TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
”அதிக தொகுதிகள், ஆட்சியில் பங்கு என்ற மனநிலையில் இருக்கும் கிரிஷ் ஜோடங்கர், ராஜேஸ்குமார் ஆகியோர் முதல்வர் ஸ்டாலினை சந்திக்கும்போது எப்படி இணக்கமாக பேச்சுவார்த்தை நடத்துவார்கள்? ”

தமிழ்நாட்டில் தேர்தல் களம் மெதுமெதுவாய் சூடுப்பிடிக்க தொடங்கியிருக்கிறது. ஒவ்வொரு கட்சியும் பிரச்சாரம், பொதுக்கூட்டம், ரோட் ஷோ என நிகழ்ச்சிகள் நடத்தி வரும் நிலையில், தமிழ்நாட்டில் முதல் ஆளாய் விருப்ப மனுவை தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்திருக்கிறார் டிடிவி தினகரன்.
இந்நிலையில், முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை நாளை தொகுதி பங்கீடு பேசுவதற்காக அகில இந்திய காங்கிரஸ் தலைமையால் அமைக்கப்பட்ட ஐவர் கொண்ட முழு சந்திக்கவிருக்கிறது.
ஐவர் குழுவில் யார், யாருக்கு இடம்.
அந்த குழுவில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர், காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வபெருந்தகை, அகில இந்திய செயலாளர்கள் சூரஜ் ஹெக்டே, நிவேதித் ஆல்வா மற்றும் சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராஜேஸ்குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த ஐந்து பேர் கொண்ட குழுவினர்தான் முதல்வர் மு.க.ஸ்டாலினை நாளை சந்தித்து தொகுதிகள் குறித்து பேசவிருக்கின்றன.
கள நிலவரம் தெரியாதவர்களை குழுவில் போட்டது ஏன் ?
இந்த குழுவின் தலைவராகவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேலிட பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ள கிரிஷ் ஜோடங்கர், கோவா-வை சேர்ந்தவர். அவருக்கு தமிழ்நாட்டின் கள நிலவரம் என்ன என்பதே சுத்தமாக தெரியாது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். அதனால்தான், கடந்த செப்டெம்பர் மாதம் நெல்லையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று பேசிய கிரிஷ் ஜோடங்கர், தமிழ்நாட்டில் வரும் சட்டமன்ற தேர்தலில் 117 தொகுதிகளை இலக்காக வைத்து பணியாற்றுவோம் என்று பேசியிருந்தார். கட்சியினரை உற்சாகப்படுத்த அவர் அப்படி பேசினார் என்று வைத்துக்கொண்டாலும் கூட, தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், அவர் அப்படி பேசியது திமுக-விடம் அதிக தொகுதிகள் கேட்டு டிமாண்ட் செய்யதான் என்று அப்போதே பரபரப்பாக பேசப்பட்டது.
அதே நேரத்தில், சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்திலும் இதே மாதிரியான கருத்துகளைதான் கிரிஷ் ஜோடங்கர் தெரிவித்ததாக நம்மிடம் பேசிய காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர். ஆனால், கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை, அறக்கட்டளை தொடர்பாகதான் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்று காங்கிரஸ் தலைவர்கள் சொன்னாலும், தொகுதிகள், கூட்டணி குறித்து கிரிஷ் ஜோடங்கர் பேசியது உண்மை என்றும், பீகார் தேர்தல் முடிவுக்கு பின்னர் காங்கிரஸ் தலைமை எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்பட்டு நாம் செயலாற்ற வேண்டும் எனவும் அவர் பேசியிருந்தாகதாக சத்தியமூர்த்திபவன் வட்டாரங்களே சொல்கின்றன.
