உதவி செய்வதை மாணவப் பருவத்திலேயே வளர்த்துக் கொள்ள வேண்டும் - மத்திய பல்கலைக்கழகத் துணைவேந்தர்
நல்ல நோக்கத்துக்காக உதவி செய்கின்ற பண்பையும் ஒருங்கிணைகின்ற தன்மையையும் தலைமைத்துவத்தையும் வளர்த்து கொண்டால் எதிர்காலத்தில் சிறந்த சமூகசேவகர்களாகவும் சிறந்த தலைவர்களாகவும் மாணவர்கள் உருவாகிட முடியும்
உதவி செய்வதையும் நல்ல நோக்கத்துக்காக ஒருங்கிணையும் பண்பையும் மாணவப் பருவத்திலேயே வளர்த்துக் கொள்ள வேண்டும் மத்திய பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேசினார்.
உதவி செய்வதையும் நல்ல நோக்கத்துக்காக ஒருங்கிணையும் பண்பையும் மாணவப் பருவத்திலேயே வளர்த்துக் கொள்ள வேண்டுமென மத்திய பல்கலைக்கழகத் துணைவேந்தர் மன்னார்குடியில் நடைபெற்ற இளையோர் நேசக்கரம் அமைப்பு தொடக்க விழாவில் பேசினார். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் பள்ளி மாணவர்களுக்கு உதவி மனப்பான்மையையும், தலைமை பண்பையும் வளர்த்தெடுக்கும் நோக்கில் இளையோர் நேசக்கரம் மன்னார்குடியில் தொடங்கப்பட்டது. இதற்கான தொடக்க விழா மன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. தூய வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அருட்சகோதரி ஜெபமாலை தலைமை வகித்தார். ஆசிரியர் இம்மானுவேல் வரவேற்றார். மன்னார்குடி டிஎஸ்பி பாலச்சந்தர், தேசிய மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளையோர் நேசக்கரம் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் ராஜப்பா நோக்க உரையாற்றினார். விழாவில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் எம். கிருஷ்ணன் கலந்து கொண்டு இளையோர் நேசக்கரம் அமைப்புக்கான உறுதி மொழியை வாசித்து 10 பள்ளிகளை சேர்ந்த 110 மாணவர்களையும் உறுதிமொழி ஏற்க வைத்து இளையோர் நேசக்கரத்தில் இணைத்தார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது: குழந்தை பருவத்தில் முதன் முதலில் நாம் விளையாடுகின்ற விளையாட்டில் உணவை மற்றவர்களுக்கும் பல்லுயிர்களுக்கும் பகிர்ந்து அளித்து உண்ண வேண்டும் என நமது முன்னோர்கள் கற்றுக் கொடுத்தனர். பிற உயிர்கள் வேதனைப்படும் போதும் துன்பப்படும்போதும் அதற்கு உதவி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர். அந்த நிலை தற்போது மாறியுள்ளது. மக்கள் தொகை பெருக்கம் காரணமாக எங்கும் எதிலும் போட்டி நிலவுகிறது. அந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையில் நமது அடிப்படையான மனித நேயத்தை மறந்து போகின்றோம். வயது வித்தியாசம் இன்றி செல்போன்கள் தேவையற்ற பயன்பாடுகளுக்கு அதிகம் பயன்படுத்தப்படுவதால் கவனங்கள் சிதறடிக்கப்படுகின்றன. இத்தகைய சூழலில் இயற்கையாக மனிதர்களுக்கு இருக்கின்ற உதவி மனப்பான்மையை தட்டி எழுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நல்ல நோக்கத்துக்காக உதவி செய்கின்ற பண்பையும் ஒருங்கிணைகின்ற தன்மையையும், அதற்கான தலைமைத்துவத்தையும் வளர்த்துக் கொண்டால் எதிர்காலத்தில் சிறந்த சமூக சேவகர்களாகவும், சிறந்த தலைவர்களாகவும் மாணவர்கள் உருவாகிட முடியும் அதற்கு இந்த இளையோர் நேசக்கரம் உதவிகரமாக இருக்கும். நமது நாட்டின் கலாச்சாரத்தை பண்பாட்டை அறிந்த இது போன்ற அமைப்புகளில் மாணவர்கள் இணைவதன் மூலம் சமூக பணி ஆற்றுவதற்கான நல்ல வாய்ப்பை இளம் வயதிலேயே அடைந்திட முடியும் என்றார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் நேசக்கரம் அமைப்பு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் மூலம் ஆதரவற்றோர் உயிரிழந்தால் அவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டு இதுவரை ஆயிரக்கணக்கான ஆதரவற்றோர் உடல்களை அடக்கம் செய்யும் பணியில் நேசக்கரம் அமைப்பினர் ஈடுபட்டிருப்பது பொதுமக்களிடையே மிகுந்த பாராட்டையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. அது மட்டுமன்றி உடல் நலம் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வருபவர்களை நேசக்கரம் அமைப்பின் சார்பில் தாமாக முன்வந்து அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கும் வரை இறுதி வரை உடனிருந்து அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைப்பது இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாக உள்ளது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரி பயிலும் மாணவ மாணவிகளுக்கான உதவித்தொகை அதே போன்று நீர் மேலாண்மை புத்தகத் திருவிழா என மாணவர்கள் நலன் சார்ந்த பல்வேறு விஷயங்களில் தொடர்ந்து நேசகரம் அமைப்பு ஈடுபட்டு வருகிறது இந்த அமைப்பை பாராட்டி மாவட்ட ஆட்சியர் அமைச்சர் என பல்வேறு தரப்பினர் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இளையோர்களுக்கான நேசகரம் அமைப்பு தொடங்கி இருப்பது பல்வேறு தரப்பு மக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது.