‘முதலீட்டாளர்களை பணம் கேட்டு மிரட்டினரா விளாத்திக்குளம் திமுக எம்.எல்.ஏ?’ விசாரணைக்கு உத்தரவிட்ட முதல்வர் ஸ்டாலின்..!
’ஆட்சிக்கு எந்த கெட்ட பெயரும் வந்துவிடக்கூடாது என ஒவ்வொரு அடியாக கவனமாக பார்த்து எடுத்து வைத்துக்கொண்டிருக்கும்போது இது மாதிரி செயல்படுபவர்களை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது’
கோவில்பட்டி அருகே சோலார் அமைக்குபணிகளை நிறுத்தக் கோரி திமுக எம்.எல்.ஏ தலைமையில் விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தியதுதான் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் சர்ச்சையாகியிருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள புங்கவர்நத்தம் பகுதிகளில் அரசின் விதிமுறைகளை மீறி தனியார் நிறுவனத்தினால் சோலார் அமைக்கப்பட்டு வருவதால் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, பணிகளை உடனே நிறுத்த வலியுறுத்தி விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தலைமையில் 200க்கும் மேற்பட்டவர்கள் சோலார் அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். உண்மையில் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் விவசாய நிலங்கள் பறிபோய்விடும் என்ற ரீதியில் இந்த போராட்டத்தை முன்னெடுக்கவில்லை என்று உண்மையை உடைத்து சொல்கின்றனர் தூத்துக்குடி மாவட்ட உடன்பிறப்புகள். பின்னர் எதற்காக இந்த போராட்டத்தை அவர் நடத்தினார் என அவர்களிடமே கேட்டோம்.
வேறு எதற்கு கோடி கணக்கில் பணம் பிடுங்கத்தான். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள புங்கவர்நத்தம், ஆத்திக்கிணறு, முள்ளுப்பட்டி, சோழபுரம், ஈராட்சி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் ஜிஆர்டி என்ற தனியார் நிறுவனம் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் சோலார் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஜி.ஆர்.டி நிறுவனம் சுமார் 400 ஏக்கர் நிலங்களை போலியாக பட்டா மூலமாக கையகப்படுத்திள்ளதாகவும், விவசாய நிலங்களை கையாகப்படுத்தி சோலார் அமைத்து வருவதாகவும், அரசிடம் எவ்வித முன் அனுமதி பெறமால் திட்ட பணிகளை தொடங்கியுள்ளதாகவும், நீர் வரத்து ஓடைகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் இதனால் சுமார் 20 ஆயிரம் பரப்பளவில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என சொல்லி அப்பகுதி விவசாயிகளை தூண்டிவிட்டு, சோலார் அமைக்கும் பணிகளை நிறுத்த முயன்றுள்ளார் மார்க்கண்டேயன்.
ஆளுங்கட்சி எம்.எல்.ஏ மார்க்கண்டேயனின் போராட்டத்தால் பதற்றமடைந்த சோலார் நிறுவனம் தனது பணிகளை தற்காலிகமாக நிறுத்தியிருக்கிறது. பணிகளை நிறுத்திய கையோடு மார்க்கண்டேயனின் அடாவடி நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கே நேரடியாக தகவல் தெரிவித்துள்ளது அந்த நிறுவனம்.
முறையாக அனுமதி பெற்று சோலார் பேனல்கள் அமைக்கும் பணிகளில் எங்கள் நிறுவனத்தின் ஊழியர்கள் ஈடுபட்டபோது, அடாவடித்தனமாக அநாகரிகமான வார்த்தைகளை பேசி, பணிகளை செய்யவிடாமல் தடுக்கிறார். அவரது நோக்கம் விவசாய நிலங்களை காப்பதில்லை, எங்களிடமிருந்து பணம் பெறுவதே என சொல்லியுள்ளனர்.
இதனால் கண் சிவந்த முதல்வர், ஆட்சிக்கு எந்த கெட்ட பெயரும் வந்துவிடக்கூடாது என ஒவ்வொரு அடியாக கவனமாக பார்த்து எடுத்து வைத்துக்கொண்டிருக்கும்போது இது மாதிரி செயல்பாடுகளில் ஈடுபடுபவர்களை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது என சொல்லியிருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இந்த விவகாரத்தை கேள்விப்பட்ட கையோடு, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை அழைத்து உடனடியாக இதுகுறித்து விசாரித்து தனக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறார் என்றனர்.