கூட்டணி ஆட்சி முழக்கத்தை முன் வைத்த ராஜேஸ்குமார்
அதே நேரத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவராக இருக்கும் ராஜேஸ்குமார் எம்.எல்.ஏவும், 2026ல் கூட்டணி ஆட்சி, ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்று பேசி திமுகவை கூடுதலாக உஷ்ணம் ஏற்றிவிட்டார். அவர் விஜய்க்கு ஆதரவாக பேசி, கூட்டணியில் குழப்பத்தை உண்டு பண்ண முயற்சிக்கிறார் என்று அப்போதே அறிவாலய வட்டாரங்கள் காங்கிரஸ் தலைமை அலெர்ட் கொடுத்தனர்.
இப்படியான மனநிலையில் இருப்பவர்கள் முதல்வரிடம் எப்படி பேசுவர் ?
அதிக தொகுதிகளை கேட்க வேண்டும், ஆட்சியில் பங்கு கோரவேண்டும் என்ற மனநிலையில் இருக்கும் கிரிஷ் ஜோடங்கர், ராஜேஸ்குமார் ஆகியோரை கொண்ட இந்த குழுவினர் முதல்வர் ஸ்டாலினை சந்திக்கும்போது எப்படி இணக்கமாக பேச்சுவார்த்தை நடத்துவார்கள்? என்று கதர் சட்டைக்காரர்களே கண்களை கசக்கி வருகிறார்கள்.
அதோடு, மற்ற இரு செயலாளர்களும் கர்நாடகாவை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் அங்கு காங்கிரஸ் ஆட்சி நடக்கும் மனநிலையிலேயே தமிழ்நாட்டிலும் பேச்சுவார்த்தை நடத்த ஆர்வமாக இருக்கின்றனர். இதில், காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வபெருந்தகை மட்டுமே கள எதார்த்தத்தோடு, திமுகவிடம் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்துவார் என்று கூறப்படும் நிலையில், அவரை டாமினேட் செய்யும் விதமாக குழு தலைவர் உள்ளிட்ட மற்ற நான்கு பேரும் வேறு மாதிரியான மன நிலையில் திமுகவில் பேச்சுவார்த்தை நடத்தினால் அது காங்கிரஸ் கட்சிக்கு இங்கும் சிக்கலைதான் ஏற்படுத்தும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
பீகாரில் விழுந்த அடி ; தொகுதி கணக்கை மாற்றும் திமுக
கடந்த 2021 தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணியில் 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த முறை அதிக தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் பேசினாலும் வட மாநிலமான பீகாரிலேயே காங்கிரஸ் படுத்தோல்வியை சந்தித்துள்ள நிலையில், எதை வைத்து தமிழ்நாட்டில் திமுகவிடம் கூடுதல் சீட் கேட்கப் போகிறார்கள்? என்ற பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
ராகுல், கார்கே மனநிலையில் மாற்றம்
அதே நேரத்தில், பீகார் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் கிரிஷ் ஜோடங்கரிடம், ராகுல்காந்தி மற்றும் மல்லிகார்ஜூனாகார்கே இருவரும் பேசியதாகவும் அப்போது திமுக தலைமையை சங்கடப்படுத்தும்படி தொகுதி பேச்சுவார்த்தைகள் இருக்க வேண்டாம் என்றும், இந்தியா கூட்டணியில் இருக்கும் முக்கிய பலமான சக்தி திமுக என்பதால் அவர்களிடம் இணக்கமாக பேச்சுவார்த்தையை நடத்துமாறும் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
40 தொகுதிகளை கேட்கத் திட்டம்
நாளை முதற்கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் சார்பில் தங்களுக்கு சாதகமான 125 தொகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது. அதிலிருந்து 40 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இந்த பேச்சுவார்த்தை குழு வலியுறுத்தவுள்ளது. இறுதிக் கட்டமாக கடந்த முறை பெற்ற தொகுதிகளை விட ஐந்து தொகுதிகள் அதிகமாக வைத்து 30 தொகுதிகளையாவது திமுக தலைமையிடமிருந்து எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்று கிரிஷ் ஜோடங்கர் தலைமையிலான குழு முடிவெடுத்துள்ளது.






















