Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: சென்னையில் இரண்டாவது நாளாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், பல இடங்களில் மழைநீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Cyclone Ditwah Chennai: சென்னைக்கு இன்றும் அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
கடைசி நேரத்தில் மிரட்டும் டிட்வா:
சரியாக 10 ஆண்டுகளுக்கு முன்பாக இதே டிசம்பர் மாதத்தில் கனமழையால் நேர்ந்த பெரும் துயரத்தை சென்னை மக்கள் மறந்துபோக வாய்ப்பில்லை. அதே மாதிரியான ஒரு அச்சத்தை தான் வலுவிழந்த நிலையில், டிட்வா புயல் ஏற்படுத்தி கொண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கடல்பகுதியிலேயே வலுவிழந்துவிட்டாலும், சென்னைக்கு அருகிலேயே மிகவும் மெதுவாக நகர்ந்து வருவதால் வடகடலோர மாவட்டங்களில் இரண்டாவது நாளாக கனமழை தொடர்ந்து வருகிறது. குறிப்பாக சென்னை,திருவள்ளூர், கான்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.


சாலையில் தேங்கிய மழைநீர் (Source: X)
தத்தளிக்கும் சென்னை.. மூழ்கிய சாலைகள்..
தமிழ்நாடு அரசு முன்னெடுத்த மழைநீர் வடிகால் பணிகள் பல இடங்களில் உடனடியாக பலன் அளித்து இருப்பதை காண முடிகிறது. ஆனால் தாழ்வான பகுதிகள் தொடர் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பிரதான பகுதிகளில் உள்ள தாழ்வான சாலைகள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் எங்கு மேடு, பள்ளங்கள் இருக்கின்றன என்பது அறியாமல் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக மெட்ரோ பணிகள் நடைபெறும் பகுதிகளில் சாலைகள் குண்டும், குழியுமாக நீருக்குள் மூழ்கி இருப்பதால், அந்த பகுதிகளில் பயணிப்பது ஆபத்தானதாக கருதப்படுகிறது.

மெரினா கடற்கரை (Source: X)
ஆங்காங்கே சில வாகனங்கள் மழைநீரால் பாதிக்கப்பட்டு நிற்க, வாகன உரிமையாளர்கள் அவற்றை கொட்டும் மழையில் தள்ளிச் சென்றதையும் காண முடிந்தது.
முடிவில்லாத துயரம்.. வடியாத மழைநீர்..
வடசென்னையில் பட்டாளம், வியாசர்பாடி, பிபி சாலை, அசோக் நகர், தியாகராய நகர், பூந்தமல்லி உள்ளிட்ட பல பகுதிகளில் மழைநீர் வடியாமல் தேங்கிக் கிடக்கிறது. இதனால் பல பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, கொட்டும் மழையிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. மழைநீர் தேங்கியுள்ளதால் மெரினா கடற்கரை குளம்போல மாறியுள்ளது. ராயபுரம், வேளச்சேரி மற்றும் கோடாம்பாக்கம் பகுதிகளில் தேங்கும் மழைநீருக்கு அஞ்சி, பொதுமக்கள் தங்களது கார்களை மேம்பாலத்தின் மீது நிறுத்தி வைத்துள்ளனர்.


கள ஆய்வில் துணை முதலமைச்சர் உதயநிதி
களத்தில் அரசு நிர்வாகம்:
இதனிடையே, மழைநீர் தேங்கியுள்ள பல இடங்களில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும், தேங்கியுள்ள மழைநீரை அகற்றவும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. சாலைகளில் தேங்கியுள்ள நீரை அகற்ற பல இடங்களில் மோட்டார்களை கொண்டும் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.





















