TVK Vijay Roadshow: புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
TVK Vijay Road Show Puducherry: புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய்யின் ரோட் ஷோவிற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ள நிலையில், அவருக்கு சபாநாயகர் செல்வம் ஒரு யோசனையை பரிந்துரைத்துள்ளார்.

புதுச்சேரியில் வருகிற 5-ந் தேதி ரோடு ஷோ நடத்த தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார். அதற்காக அனுமதி கேட்டு 3 நாட்களுக்கு முன்பு புதுச்சேரி தவெக நிர்வாகிகள் டி.ஜி.பி-யிடம் மனு அளித்தனர். தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமியையும் சந்தித்து, ரோடு ஷோ நடத்த அனுமதி வழங்கும்படி கோரினர். ஆனால், விஜய்யின் ரோட் ஷோவிற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், சபாநாயகர் செல்வம் ஒரு யோசனை கூறியுள்ளார்.
புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்த அனுமதி கோரிய தவெக
2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தலைவர் விஜய், மக்களைச் சந்திக்கும் வகையில் பல இடங்களில் 'ரோடு ஷோ' நடத்தி வந்தார். கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப் பிறகு, அவரது சுற்றுப்பயணம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மீண்டும் சேலத்தில் பயணத்தைத் தொடங்க திட்டமிட்டபோது, காவல்துறை அனுமதி மறுத்ததோடு, ஒரு மாதத்துக்கு முன்பே மனு அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தது.
இந்நிலையில், வரும் டிசம்பர் 5ஆம் தேதி புதுச்சேரியில் 'ரோடு ஷோ' நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார். புதுச்சேரி காலாப்பட்டில் தொடங்கி, கன்னியக்கோவில் வரையிலும் ரோடு ஷோ நடத்தவும், சோனாம்பாளையம் வாட்டர் டேங்க் அருகே பேசவும் கடந்த நவம்பர் 26ஆம் தேதி தவெக நிர்வாகிகள் புதுச்சேரி டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இந்த சூழலில், கடந்த சனிக்கிழமை டிஜிபி அலுவலகத்துக்கு என்.ஆனந்த் வந்தார். டிஜிபி இல்லாததால் திங்கள்கிழமை வருமாறு காவல் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
காவல்துறை ஐ.ஜி-யை சந்தித்து பேசிய புஸ்ஸி ஆனந்த்
இந்த நிலையில், புதுச்சேரி காவல்துறை ஐ.ஜி அஜித்குமார் சிங்லாவை அவரது அலுவலகத்தில் நேற்று சந்தித்து பேசினார் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த். ஆனாலும், ரோடு ஷோ நடத்துவதற்கு காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, முதலமைச்சர் ரங்கசாமியை சட்டசபையில் சந்தித்த ஆனந்த், அவரிடம் சுமார் 19 நிமிடங்கள் பேசியுள்ளார். அதைத் தொடர்ந்து, அமைச்சர் லட்சுமி நாராயணனையும் ஆன்ந்த் சந்தித்து பேசியுள்ளார். இதனிடையே, புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் கூட்டம் நடத்துமாறு, காவல்துறை தரப்பில் புஸ்ஸி ஆனந்த்திடம் பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது.
புதுவை சபாநாயகர் செல்வம் கூறியது என்ன.?
இந்நிலையில், தவெக தலைவர் விஜய்க்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக பேசிய புதுச்சேரி சபாநாயகர் செல்வம், புதுச்சேரி நிறிய நகரம் என்றும் தமிழ்நாட்டை போல் மிகப்பெரிய சாலைகள் இல்லை என்றும் கூறியுள்ளார். அதனால், விஜய்யின் ரோடு ஷோவிற்கு காவல்துறை அனுமதி வழங்காததே நல்லது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தவெகவினர், வேண்டுமென்றால் தனியாக மைதானம் போன்ற இடத்தில் கூட்டம் நடத்திக் கொள்ளலாம் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார்.
இதையடுத்து, விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்வுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளதால், என்ன செய்வது என்று தெரியாமல் தவெகவினர் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.





















