தனியார் பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை - அமைச்சர் ராஜகண்ணப்பன் எச்சரிக்கை
"பொதுமக்கள் தனியார் பேருந்து பயணத்தை தவிர்த்து பண்டிகை காலங்களில் அரசு பேருந்துகளை பயன்படுத்த வேண்டும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவுறுத்தல்"
15 வயது முதல் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாமினை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்தொடர்ச்சியாக நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் போக்குவரத்துதுறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு தடுப்பூசி போடும் முகமினை தொடங்கி வைத்தார், இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்டோருக்கான தடுப்பூசி செலுத்தும் முகாம் நெல்லை மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இங்கு 309 பள்ளிகளில் 58 ஆயிரத்து 338 நபர்கள் தடுப்பூசி செலுத்த தகுதி உடையவர்களாக கண்டறியபட்டு உள்ளனர். இன்று 51 பள்ளிகளில் 12,434 பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது, இதற்காக 51 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு குழுவில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் என 3 பேர் உள்ளனர். நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் 1000 ஆக்சிஜன் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. 2500 பேர் வரை சிகிச்சை பெற வசதிகள் உள்ளன. 16 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர், நெல்லை மாவட்டத்தில் தொற்று இதுவரை கண்டறியபடவில்லை.
தமிழகத்தில் 17,000 பேருந்துகள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்பட உள்ளது. கொரோனா கட்டுபாட்டை பின்பற்றி அரசு பேருந்துகள் பொங்கல் பண்டிகைக்காக இயக்கப்படும். தீபாவளி பண்டிகைக்கு அதிகபணம் வசூல் செய்ததாக 7 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனியார் பேருந்துகள் அதிகபணம் வாங்குவதை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பொங்கள் திருநாளுக்கு தேவைக்கு அதிகமாக பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனியார் பேருந்து பயணத்தை தவிர்த்து பண்டிகைகாலத்தில் அரசு பேருந்துகளை பயன்படுத்த வேண்டும்.
தனியார் பேருந்துகளில் அதிக தொகைவசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான தொலைபேசி எண்களும் கொடுக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தார், மேலும் அகில இந்திய பெர்மீட் பெறுவது தொடர்பாக பரிசீலனை செய்து நடவடிக்கைகள் எடுக்கப்படும். மாணவர்கள் பேருந்துகளில் நல்லமுறையில் பயணம் செய்ய போக்குவரத்து துறை அதிகாரிகள், காவல்துறையினர் உள்ளிட்டவர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். பேருந்துகளில் பயணம் செய்பவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், நின்று கொண்டு பயணம் செய்யக் கூடாது என பல்வேறு அறிவுரைகளும் வழங்கப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் ஆவுடையப்பன், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எல்.எஸ்.லட்சுமணன், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, பாளையங்கோட்டை ஒன்றிய பெருந்தலைவர் தங்கப்பாண்டியன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )