தஞ்சாவூரில் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி ஆர்ப்பாட்டம் - வணிகர்கள் கலெக்டரிடம் மனு
தஞ்சாவூரில் டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி பொதுமக்கள், வணிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை வழங்கினர்.
தஞ்சாவூரில் டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி பொதுமக்கள், வணிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை வழங்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர் தெற்குலங்கம் பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் மது அருந்துவோரால் அப்பகுதியில் உள்ள வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் தொடர்ந்து இடையூறு ஏற்படுவதாக கூறி வணிகர்கள் கடையடைப்பு நடத்தினர்.
பின்னர் டாஸ்மாக் கடை அருகே கண்டன ஆர்ப்பாட்டம், கடையை மூட வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்று, கோரிக்கை மனுவினை அதிகாரிகளிடம் வழங்கினர். இதே போல் தஞ்சாவூர் அருகே விளார் ஊராட்சிக்குட்பட்ட பாப்பாநகரில் உள்ள டாஸ்மாக் கடையினால் அப்பகுதி குடியிருப்பில் வசிப்போர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
அப்பகுதியில் உள்ள பெண்கள் கல்லூரி, பள்ளி மாணவர்கள் இந்த டாஸ்மாக் கடையில் மது அருந்தும் மதுப்பிரியர்களின் தொல்லையினாலும், வாகனங்களின் அதிவேகத்தாலும் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக கூறி, டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என பாப்பா நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் அதன் தலைவர் வி.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இருந்த அதிகாரிகளிடம் வழங்கினர்.
தீக்குளிக்க முயன்ற பெண்: தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை தீக்குளிப்பதற்காக தனது உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்ட பெண்ணை காவல் துறையினர் மீட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்துக்கு உள்பட்ட பருத்தியப்பர் கோவில் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் மனைவி சசிகலா. இவர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்துக்கு சிலருடன் திங்கள்கிழமை வந்தார். இவர், தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் பாட்டிலை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த காவல் துறையினர் விரைந்து சென்று சசிகலாவை மீட்டு விசாரணை நடத்தினர்.
அப்போது, காவல் துறையினரிடம் சசிகலா கூறுகையில், எனது கணவர் சக்திவேல் 2017 ஆம் ஆண்டில் விவசாயிகளிடம் நெல்லை வாங்கி செங்கிப்பட்டியைச் சேர்ந்தவருடன் சேர்ந்து வியாபாரம் செய்து வந்தார். செங்கிப்பட்டியைச் சேர்ந்த நபரிடமிருந்து வர வேண்டிய ரூ. 18 லட்சம் இதுவரை கிடைக்கவில்லை. பல வழிகளில் முயற்சி செய்தும் பணம் கிடைக்காததால், பாதிக்கப்பட்ட எனது கணவர் கடந்த மாதம் உயிரிழந்தார்.
கடன் தொல்லையால் அவதிப்படும் நிலையில் முதல்வரின் தனிப்பிரிவு அலுவலகம், காவல் துறையினரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனது குடும்பம் கடன் தொல்லையால் அவதிப்படுவதாலும், எனக்கு உதவி செய்ய யாரும் முன் வராததாலும் தற்கொலை செய்து கொள்ள முயன்றேன் என்றார் அவர். இதையடுத்து, சசிகலாவுக்கு காவல் துறையினர் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்