தூத்துக்குடி உடன்பிறப்புகளோ, அதிமுகவில் இருந்து வந்த மார்க்கண்டேயனால் கட்சிக்குதான் கெட்டப்பெயர் என புலம்புகின்றனர். அரசியல்வாதி என்று சொல்லிக்கொண்டு அடாவடித்தனம் செய்வதுதான் அவரது தொழிலே என்கின்றனர். விளாத்திகுளம் தொகுதிக்கு உட்பட்ட பொம்மையா புரம் ,ஆத்திக்கிணறு,புங்கவர்நத்தம் போன்ற சில கிராமங்களை இணைத்து GRT சோலார் நிறுவனம் அனுமதி பெற்று பணிகளை தொடங்கியிருந்தபோது, அவர்களிடம் இங்கு வேலை நடக்க வேண்டுமென்றால் 9 கோடி ரூபாய் பணம் தர வேண்டும் என கடுமையாக பேரம் பேசியுள்ளாராம். ஆனால், நிறுவனத்தினரோ, நாங்கள் முறையாக அனுமதி வாங்கியிருக்கிறோம் மாவட்ட அமைச்சருக்கு செய்ய வேண்டியதை செய்திருக்கிறோம். அப்படி இருக்கையில் இதற்கு மேல் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என கையை விரித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த விளாத்திக்குளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன், பணி நடைபெறும் இடத்திற்கு நேராக சென்று, கெட்ட வார்த்தைகளை பேசி அடவாடித்தனத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்றனர். ஏற்கனவே இவர் அதிமுகவில் புதூர் யூனியன் தலைவராகவும், எம்.எல்.ஏ-வாகவும் இருந்தபோதே மார்க்கண்டேயன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தன. குறிப்பாக, விளாத்திகுளம் தொகுதிக்கு உட்பட்ட வைப்பாறில் மணல் கொள்ளை அடித்து கோடி கணக்கில் விற்று லாபம் அடைந்தார் என மக்களுக்கு தெரிந்து அவர் மீது கோவமாக அப்பகுதியினர் இருந்த நிலையில், அதிமுக மீண்டும் எம்.எல்.ஏ சீட் இவருக்கு கொடுக்கவில்லை. இதனால், சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன் திமுகவில் ஐக்கியமானார்.
இவர் திமுகவில் இணைய முக்கிய காரணம் தற்போதைய அமைச்சரும் மாவட்ட செயலாளருமான ஜீதா ஜீவன் என்கின்றனர். திமுக சேர்ந்த 5 மாதங்களில் எம்.எல்.ஏ சீட் வாங்கி வெற்றி பெற்றதால், திமுகவில் சேர்வதற்காக விட்ட பணத்தை இப்போது எப்படியாவது பிடித்துவிடவேண்டும் என்று கங்கணம் கட்டி அலைகிறார், இது மட்டுமின்றி, இரண்டு நாட்களுக்கு முன், விளாத்திகுளம் தொகுதிக்கு உட்பட்ட மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான 120 ஏக்கர் நிலத்தை தனக்கும், தான் சொல்லுகின்ற பல பேருக்கும் பட்டா மாற்றிக் கொடுக்க வேண்டும் என சொல்லி கோயில் EO வையும் மிரட்டியிருக்கிறார் என்கிறனர்.
இப்படி ஆளுங்கட்சி எம்.எல்.ஏ என்ற போர்வையில், கடந்த மாதம் ராம்கோ நிறுவனத்தில் 5 கோடி ரூபாய் பணம் எனக்கு உடனே வேண்டும் இல்லை என்றால் எனது தொகுதிக்கு உட்பட்ட புதூர் யூனியனில் உங்கள் தொழிற்சாலை க்கு தேவையான சுண்ணாம்பு கல்லை எடுக்க முடியாமல் மக்களை திரட்டி போராட்டம் நடந்துவேன் என மேலாளரிடம் மிரட்டி மிகப் பெரிய தொகை வாங்கி உள்ளார் என தலையில் அடித்துக்கொள்கின்றனர் உடன்பிறப்புகள்.
இப்படி மிரட்டி பணம் பிடுங்குவதையே தொழிலாக வைத்துள்ளவருக்கு சீட் வாங்கிக் கொடுத்து, ஆதரவு கொடுத்துவரும் அமைச்சர் கீதா ஜீவன் மீது தலைமைக்கு அடுக்கடுக்கான புகார்கள் பறந்துள்ளதாக சொல்கின்றனர் . முதல்வரின் உத்தரவின்பேரில் அமைச்சர் செந்தில்பாலாஜி, மார்க்கண்டேயனிடம் விசாரணை நடத்தியிருக்கும் நிலையில், விரைவில் அவர் மீது நடவடிக்கை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.