திருவாரூரில் தொடர் மழை - முளைக்கத்தொடங்கிய உளுந்து பயிர்கள்...! ஏக்கருக்கு 10,000 வீண்
இந்த கனமழையின் காரணமாக பயிறு உளுந்து சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் செடியிலேயே பயிறு முளைத்தும் காணப்படுவதால் செலவு செய்த அசல் தொகையை கூட எடுக்க முடியாத சூழ்நிலையில் விவசாயிகள் வருத்தம்
தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வந்தது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 345 ஏக்கர் பரப்பளவில் கோடைக்கால சாகுபடியாக செய்யப்படும் மானாவரி பயிர்களான பயிறு உளுந்து சாகுபடி செய்ப்பட்டு அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. 50% பயிறு உளுந்து அறுவடை பணிகள் நிறைவு பெற்றிருக்கும் நிலையில் மழை காரணமாக அறுவடைக்காக பறிக்கப்பட்ட பச்சை பயிறு வகை செடிகள் வயலிலேயே மூடி வைக்கப் பட்டிருந்தன இவற்றில் பாதி அழுகியும், மீதம் செடியிலேயே முளைத்தும் காணப்படுவதால் விவசாயிகள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் குலமாணிக்கம் குருவாடி, பள்ளி வர்த்தி, வீராக்கி, சேந்தமங்கலம், காரியமங்கலம், விக்கிரபாண்டியம், காணுர், கள்ளிக்குடி ஆகிய கிராமங்களில் பச்சை பயறு சாகுபடி என்பது கனமழையின் காரணமாக முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிர்,உளுந்து வகைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த பச்சை பயிர் சாகுபடிக்கு ஏக்கர் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்வதாகவும்,குவிண்டால் ஒன்று 6500 விலை போவதாகவும் ஏக்கருக்கு 3 குவிண்டால் வரை மகசூல் கிடைக்கும் என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் இந்த கனமழையின் காரணமாக பயிறு உளுந்து சாகுபடி பணிகள் என்பது முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் செடியிலேயே பயிறு முளைத்தும் காணப்படுவதால் செலவு செய்த அசல் தொகையை கூட எடுக்க முடியாத சூழ்நிலையில் சிக்கித் தவிப்பதாக விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர். மேலும் பயிர் வகைகளுக்கு இன்சூரன்ஸ் இருப்பினும் சென்ற வருடம் இன்சூரன்ஸ் தொகை கட்டியதற்கு இன்று வரை இழப்பீடு தொகை கிடைக்கவில்லை என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் கோடை கால பயிர்களான பயிறு உளுந்து பயிரிடுவதற்கு லேசான ஈரப்பதம் மட்டுமே தேவை என்பதால் இதனை விவசாயிகள் கோடை கால பயிர் வகைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.அதற்கு அதிகளவு தண்ணீர் தேவையில்லை என்பதால் கோடை காலத்தில் இந்த பயிர் வகைகளை காவிரி டெல்டா பகுதிகளில் விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த ஆண்டாவது வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்கிட ஆவன செய்ய வேண்டுமென விவசாயிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.