தஞ்சாவூர் ருசி! திமுக திருச்சி மாநாட்டுக்கு 12,000 பேருக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65 பயணம்
திமுக மாநாடு: தஞ்சாவூரில் மட்டுமே 12 ஆயிரம் பேருக்கு 1300 கிலோ மட்டன் 800 கிலோ சிக்கன் மூலம் மட்டன் பிரியாணி, சிக்கன் 65 தயார் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

தஞ்சாவூர்: திருச்சி மாவட்டத்தில் இன்று நடைபெற உள்ள திமுக மாநில மாநாட்டிற்கு தஞ்சாவூரில் இருந்து கம கம ருசியுடன் மட்டன் பிரியாணி மற்றும் சிக்கன் 65 தயார் செய்து அனுப்பி வைக்கப்பட்டது.
தமிழக சட்டசபை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அநேகமாக ஏப்ரல் மாதம் 2வது வாரத்தில் தேர்தல் நடக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. ஒவ்வொரு கட்சியும் தேர்தல் முன்னேற்பாடுகளில் களம் இறங்கி உள்ளன. பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என்று கோடைகால வெப்பத்தை போல் தேர்தல் களம் வெகுவாக சூடு பிடித்து வருகிறது.

திமுக நிர்வாகிகள் மாநில மாநாடு
இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என நான்கு முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் அதிமுக கூட்டணியில் தவெக இணையலாம் என்ற தகவலும் ஹைஸ்பீடில் பரவி வருகிறது. இந்நிலையில் திருச்சியில் இன்று திமுக நிர்வாகிகள் மாநில மாநாடு நடக்கிறது. 'மு.க.ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்’ என்ற தலைப்பில் திமுக நிர்வாகிகள் மாநில மாநாடு நடைபெற உள்ளது.
முக்கிய வாக்குறுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவாரா?
திருச்சி சிறுகனூரில் பிரமாண்டமாக நடைபெறும் இம்மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். இந்த மாநாட்டில் சிறப்பு அறிவிப்புகள், முக்கிய வாக்குறுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் திருச்சியில் நடக்கும் திமுக மாநாட்டை மற்ற கட்சிகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. மகளிர் தினம் நிறைவடைந்துள்ள நிலையில் பெண்களின் வாக்குகளை முழுமையாக பெறும் வகையில் பெண்கள் மனம் குளிரும் வகையில் முதல்வர் ஸ்டாலின் முக்கியமான அறிவிப்பை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது.

12 ஆயிரம் பேருக்கு மணக்கும் மட்டன் பிரியாணி பயணம்
இந்த மாநாட்டில் 10 லட்சம் திமுக நிர்வாகிகள் கலந்துகொள்வார்கள் என்று அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளவர்களுக்கு பல்வேறு இடங்களில் மதிய உணவும் தயார் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தஞ்சாவூரில் அதிகாலை முதல் கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு மதிய உணவு தயார் செய்யும் பணி நடந்தது. ஊரையே மணக்க செய்யும் வகையில் கமகம மட்டன் பிரியாணி, சிக்கன் 65, தால்சா அடங்கிய பிரியாணி பேக்கேஜ் 12 ஆயிரம் பேருக்கு செய்யப்பட்டு தஞ்சாவூரில் இருந்து வாகன மூலம் திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
1300 கிலோ மட்டன் 800 கிலோ சிக்கன்
தஞ்சாவூரில் மட்டுமே 12 ஆயிரம் பேருக்கு 1300 கிலோ மட்டன் 800 கிலோ சிக்கன் மூலம் மட்டன் பிரியாணி, சிக்கன் 65 தயார் செய்து அனுப்பி வைத்துள்ளனர். இதேபோல் திருச்சியில் பல பகுதிகளிலும் மட்டன் பிரியாணி செய்யப்பட்டு மாநாட்டு திடலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மணக்கும் பிரியாணி மாநாட்டு வந்தவர்களுக்கு உடனுக்குடன் வழங்க தயார் நிலையில் வைக்கப்பட்டது. இந்த மாநாட்டுத் திடலில் அடிப்படை வசதி முதல் ஆன்லைன் வசதி வரை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் மாநாட்டுத் திடலை நோக்கிய அனைத்து வழிச் சாலைகளிலும் 20 கி.மீ நீளத்திற்கு திமுகவின் கட்சிக்கொடி நடப்பட்டுள்ளது.
வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு
அரியலூர் மார்க்கமாக வந்த வட மாவட்ட வாகனங்கள் திருச்சி சென்னை சாலையில் மாநாட்டு திடலுக்கு இடது புறம் நிறுத்தப்பட்டது. டெல்டா மாவட்டங்களில் இருந்து வந்த வாகனங்கள் மாநாட்டுத் திடலுக்கு பின்புறம் தச்சங்குறிச்சி செல்லும் பகுதியில் நிறுத்தப்பட்டது. இதேபோல் திருச்சி பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் மாநாட்டுக்கு முன்பு நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் நெரிசல் இன்றி கனகச்சிதமாக போக்குவரத்து மேலாண்மை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















