(Source: ECI/ABP News/ABP Majha)
மர்மமாக உயிரிழந்த நெல்லை காங்கிரஸ் தலைவர் உடல் நல்லடக்கம் - தலைவர்கள், தொண்டர்கள் அஞ்சலி
மர்மமான முறையில் உயிரிழந்த நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமாரின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் காணாமல் போனதாக கூறப்பட்ட நிலையில் நேற்று அவர் மர்மமான முறையில் அவரது தோட்டத்தில் எரிந்த நிலையில் உயிரிழந்து கிடந்தார். பாதி உடல் எரிந்த நிலையில் ஜெயக்குமாரின் உடல் மீட்கப்பட்டது. தனது தந்தையை காணவில்லை என ஜெயக்குமாரின் மகன் கருத்தையா சாப்ரின் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், ஜெயகுமார் சடலமாக மீட்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் தொடர்பாக ஏழு தனிப்படைகள் அமைத்து மாவட்ட காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கு இடையில் ஜெயக்குமார் எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் அவர் நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன், முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் தங்கபாலு உட்பட ஆறு பேர் பெயரை குறிப்பிட்டு தனக்கு அவர்களிடம் இருந்து கொலை மிரட்டல் வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
தலைவர்கள் அஞ்சலி:
எனவே இந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் தனது மருமகன் மற்றும் குடும்பத்தினருக்கு எழுதிய மற்றும் 2 கடிதம் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் ஜெயக்குமார் உடல் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக அங்கு வந்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ்குமார், கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த் ஆகியோர் அவரது உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செல்வப் பெருந்தகை ஜெயக்குமாரின் உயிரிழப்பிற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் எந்த கட்சியின் பிரமுகராக இருந்தாலும் தொழிலதிபராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வரிடமும் காவல்துறையினரிடமும் வலியுறுத்தி உள்ளதாக தெரிவித்தார். மேலும் காங்கிரஸ் கட்சி சார்பில் கமிட்டி அமைத்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் விசாரணை அறிக்கையை தேசிய தலைமையிடம் வழங்குவோம் என தெரிவித்தார்.
உடல் நல்லடக்கம்:
தொடர்ந்து ஜெயக்குமாரின் உடலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான கரைசுத்துபுதூர் கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது இல்லத்தில் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கட்சி நிர்வாகிகள் என பலரும் அஞ்சலி செலுத்திய பிறகு அருகிலுள்ள சிஎஸ்ஐ கிறிஸ்தவ தேவாலயத்தில் அடக்க ஆராதனை நடைபெற்றது. இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ்குமார், கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த், நெல்லை எம்பி ஞான திரவியம், சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை உட்பட ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். அடக்க ஆராதனை நிறைவு பெற்ற பின்னர் சிஎஸ்ஐ கல்லறைத் தோட்டத்தில் ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.