மயிலாடுதுறையில் திருவள்ளுவர் வேடமணிந்து வள்ளுவரின் பெருமையை பறைசாற்றிய தமிழ் ஆர்வலர்கள்
மயிலாடுதுறையில் திருவள்ளுவர் திருநாள் திருவிழாவை முன்னிட்டு திருவள்ளுவர் வேடம் அணிந்து திருவள்ளுவர் சிலை திருத்தேர் நகர்வலம் நடைபெற்றது.
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளின் வாழும் தமிழர்களால் ஆண்டுதோறும் தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை என்பது எப்போதும் ஒரு நாளில் முடிவு அடைவதில்லை. தை 1 -ம் தேதி பொங்கல் பண்டிகை விழாவும், தை 2-ம் தேதி மாட்டுப் பொங்கலாகவும், திருவள்ளுவர் தினமாகவும் தமிழர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 1333 திருக்குறள்கள் மூலம் வாழ்க்கையின் அனைத்து நெறிகளையும் கற்பித்துச் சென்றவர் திருவள்ளுவருக்கு திருவள்ளுவர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
பாரத பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பெரும் தலைவர்கள் பலரும் தங்களுடைய உரைகளின்போது திருக்குறளை மேற்கொள் காட்டுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில் திருவள்ளுவரை பெருமைப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. மறைமலை அடிகள் தலைமையில் 500 -க்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள் 1921 -ஆம் ஆண்டு சென்னை - பச்சையப்பன் கல்லூரியில் கூடி தமிழர்களுக்கென ஒரு தனி ஆண்டு' தேவை என்று கருதி, திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு ஒன்றைப் பின்பற்றுவது என்றும், அதையே "தமிழ் ஆண்டு' எனக் கொள்வதென்றும், திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கி.மு. 31 என்றும் முடிவெடுத்தார்.
அதனைக் கணக்கிட்டு திருவள்ளுவர் ஆண்டு அனுசரிக்கப்படுகிறது. எனினும் திருவள்ளுவர் பிறந்த ஆண்டிற்கான சான்றுகள் இன்றளவும் எதுவும் கிடைக்கவில்லை. அவரை சமணர் என்றும் சைவர் என்றும் சிலர் கூறி வருகிறார்கள். திருவள்ளுவர் பிறந்த மாதம் வைகாசி என கூறி அவருக்கு விழா எடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் 1971 - ம் ஆண்டு முதல் தை 2 -ம் நாள் திருவள்ளுவர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து திருவள்ளுவர் தினத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை காமராஜர் சாலையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒன்றாக மயிலாடுதுறையில் திருக்குறள் பேரவை சார்பாக திருவள்ளுவர் திருநாள் திருவிழாவை முன்னிட்டு திருவள்ளுவர் திருத்தேர் நகர்வல பேரணி இன்று நடைபெற்றது. திருத்தேரில் திருவள்ளுவர் சிலை வைக்கப்பட்டு விசித்ராயர் வீதியில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் இருந்து திருவள்ளுவர் திருத்தேர் புறப்பட்டு, நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து, தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நிறைவடைந்தது.
திருக்குறள் பேரவை தலைவர் சிவசங்கரன் தலைமையில் நடைபெற்ற திருத்தேர் பேரணியில் மாணவர்கள் மற்றும் நாடக கலைஞர் திருவள்ளுவர் வேடமணிந்து திருவள்ளுவரின் பெருமையை பறைசாற்றும் வகையில் திருவள்ளுவரின் திருமறைகளை பாடி தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அறிஞர்கள் திருக்குறளை உலகிற்கு தந்த திருவள்ளுவரின் பெருமைகளை பறைசாற்றும் வகையில் பேரணியாக சென்றனர். தொடர்ந்து திருவள்ளுவர் திருநாள் விழா மற்றும் பாராட்டு விழா விருது வழங்கும் விழா நடைபெற்றது.