‘தூத்துக்குடி மாவட்ட மக்களே - வருகிறது விமான பயிற்சி பள்ளி’ எங்கு தெரியுமா..?
’அன்னாந்து பார்த்த விமானத்தில் பயணிப்பது எந்த அளவிற்கு கனவோ அதைவிட பெருங்கனவு அந்த விமானத்தை இயக்கும் விமானி ஆவது’ அதற்கான வாய்ப்பை ஏற்படுத்துகிறது தமிழ்நாடு அரசு!

தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை பெருக்கும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் விமான பயிற்சி மையம் அமைக்க தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
அறிவிப்பை வெளியிட்ட டிட்கோ
அரசு மற்றும் தனியார் ஒத்துழைப்போடு இந்த பயிற்சி மையத்தை அமைக்க தமிழக தொழில் வளர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, கோவில்பட்டியில் விமான பயிற்சி பள்ளி அமைக்க தனியாருக்கு டெண்டர் வழங்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், பங்கேற்கும் தனியார் நிறுவனத்தில் குறைந்தப்பட்ச தொகையை கொடுக்கும் நிறுவனத்திடம் அந்த பயிற்சி பள்ளி அமைக்கும் பணிகள் ஒப்படைக்கப்படும்.
நூறு ஏக்கரில் பயிற்சி மையம் – அதிரடி அறிவிப்பு
கோவில்பட்டி பகுதியில் உள்ள நாலாட்டின் புதூர், தோணுகல் உள்ளிட்ட கிராமங்களில் கிட்டத்தட்ட நூறு ஏக்கர் நிலம் டிட்கோ எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் வசம் இருக்கிறது. அங்கு தனியார் மில் நிறுவனத்திற்கு விமான ஓடுபாதை ஒன்றும் அமைக்கப்பட்டது. ஆனால், பல வருடங்களாக அந்த ஓடுபாதை பயன்படுத்தப்படாத நிலையில், அந்த பகுதியிலேயே விமான பயிற்சி பள்ளியை அமைக்க டிட்கோ திட்டமிட்டுள்ளது.
அசல் விமான ஓடுதளத்துடன் கூடிய முதல் பயிற்சி பள்ளி
வழக்கமாக விமான பயிற்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பதற்காக செயற்கையாக பயிற்சி மையத்தின் உள்ளேயே விமான ஓடு பாதை அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், கோவில்பட்டியில் அமைக்கப்படவுள்ள விமான பயிற்சி மையத்திற்கு அசலான ஓடுபாதை ஏற்கனவே இருக்கிறது. எனவே, தமிழ்நாட்டில் ஓடுபாதையுடன் அமைக்கப்படவுள்ள முதல் விமான பயிற்சி மையம் என்ற சிறப்பை கோவில்பட்டி தட்டிச் செல்லவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
விமானம் எனும் அதிசயம்
விமானத்தை பார்ப்பது என்பதும் விமானத்தில் செல்ல வேண்டும் என்பதும் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உள்ள ஆசை. அதுவும் அந்த விமானத்தை ஓட்டும் விமானி ஆக வேண்டும் என்பது பலரின் பெருங்கனவு. அந்த கனவை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு அரசின் டிட்கோ இந்த முக்கியமான முன்னெடுப்பை எடுத்துள்ளது பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.





















