சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone
சென்னையில் கடந்த 24 மணி நேரமாக வெளுத்து வாங்கிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று நள்ளிரவு எண்ணூர்-மாமல்லபுரம் இடையே சென்னைக்கு தெற்கே கரையை கடக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த நவம்பர் மாதம் சற்று ஓய்ந்திருந்த நிலையில், டிசம்பம் மாத தொடக்கமே அதிரடியாக தொடங்கியுள்ளது. அந்த வகையில் டிட்வா புயல் இலங்கையை புரட்டிப்போட்ட நிலையில், தமிழக எல்லையில் நுழையும் போதே ராமநாதபுரம் மாவட்டத்தில் சூறைக்காற்றோடு மழையானது கொட்டியது. அடுத்து டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை வெளுத்து வாங்கிய நிலையில், திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டைக்கு மட்டுமே கடந்த நவம்பர் 29 மற்றும் 30ஆம் தேதிகளில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் எதிர்பார்த்த மழையானது குறிப்பிட்ட தேதிகளில் பெய்யவில்லை.
ஆனால் வானிலை ஆய்வாளர்களே எதிர்பார்க்காத திடீர் டுவிஸ்ட் ஏற்பட்டு சென்னைக்கு அருகே வந்த டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்தது. இருந்த போதும் மழை இல்லாத மேகங்கள் மட்டுமே கொண்டிருந்த டிட்வா, அடுத்த அடுத்த நகர்வுகளில் மழை மேகங்களை உருவாக்கியது. இதனால் சென்னையில் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய மழையானது கடந்த 24 மணி நேரமாக வெளுத்து வாங்கி வருகிறது. ஒரு சில இடங்களில் மழைநீர் தேங்கியும் காட்சியளித்தது. இதனை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக களம் இறங்கினர். இந்த சூழ்நிலையில் கடந்த 18 மணி நேரமாக சென்னை அருகே மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை அல்லது இரவு கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னைக்கு அருகில் தாழ்வு மண்டலம் கரையை கடக்கிறது என தெரிவித்துள்ளார். கடந்த 18 மணி நேரமாக சென்னைக்கு கிழக்கே 40கிமீ தொலைவில் ஒரே இடத்தில் மையம் கொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம். இன்று (02.12.2025) நள்ளிரவு எண்ணூர்-மாமல்லபுரம் இடையே சென்னைக்கு தெற்கே கரையை கடக்கும்.
கரையை கடப்பதற்து முன்னதாக காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்க வாய்ப்பு. இதனால் அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை தொடரும். சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் மிககனமழை முதல் அதித கனமழை வரை பதிவாக வாய்ப்பு என குறிப்பிட்டுள்ளார். மேலும் தரைக்காற்று அவ்வப்போது மணிக்கு 30 முதல் 40 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என தெரிவித்துள்ளார்.





















