும் இப்பாலம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஓடத்துறை மல்லாச்சிப்புரம் பாலத்தை, அண்ணா சிலை பகுதியிலும், தலைமை தபால் நிலையம், எம்ஜிஆர் சிலை வரையிலான பாலத்தை, தலைமை தபால் நிலையம் பகுதிகளிலும், இணைக்கும் வகையில் வடிவமைக்கப்படும். தென்னூர் மேம்பாலம், பாலக்கரை மேம்பாலத்தையும், இப்பாலத்துடன் இணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.இதன் மூலம் திருச்சி மாநகரில் பெரும்பாலான பகுதிகளை தரைவழியாக மட்டுமின்றி பாலங்கள் வழியாகவும் கடந்து செல்ல முடியும் இப்பணிகளுக்கு ரூபாய் 650 கோடி வரை செலவாகும் வாய்ப்பு உள்ளது. திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்ட பிறகு முழுமையான விபரம் தெரியும் என்றனர்.பல ஆண்டுகளுக்குப்பின் திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புதிய பாலங்கள் கட்டுவதற்கான பூர்வாங்க பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.