ஆயன் குளம் அதிசய கிணறு... விலகிய மர்மம்.. விரைவில் அறிக்கையை சமர்பிக்கவுள்ள ஐஐடி குழுவினர்
”ஆயன்குளம் அதிசய கிணறு உண்மையில் ஒரு அதிசய கிணறுதான் இந்த கிணற்றில் கீழ் உள்ள பாதாள குகைகள் வழியாக தண்ணீர் அதிவேகமாக கடத்தப்படுகிறது.”
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே முதுமொத்தான் மொழி பகுதியில் ஆயன்குளத்தில் அதிசய கிணறு அமைந்துள்ளது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை காலங்களில் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் கிணற்றுக்குள் சென்றது. பல நாட்கள் தண்ணீர் சென்றும் அந்த அதிசய கிணறு நிரம்பவில்லை. இதனையடுத்து இந்த அதிசய கிணறு குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள ஐஐடி பேராசிரியர்களை நியமித்தனர். கடந்த 3 மாதங்களாக ஐஐடி குழுவினர் அதிசய கிணறு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 50 க்கும் மேற்பட்ட கிணறுகளில் நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் கேமராக்கள் கொண்டு ஆய்வு மேற்கொண்டனர். இதன் மூலம் பல்வேறு தகவல்களை பெற்றுள்ளனர்.
குறிப்பாக இந்த கிணறுகளில் சுண்ணாம்பு பாறைகள் அதிகமாக உள்ளது. மழை நீரில் உள்ள ஆக்சிஜன் சுண்ணாம்பு பாறைகளில் வேதிவினை புரிந்து அதில் துவாரங்களை உருவாக்குகிறது. அவை நாளடைவில் பெரிய குகைகளாக மாறி உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. சில கிணறுகளில் கால்வாய் போன்ற அமைப்பு உருவாகி உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த அதிசய கிணற்றை தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, ஐஐடி பேராசிரியர்கள் குழுவினர் இன்று தீயணைப்பு துறையினரை கிணற்றுக்குள் இறக்கி நவீன ட்ரோன் மூலம் ஆய்வு மேற்கொண்டனர். பூமிக்கு கீழே நீர்வழிப் பாதையை மேம்படுத்துவதற்காகவும், நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரித்து விவசாயிகள் வாழ்வு உற்பத்தி அதிகரிக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட வருகிறது. தற்போதைய ஆய்வு சராசரியாக தினமும் 50 முதல் 60 கன அடி தண்ணீரை உள்வாங்கும் திறன் கொண்டதாக இந்த அதிசய கிணறு இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு மேற்கொண்டு மழைக்காலங்களில் வீணாகும் தண்ணீரை இந்த கிணறு வழியாக செலுத்தும் போது 50 கிலோமீட்டர் சுற்றளவிற்கு நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயரும் எனவும் தெரியவந்துள்ளது.
பின்னர் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு மற்றும் ஐஐடி பேராசிரியர்கள் குழுவைச் சேர்ந்த பொறியாளர் வெங்கட்ராமன் சீனிவாசன் இந்த அதிசய கிணற்றில் நடத்திய ஆய்வுகள் குறித்து கூறும்போது, “கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெள்ள காலத்தின் போது வினாடிக்கு ஆயிரம் கன அடி நீர் சென்றும் நிரம்பாத கிணறு குறித்து ஐஐடி ஆய்வு செய்ய வேண்டும் என நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கூறியதை தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வு செய்யும் போது முதலில் தெரிந்தது, ரேபிட் ரீசார்ஜ் எனப்படும் அதிவேக நீர் பரவல் குறிப்பாக இந்த வேகத்தில் அதாவது வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி தண்ணீர் செல்லும்போது ஒரு மணி நேர அளவில் அந்த கிணறு நிரம்பி விடும். ஆனால் இந்த கிணறு நிரம்பாமல் இருப்பதற்கு காரணம் கிணற்றின் அடியில் இருக்கும் சுண்ணாம்பு பாறைகளால் ஆன குகைகள்தான் என்பதை கண்டறிந்தோம். நிலத்தடி நீரும், மழை நீரும் சேர்ந்து இந்த சுண்ணாம்பு பாறைகளை கரைத்து துளைகளை பெரிதாக்க, கடந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் நடைபெற்ற இந்த மாற்றம் காரணமாக கிணற்றுக்குள் சுண்ணாம்பு பாறைகள் பாதாள குகைகளாக உருவாகியுள்ளது. இதன் காரணமாக கிணற்றுக்குள் பூமிக்கு அடியில் நிலத்தடி நீர் ஓடைகள் உருவாக்கி உள்ளது. இது நெட்வொர்க் போல சுமார் 50 கிலோமீட்டர் சுற்றளவுக்கு இந்த நிலத்தடி நீர் பாதைகள் உருவாக்கியுள்ளது.
