தூத்துக்குடி துறைமுகத்தில் இ-சிகரெட் கடத்தல்: ரூ.10 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல், 3 பேர் கைது!
கன்டெய்னரில் கடத்தி வரப்பட்ட ரூ. 10.5 கோடி மதிப்பிலான இ-சிகரெட் பாக்கெட்டுகள்பறிமுதல். 3 பேர் கைது.
தூத்துக்குடி துறைமுகம் வழியாக தடை செய்யப்பட்ட பட்டாசுகள், சிகரெட்டுகள் ஆகியவை சீனாவிலிருந்து கடத்தி வரப்படுவதாக தொடா்ந்து புகாா்கள் எழுந்ததையடுத்து, துறைமுகத்துக்கு வரும் சரக்குப் பெட்டகங்களை புலனாய்வுத் துறையினா் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.
இந்நிலையில், நவம்பர் 27ஆம் தேதி சீனாவின் பீஜிங் துறைமுகத்திலிருந்து தூத்துக்குடிக்கு வந்த ஒரு கன்டெய்னரில், ஒரு நிறுவனத்துக்கு குடைகள் வந்திருப்பதாக தகவல் கிடைத்தது. இதில், சந்தேகமடைந்து கன்டெய்னரை சோதனை செய்தனா். அதில், பெயரளவுக்கு குடைகளும், நடுவில் இ-சிகரெட் பாக்கெட்டுகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததும் தெரிய வந்தது. அவற்றின் மதிப்பு ரூ. 10.5 கோடி என கூறப்படுகிறது. இந்த இ-சிகரெட்டுகளைக் கடத்தி வந்த மூன்று பேர் மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கடத்தல் தொடா்பாக கேரளத்தைச் சோ்ந்த நாகராஜ் (42), சென்னை, கொட்டிவாக்கத்தைச் சோ்ந்த ராஜ்குமாா் (46), சென்னை, மடிப்பாக்கத்தைச் சோ்ந்த சுவாமிநாதன் (56) ஆகிய 3 பேரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, விசாரணை மேற்கொண்டனா். பின்னா், அவா்கள் 3 பேரையும் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, பேரூரணி சிறையில் அடைத்தனா்.
சிகரெட் லைட்டர் போன்ற கருவியில் நிகோடின் பவுடரை அடைத்து விற்பனை செய்யப்படுவதுதான் இ-சிகரெட் ஆகும். ஒரு இ-சிகரெட்டின் விலை ரூ.4 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. ஒரு இ-சிகரெட்டை 10 ஆயிரம் முறை புகைக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் சிகரெட் பிடிப்போர் விலை அதிகமாக இருந்தாலும் கூட சாதாரண சிகரெட் புகைப்பதைவிட இ-சிகரெட் புகைப்பதையே அதிகம் விரும்புகின்றனர். ஆனால் சாதாரண சிகரெட் புகைப்பதைவிட இ-சிகரெட் புகைப்பது அதிக ஆபத்தானது என்று கூறப்படுகிறது.
கடந்த 2019லிருந்து இந்தியாவில் இ-சிகரெட்டை பயன்படுத்துவதற்கும், விற்பனை செய்வதற்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த சம்பவம், துறைமுகம் வழியாக நடக்கும் சட்டவிரோத கடத்தல்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இ-சிகரெட் என்பது மின்னணு முறையில் புகையை உருவாக்கும் ஒரு சாதனம் ஆகும். இது சாதாரண சிகரெட்டுகளுக்கு மாற்றாக சந்தைப்படுத்தப்படுகிறது. ஆனால், இதன் ஆரோக்கிய பாதிப்புகள் குறித்து பல கேள்விகள் உள்ளன. இந்த கடத்தல் சம்பவம், இ-சிகரெட் பயன்பாடு மற்றும் அதன் சட்டவிரோத வர்த்தகம் குறித்த விவாதங்களையும் எழுப்பியுள்ளது.





















