விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணமாக ஒரு ஹெக்டேருக்கு 20ஆயிரம் ரூபாய் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் டிட்வா புயலால் பாதிப்புகள் கணக்கெடுக்கும் பணியும் தொடங்கியுள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரம்
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கியது. அப்போது அடுத்தடுத்து உருவான இரண்டு புயல் சின்னங்களால் மழையானது கொட்டி தீர்த்தது. குறிப்பாக தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. அப்போது பல மாவட்டங்களில் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியது. இதனால் விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து கணக்கெடுக்கும் பணியானது தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் மாநிலம் முழுவதும் 85,521.76 ஹெக்டேர் விலை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு அருகே டிட்வா
மேலும் பயிர் பாதிப்பு கணக்கெடுப்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் இராமசந்திரன் டிட்வா புயல் சென்னைக்கு அருகில் தென்கிழக்கே 40 கி.மீட்டர் தூரத்தில் நிலைக்கொண்டு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுகுறைந்துள்ளது. டிட்வா புயல் குறித்த வானிலை ஆய்வு மையம் மற்றும் தனியார் வானிலையாளர்கள் கணித்தது தவறானது. டிட்வா புயலானது ஆந்திரா நோக்கிச் செல்லும் என கூறிய நிலையில் சென்னைக்கு அருகிலேயே நிலைக்கொண்டுள்ளது.
ஒரு ஹெக்டேருக்கு ரூ.20ஆயிரம்
அக்டோபர் வரை வடகிழக்கு மழையால் பாதிக்கப்பட்ட பயிர் நிவாரணமாக ஒரு ஹெக்டேருக்கு 20ஆயிரம் ரூபாய் வழங்க முதல்வர்உத்தரவிட்டுள்ளார். தற்பொழுது டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட பயிர்கள் தொடர்பான கணக்கெடு நடைபெற்று வருகிறது. ஒரு வார காலத்தில் அதற்கான இழப்பீடு குறித்து அறிவிக்கப்படும் என அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் இராமசந்திரன் தெரிவித்துள்ளார்.





















