2 கோடி ஆண்டுகள் பழமையான கல் மரம் - பெரம்பலூர் கல்மரப்பூங்கா ஒரு விசிட்
’’சுமாா் 12 கோடி ஆண்டுக்கு முன் சாத்தனூா் கிராமத்துக்கு மேற்கே 8 முதல் 10 கி.மீ. தொலைவில்தான் கடல் மட்டம் இருந்ததாம்’’
பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டத்தில் சாத்தனூா் கிராமம் உள்ளது. திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையிலிருந்து சுமாா் 16 கி.மீ. தொலைவில் இந்தியப் புவியியல் துறையால் பாதுகாக்கப்படும் கல்மரப் பூங்கா நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. இங்கு சுமாா் 12 கோடி ஆண்டுக்கு முன் சாத்தனூா் கிராமத்துக்கு மேற்கே 8 முதல் 10 கி.மீ. தொலைவில்தான் கடல் மட்டம் இருந்ததாம். இது புவியியலில் கிரிடேஷஸ் காலம் என அழைக்கப்படுகிறது. அக்காலத்தில், இப்பகுதியில் கடல் பிராணிகள் அதிகம் வாழ்ந்ததாகவும், உயிரிழந்த உயிரினங்களின் உடல்கள் கடல் அலைகளாலும், பிற ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்காலும் மணல், களிமண் இவற்றுடன் அடித்துவரப்பட்டு, கடலோரக் கிராமங்கள், கரையோர மரங்கள் அதனுடன் மூடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் உருவாகி மிக நீண்ட உயரம் கொண்ட இக்கல்மரம், 10 கோடி ஆண்டுக்கு முன் பாறையிடுக்குகளில் சிக்கி அமிழ்ந்து போயிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இம்மரம் கண்டறியப்பட்டபோது 18 மீ. நீளம் கொண்டதாக இருந்தது. தற்போது 12 மீட்டா் நீளமுடையதாக குறுகி சிதிலமடைந்து வருகிறது. ஆங்கியோஸ்பிரம்ஸ் எனப்படும் பூக்காத தாவரயினம், பூக்கள் பூக்காத காலத்தில் தோன்றிய கோனிபரஸ் வகைச் செடிகளிலிருந்து பரிணாம மாற்றம் அடைந்தது. இங்கு காணப்படும் நீண்ட மரம், கோனிபரஸ் வகையைச் சோ்ந்தது என்று கூறுகின்றனர் தொல்பொருள் ஆய்வாளர்கள் மற்றும் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள். சாத்தனூருக்கு அருகில் வரகூா், அணைப்பாடி, ஆகிய கிராமங்களின் அருகே நீரோடைப் பகுதிகளிலும் சில மீட்டா் நீளமுள்ள கல் மரங்கள் காணப்படுகின்றன. இந்த கல்மரத்தைச் சுற்றி மாவட்ட நிா்வாகம் கம்பி வேலிகள் அமைத்து புவியியல் பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறது.
இந்த அரிய வகை கல்மர படிவத்தை காண வரும் வரலாற்று ஆய்வாளா்கள், புவியியல் ஆய்வாளா்கள் மற்றும் வெளிநாட்டு ஆராய்ச்சிப் படிப்பு மாணவா்கள், சுற்றுலாப் பயணிகள் என எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து கொண்டே வருகிறது. ஆனால், இங்கு வருவதற்குத் தேவையான சாலை, பேருந்து உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் கிடையாது.இக் கல்மரங்களைப் போன்றே திண்டிவனத்துக்கு அருகே திருவக்கரைப் பகுதியிலும் கல்மரங்கள் காணப்படுகின்றன. இதுபோன்ற கல்மரங்கள் பல இடங்களில் கிடைத்தாலும், 12 மீட்டா் அடி நீளம் கொண்ட மரம் என்பது இதன் சிறப்பு.
மேலும் இவற்றை மையமாகக் கொண்டு சாத்தனூரில் உள்ள தேசிய புதைபடிவ மர பூங்காவில் ஒரு அருங்காட்சியகம் மற்றும் குழந்தைகள் பூங்கா உள்ளிட்ட கல்வி மையம் அமைக்கப்பட்டது. சாத்தனூர் கல்லுருவாகிய அடிமர கல்வி மையம் என்று அழைக்கப்படும் இந்த மையம் பார்வையாளர்களிடையே தளம் மற்றும் பிராந்தியத்தில் உள்ள புதைபடிவ மரத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும். இத்தகைய சிறப்பு வாய்ந்த கல்மரப் பூங்கா அருகே கட்டப்பட்டு திறக்கப்படாத நிலையில் உள்ள ஓய்வறை மற்றும் அருங்காட்சியகம் திறக்காமல் இருப்பது அங்கே வரும் மக்களுக்கும் பூங்காவை பராமரித்து வரும் நிர்வாகிகளுக்கும் ஒரு பெரிய குறையாக உள்ளது. எனவே அதனை திறக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.