ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கிடைத்த நெற்றிப்பட்டம் தூய தங்கம் - ஆய்வில் தகவல்
ஆய்வில் கிடைத்த உலோகப் பொருட்களிலும் டின் எனப்படும் வெள்ளீயம் உலோகப் பொருள் 6 முதல் 50 சதவீதம் வரை உள்ளது. டின் எனப்படும் உலோகம் தற்போது கண்ணாடிகள் செய்ய பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ளது ஆதிச்சநல்லூர். உலக நாகரிகம் தோன்றிய முதல் இடம் ஆதிச்சந்நல்லூர்தான் எனப் பல அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இங்கு முதன்முதலாக கடந்த 1876-ல் அகழாய்வு நடந்துள்ளது. கடந்த 2004-ம் ஆண்டு மத்திய தொல்லியல்துறை சார்பில் இங்கு நடத்தப்பட்ட அகழாய்வில் 169 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த அகழாய்வின் முக்கியத்துவம் குறித்து நீதிமன்றத்தில் விளக்கப்பட்ட பிறகே, அகழாய்வுப் பகுதியாக அடையாளம் காணப்பட்ட பகுதியைச் சுற்றிலும் கம்பிவேலி போடப்பட்டது.
அகழாய்வாளர்கள், தொல்லியல் ஆர்வலர்களின் மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு இதன் மாதிரி ஆய்வறிக்கையை மட்டும் சமர்ப்பித்தது மத்திய தொல்லியல்துறை. தமிழகத் தொல்லியல்துறையின் சார்பில் கடந்த 2020-ம் ஆண்டில் அகழாய்வுப் பணிகள் நடந்து முடிந்துள்ளன. இதற்கிடையில், கடந்த 2019-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட மத்திய பட்ஜெட்டில் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.
இதனையடுத்து அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் மூன்று இடங்களை தேர்வு செய்து அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. இந்த அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்படும் பொருட்கள் அனைத்தும் இங்கு அமைய உள்ள உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. இதற்கிடையில் அகழாய்வு பணியில் இதுவரை 85க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், இரும்பு பொருட்கள், தங்க நெற்றிப்பட்டயம், சங்க கால வாழ்விடப்பகுதிகள் என ஏராளமான பொருட்கள் கிடைத்து வருகின்றன.
இந்த நிலையில் அகழாய்வு பணியில் கிடைத்த உலோகப்பொருட்களை ஆய்வு செய்வதற்காக பெங்களூரில் உள்ள நியாஸ் எனப்படும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ஸ் ஸ்டடிஸ் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த உலோக தொல்லியல் ஆய்வாளரும் தொல்லியல் துறையில் பத்மஸ்ரீ விருது பெற்ற தொல்லியல் ஆய்வாளர் சாரதா ஸ்ரீனிவாசன் தலைமையில் ஆய்வுக்குழுவினர் உலோகப்பொருட்களை ஆய்வு மேற்கொண்டனர்.
இதற்காக எக்ஸ்ஆர்எப் எனப்படும் உலோகப்பொருட்களை பிரித்துப்பார்க்கும் கதிரியக்க கருவி மூலம் உலோக பொருட்களை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் கடந்த மாதம் அகழாய்வு பணியில் கிடைத்த தங்க நெற்றிப்பட்டயம் மிக தூய தங்கம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆய்வில் கிடைத்த அனைத்து உலோகப்பொருட்களிலும் டின் எனப்படும் வெள்ளீயம் உலோகப் பொருள் 6 முதல் 50 சதவீதம் வரை உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஆய்வாளர் எத்திஸ்குமார், ஆய்வு மாணவர் அருண் ஆகியோர் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் குறித்து விளக்கமளித்தனர். இந்த டின் எனப்படும் உலோகம் தற்போது கண்ணாடிகள் செய்ய பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்