TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசரை சமீபத்தில் தவெகவில் இணைந்த செங்கோட்டையன் திடீரென சந்தித்து பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மூத்த தலைவர் செங்கோட்டையன், டிடிவி தினகரன், ஒபிஎஸ் உள்ளிட்டோரு இணைந்து செயல்படுவார் என்று நினைத்துக்கொண்டிருந்த வேளையில், யாரும் எதிர்பாராமல் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். கட்சி தொடங்கிய இதுநாள்வரை தமிழக வெற்றிக் கழகத்தை மாற்றுக் கட்சியை சேர்ந்த எந்த முக்கியத் தலைவரும் சீண்டிக் கூட பார்க்காத நிலையில், எம்.ஜி.ஆர் காலத்து அரசியல்வாதியான செங்கோட்டையன் த.வெ.கவிற்கு சென்றது அவர்களுக்கு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. இந்நிலையில் மூத்த தலைவரான திருநாவுக்கரசரை திடீரென சந்தித்து பேசியிருக்கிறார் செங்கோட்டையன். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு, அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த பிறகு அவர் சந்திக்கும் முக்கியமான தமிழக அரசியல்வாதி திருநாவுக்கரசர்.
ஈரோட்டில் நடைபெற்ற ஒரு சுப நிகழ்ச்சியின்போது செங்கோட்டையன் திருநாவுக்கரசரை சந்தித்து பேசியிருக்கிறார். செங்கோட்டையன் திருநாவுக்கரசரிடம் காங்கிரஸ் கட்சியை தமிழக வெற்றிக் கழகத்தோடு கூட்டணி அமைக்க நீங்கள் வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும், அதற்கு திருநாவுக்கரசர் ஒரு பதிலை சொன்னதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், உண்மையிலேயே செங்கோட்டையனிடம் என்ன பேசினீர்கள் ? த.வெ.க. – காங்கிரஸ் கூட்டணி பற்றி விவாதித்தீர்கள் என்று கேட்க திருநாவுக்கரசருக்கே அழைத்தோம். இந்த கேள்வியை கேட்டு சிரித்த திருநாவுக்கரசர். இருவரும் சந்தித்தது என்பது திட்டமிட்டது அல்ல ; அது எதார்த்தமாக நடந்தது. இருவரும் பேசியது உண்மைதான். ஆனால், வெளியில் சொல்வதுபோல கூட்டணி பற்றியோ, அரசியல் பற்றியோ நாங்கள் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அப்படி பேசுவதற்கான இடமும் அது இல்லை. கொஞ்ச நேரம்தான் இருவரும் ஒன்றாக பேசிக்கொண்டோம். வழக்கமாக, தெரிந்தவர்களை பார்க்கும்போது வாங்க, நல்லாயிருக்கீங்களா? என்பது போன்ற நலவிசாரிப்புகள் மட்டுமே எங்களிடையே நடந்ததே தவிர வேறு எதுவும் நாங்கள் பேசிக்கொள்ளவில்லை என்று முடித்தார்.
தமிழ்நாட்டில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருந்து வரும் நிலையில், இரு கட்சிகளுக்கும் பிளவு ஏற்படுத்த த.வெ.க ஆதவ் அர்ஜூனா போன்று, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலரும் தங்களின் சுய அரசியல் லாபத்திற்காக முயற்சிப்பதாகவும், அது ஒருபோதும் இங்கு நடக்கப்போவதில்லை எனவும் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.





















