கொளுத்துது கத்தரி வெயில்.. ஆரோக்கியமா கடந்து போக இத ஃபாலோ பண்ணுங்க..!
கோடை வெயிலை முன்னெச்சரிக்கையுடன் கையாள்வது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியமான ஒன்று. இந்த கோடை வெயிலை சமாளிக்க நாம் செய்யவேண்டியது என்ன?
கொரோனா ஒரு பக்கம் மக்களை இயல்பு வாழ்க்கையில் இருந்து பாதித்துவரும் வேளையில் வழக்கமான கோடை வெயில் தன் உக்கிரத்தை காட்டத் தொடங்கியுள்ளது. இதுவரை சுட்டெரித்த வெயில் போதாதென்று இன்று முதல் அக்னி வெயில் எனும் கத்தரி வெயில் ஆரம்பமாகியுள்ளது. கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்வது போன்று கோடை வெயிலையும் முன்னெச்சரிக்கையுடன் கையாள்வது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியமான ஒன்று. இந்த கோடை வெயிலை சமாளிக்க நாம் செய்யவேண்டியது என்ன?
கோடைக்காலத்தில் உணவுமுறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வழக்கமான சில உணவுகளை அதிக வெயில் காலத்தின் எடுத்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது. முதலில் நீர் ஆகாரம் மிக மிக முக்கியம். கோடையில் நம் உடலுக்கு நீர்ச்சத்து அதிகம் தேவைப்படும் என்பதால் நீர் ஆகாரத்தை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். தண்ணீரை அதிகளவில் குடிக்க வேண்டும். எப்பொழுதும் குளிர்ச்சியான நீரைக் குடிக்காமல் தவிர்ப்பது நல்லது. தேவையானால் மண் பானை, மண்ணால் செய்யப்பட்ட வாட்டர் கேன் போன்றவற்றில் வைக்கப்பட்ட நீரை பருகுவது நல்லது. அல்லது சாதாரண குடிநீரையே குடிக்கலாம். அதேபோல் மோர், பதநீர், பழச்சாறுகள், நுங்கு, இளநீர் போன்ற இயற்கையான நீர் ஆகாரங்களை அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும்.
வழக்கமாக அடிக்கடி டீ, காபி குடிப்பவர்கள் கோடைக்காலத்தில் அதனை குறைத்துக்கொள்ளலாம். அதற்கு பதிலாக நீர் ஆகாரங்களையே எடுத்துக்கொள்ளலாம். அதேபோல காரமான உணவுகள், எண்ணெய் பதார்த்தங்கள், மசாலா உணவுகள் போன்றவற்றை தவிர்க்கவேண்டும். கூழ் வகைகள். கீரை வகைகள், தயிர்சாதம், மோர் சாதம் போன்ற குளிர்ச்சியான உணவுகள், எளிதாக செரிக்கும் உணவுகள் ஆகியவற்றை சாப்பிடலாம். மாலை வேளைகளில் போண்டா, பஜ்ஜி போன்ற வழக்கமான சிற்றுண்டிகளை தவிர்த்து வெள்ளரி, தர்பூசணி போன்ற உடலுக்கு குளிர்ச்சியான உணவை எடுத்துக்கொள்ளலாம்.
வெயில் காலத்தில் இறுக்கமான உடைகளை கண்டிப்பாக அணிவதை தவிர்க்க வேண்டும். காற்றோட்டமான
தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வெயில்காலங்களில் ஒருநாள் அணிந்த ஆடையை மீண்டும் அணிவதை தவிர்க்கலாம். உள்ளாடையை விஷயத்திலும் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். கத்தரி வெயில் காலங்களில் காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை வெளியில் செல்வதை குறைத்துக்கொள்ளலாம். தவிர்க்க முடியாத தேவைக்காக வெயிலில் பயணப்படுவர்கள் தொப்பி அணிந்துகொள்ளலாம். தேவையென்றால் குடையை பயன்படுத்தலாம். அதேபோல் Sunglass பயன்படுத்தலாம். கண்ணாடி ஸ்டைலுக்கானது என்ற பொதுவான கருத்து உண்டு. ஆனால் சூரியக்கதிரில் இருந்து கண்களை பாதுகாப்பதில் Sunglass-க்கு பெரும் பங்கு உண்டு. தரமான கண்களுக்கு ஏற்ற சூரியக்கண்ணாடியை தேர்வு செய்யவேண்டும். நேரடியாக சூரியனில் படும் தோல்பகுதிகளில் சன் ஸ்கிரீன் லோஷனை பயன்படுத்தலாம். இது சூரியனின் புற ஊதாக்கதிரில் இருந்து பாதுகாக்கும்.
வெயில்காலங்களில் 2 முதல் 3 முறை வேண்டுமானாலும் குளிக்கலாம். குளித்தல் என்பது தோலை சுத்தப்படுவதற்காக மட்டுமே அல்ல. அது உடலை குளிர்வித்தல்தான் குளித்தல். வெயில் காலங்களில் அடிக்கடி குளித்தால் வியர்வையால் வரும் தோல்பிரச்னைகளில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம். உடலையும் சூட்டில் இருந்து பாதுகாக்கலாம். அதேபோல் வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்கலாம். இந்த குளியல் முறை உடல் சூட்டை அதிகளவில் குறைக்கும்.