Jallikattu: 9 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் காளை முட்டியதில் உயிரிழப்பு - பாலமேடு ஜல்லிக்கட்டில் சோகம்
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 9 காளைகளை அடக்கிய அரவிந்த் காளை முட்டியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை முதல் காளைகளும், காளையர்களும் சரிக்கு சமமாக மல்லுக்கட்டி வந்த நிலையில் தற்போது மாடுபிடி வீரர் ஒருவர் மாடு முட்டி உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாடுபிடி வீரர் உயிரிழப்பு
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக காளைகளை பிடித்த மாடுபிடி வீரர் அரவிந்த் உயிரிழந்தார். ஒன்பது காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் அரவிந்த் நான்காவது இடத்தில் இருந்தார். இந்நிலையில் காளையை பிடிக்க முயன்றபோது அரவிந்த்தை காளை முட்டியதில் பலத்த காயமடைந்தார். இதைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி அரவிந்த் உயிரிழந்தார்.
காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பாலமேடு ஜல்லிக்கட்டில் தற்போது வரை 5 சுற்றுகள் நிறைவடைந்துள்ளன. 5 சுற்றுகள் முடிந்த நிலையில், 18 காளைகளை பிடித்து மணி என்ற மாடுபிடி வீரர் முதலிடத்தில் உள்ளார். பாலமேடு ஜல்லிக்கட்டில் 15 காளைகளை பிடித்து ராஜா என்ற மாடுபிடி வீரர் உள்ளார். மூன்றாவது இடத்தில் 11 காளைகளை பிடித்த தமிழரசன் என்ற வீரர் உள்ளார்.
9 காளைகளை அடக்கியவர்
9 காளைகளை பிடித்து அபாரமாக ஆடிய மாடுபிடி வீரர் மாடு முட்டியதால் உடனடியாக ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருந்த காரணத்தால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மாடுபிடி வீரர் அரவிந்த் காளை முட்டியதில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பாலமேடு ஜல்லிக்கட்டிலும், சக மாடுபிடி வீரர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது வரை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்க மொத்தம் 1000 காளைகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. நான்காவது சுற்று வரையிலும் 414 காளைகள் அவிழ்க்கப்பட்டு இருந்தது. தற்போது நடைபெற்று வரும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் ஆள்மாறாட்டம் செய்ததாக 11 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காலை முதல் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு பிடி வீரராக இளைஞர் அரவிந்த்ராஜன் உயிரிழந்திருப்பது அங்கு கூடியிருக்கும் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பார்வையாளரும் உயிரிழப்பு
பாலமேடு ஜல்லிக்கட்டில் நான்காவது சுற்று நிலவரப்படி 22 பேர் காயம் அடைந்திருந்தனர். அவர்களில் அரவிந்த்ராஜன் உள்பட 4 பேருக்கு காயத்தின் தன்மை தீவிரமாக இருந்ததால் அவர்கள் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனால், அவர்களில் அரவிந்த்ராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 பேருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது போலவே திருச்சி மாவட்டம் சூரியூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. மேலும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மஞ்சுவிரட்டு, எருதுவிரட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க வந்த பார்வையாளராக புதுக்கோட்டையைச் சேர்ந்த கண்ணப்பன்பட்டி தளமாவூரைச் சேர்ந்த அரவிந்த் (வயது 25) மாடு முட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.