‘தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை’ - அப்படியெல்லாம் சொல்லக்கூடாது என விவசாயிக்கு ஆட்சியர் அட்வைஸ்.!
ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் பாதிக்கப்படும் அவலம். தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என பேசிய விவசாயி. அப்படியெல்லாம் சொல்லக்கூடாது என ஆட்சியர் அட்வைஸ்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் திருவாரூர் நன்னிலம், மன்னார்குடி, கூத்தாநல்லூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் முன் வைத்தனர். இந்த நிலையில் நன்னிலத்தைச் சேர்ந்த விவசாயி சேதுராமன் என்பவர் கனமழையின் காரணமாக நன்னிலம் ஒன்றியத்திற்குட்பட்ட அதம்பாவூர் நெம்மேலி ஜெகநாதபுரம் உள்ளிட்ட 12 கிராமங்களில் உள்ள ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள குறுவை நெற்பயிர்கள் கனமழையின் காரணமாக வயல்களில் தேங்கியுள்ள நீரின் காரணமாக பாதிக்கப்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் ஏற்கனவே இரண்டு நாட்களாக வயலில் நீர் தேங்கியுள்ளதாகவும் மேலும் இரண்டு நாட்கள் வயலில் நீர் தேங்கி இருந்தால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படக்கூடிய சூழ்நிலை நிலவும் என்றும், வயல்களில் இருந்து நீரை வெளியேற்றும் பெரிய ஓடை வாய்க்காலில் வெங்காய தாமரை அடைத்துள்ளதால் தண்ணீரை வெளியேற்ற முடியவில்லை என பேசினார். இதற்கு இந்த பெரிய குடை வாய்க்கால் சரியாக தூர்வாரப்படாதே காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் பேசும் போது, அதிகாரிகள் இதுவரை அந்த இடத்தை வந்து பார்க்கவில்லை என்றும் நன்னிலம் வட்டாட்சியர் இதுவரை அந்த இடத்திற்கு வரவில்லை என்றும் ஆதங்கத்துடன் பேசினார். வேறு வழியில்லாமல் விவசாயிகள் நாங்களே பொக்லைன் இயந்திரத்தை ஏற்பாடு செய்து இன்று சுத்தம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார். பொதுப்பணித்துறை சார்பில் ஆறு ஆட்களை மட்டும் பணிக்கு அனுப்பியதாகவும் குற்றச்சாட்டு கூறினார். இதே நிலை நீடித்தால் நாங்கள் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேற வழியில்லை என்று பேசினார். இதற்கு ஆட்சியர் அப்படியெல்லாம் சொல்லக்கூடாது உங்கள் ஆதங்கம் எனக்கு புரிகிறது ஓரிரு நாட்களில் முழுவதுமாக வயலில் இருந்து தண்ணீர் வெளியேற்றும் அளவிற்கு வெங்காய தாமரைகள் அகற்றப்படும் என உறுதியளித்தார். மேலும் ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் ஆறு ஆட்களை வைத்து வெங்காயத் தாமரைகளை அகற்ற முடியுமான்னு தெரியவில்லை. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வாய்க்காலில் பொதுப்பணித்துறை தான் இயந்திரத்தின் மூலம் சுத்தம் செய்ய வேண்டும் மக்கள் மீது அதை திணிக்க கூடாது என்று கூறியதுடன் இரண்டு நாட்களில் வெங்காய தாமரை முழுவதுமாக அகற்றி எனக்கு புகைப்படம் எடுத்து வாட்ஸ் அப்பில் அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இதற்கு விவசாயி சேதுராமன் மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தார். மேலும் வலங்கைமான் பகுதியை சேர்ந்த ஒரு விவசாயி ஒருவர் கூறும்போது, அரசு கொடுக்கும் இலவச வேட்டி சேலையை யாரும் பயன்படுத்துவதில்லை எனவே அதற்கு பதில் இலவச கொசுவலை கொடுத்தால் உபயோகமாக இருக்கும் என்றும் பேசினார்.
விவசாயிகள் குறைந்திடும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் பேசுகையில்.. திருவாரூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதம் இயல்பான மழை அளவு 93.12 மில்லி மீட்டராகும். நடப்பாண்டில் ஆகஸ்ட் மாதத்தில் 110.46 மில்லி மீட்டர் மழை அளவு பெறப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி அன்று மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக இருந்தது அணைக்கு வினாடிக்கு 18953 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது அணையிலிருந்து வினாடிக்கு 18,641 கனஅடி வெளியேற்றப்படுகிறது திருவாரூர் மாவட்டத்தில் குருவை பருவத்தில் 60000 ஏக்கரிலும் சம்பா மற்றும் தாளடி பருவத்தில் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 500 ஹெக்டேரிலும் கோடை சாகுபடி 9500 ஹெக்டேரில் ஆக மொத்தம் ஒரு லட்சத்து 92 ஆயிரம் ஹெக்டேரில் சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.