மேலே நிலத்தில் இருக்கும் நீர்வழிகள் போல பூமிக்கு அடியில் இருக்கும் இந்த இந்த ஓடைகளில் நீர் அதிவேகமாக பரவலாக்கப்படுகிறது. இதனால் பூமிக்கு அடியில் செல்லும் இந்த நீர்வழி பாதையில் துளையிட்டு வெள்ள உபரி நீரை செலுத்தினால் பூமிக்கு அடியில் சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து கிணறுகளுக்கும் நீர் அதிவேகமாக சென்று அனைத்து பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துகிறது.
கடந்த மூன்று மாதங்களாக நாங்கள் இந்த கிணறு குறித்து தீவிர ஆய்வு மேற்கொண்டோம். 300 கிணறுகள் வரை சர்வே செய்தோம். 160 கிணறுகள் வரை அதன் நீர் மற்றும் கிணற்றின் தரைப்பகுதியில் இருக்கும் மண் எடுத்தும் ஆய்வு மேற்கொண்டுள்ளோம். ஆராய்ச்சிக்காக நீர் மூழ்கி கேமராவை பயன்படுத்தி சுண்ணாம்பு பாறைகளில் உள்ள துளைகளின் அளவுகளை படம் பிடித்துக் கொண்டோம். இதன் மூலம் இந்த ஆயன்குளம் அதிசய கிணறு உண்மையில் ஒரு அதிசய கிணறுதான் இந்த கிணற்றில் கீழ் உள்ள பாதாள குகைகள் வழியாக தண்ணீர் அதிவேகமாக கடத்தப்படுகிறது. இந்த அதிசய கிணறு மூலமாக சுற்றிலும் ஆறு கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள கிணறுகள் நீர்மட்டம் உயர்கிறது. இதே போன்ற கிணறுகள் அருகிலுள்ள கிராமங்களில் உள்ளதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். கீரைக்காரன்தட்டு, சுவிசேஷபுரம், சாத்தான்குளம், ராதாபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் வரை இதே போன்ற கிணறுகளை ஆய்வு செய்துள்ளோம். இது சிறிய அளவிலான ஆய்வு திட்டம் தான். கருமேனியாறு நீர்வழி பாதை அருகில் இந்த திட்டத்தை விரிவுபடுத்த உள்ளோம். ராதாபுரம், திசையன்விளை சுற்றுவட்டார கிராமப்புற விவசாயிகளுக்கு ஒரு வேண்டுகோள். உங்கள் கிணறுகளில் சுண்ணாம்பு பாறைகளோ குகைகளோ இருப்பது அறிந்தால் உடனடியாக இந்த வாட்ஸ்அப் எண்ணிற்கு 8925010683 தகவல் அனுப்பினால் ஐஐடி ஆராய்ச்சி குழுவினர் இலவசமாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு கிணற்றின் நீர்மட்டத்தை உயர்த்த வழிவகை செய்வதாக தெரிவித்தனர்.