தஞ்சையில் தவிடு மூட்டைகளுக்குள் கஞ்சா கடத்திய மூன்று பேர் கைது - 120 கிலோ கஞ்சா பறிமுதல்
விசாரணையில் அன்பழகன் தவிடு மூட்டைக்குள் மறைத்து கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது அவரிடம் இருந்து 4 மூட்டைகளில் 120 கிலோ எடையுள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது
தஞ்சை வழியாக கஞ்சா கடத்தி வரப்படுவதாக வல்லம் போலீசாருக்கு தகவலின் பேரில் ஆய்வாளர் அனந்த பத்மநாபன் தலைமையில் காவல்துறையினர் திருமலை சமுத்திரம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சேலத்தில் இருந்து நாகைக்கு செல்வதற்காக வந்த சரக்கு ஆட்டோவை மறித்து சோதனை நடத்தியதில் சரக்கு ஆட்டோவில் தவிடு மூட்டைகள் ஏற்றி செல்வதாக தெரிவித்துள்ளனர். இருப்பினும் தவிடு மூட்டைக்கான உரிய ரசீது இல்லாத காரணத்தால் சந்தேகத்தின்பேரில் சரக்கு ஆட்டோவை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
சரக்கு ஆட்டோ ஓட்டுநரை விசாரித்தபோது, அவர் பெயர் அன்பழகன் என்பதும், தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா புதுப்பட்டி பெத்தணசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. காவல்துறையினர் தொடர்ந்து அன்பழகனிடம் விசாரித்த போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் இது குறித்து விசாரணை நடத்துமாறு தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் சந்திர போஸ் உத்தரவின் பேரில் தனிப்படை உதவி ஆய்வாளர் சந்திரசேகர், சிறப்பு உதவி ஆய்வாளர் சாமிநாதன், காவலர் இளவரசன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அன்பழகன் தவிடு மூட்டைக்குள்மறைத்து கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து தவிடு மூட்டையை சோதனை செய்த போது அதனுள் 4 மூட்டைகளில் 120 கிலோ எடையுள்ள கஞ்சா மறைத்து எடுத்து வந்தது தெரிய வந்தது.
சட்டவிரோதமாக கஞ்சா கடத்தியது தொடர்பாக சேலம் மாவட்டம் ஓமலூர் மெயின் சாலையில் உள்ள சிக்கம்பட்டியை சேர்ந்த கணேஷ் (45), அவருடைய உதவியாளர் சிக்கம்பட்டி சீராய்கடை பஸ் நிறுத்தத்தை சேர்ந்த கோவிந்தன் மகன் கிருஷ்ணமூர்த்தி (31), டிரைவர் அன்பழகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.