கொரோனாவால் ஆட்டம் காணும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை தொழில்...!
’’தமிழக அரசு, வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் கோயில்கள் மூடுவதை தவிர்த்து, மற்ற நாட்களில் கோயில்களை மூடினால், எங்களது பொம்மைகள் விற்பனையாகும், எங்களின் வாழ்வாதாரமும் நலிவடையாமல் பாதுகாக்கப்படும்’’
ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் எவ்வளவோ பிரச்சினைகளைச் சந்தித்து எந்த நிலைக்குப் சென்றாலும், அத்தனையையும் தன்னம்பிக்கை மனதில் இருந்தால் மீண்டும் எழுந்து விட முடியும் என்பதை உணர்த்துவது தான் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள். கட்டிடம், சிற்பம், ஓவியம், இசை, நடனம், நாடகம் எனப் பல்வேறு கலைகளுக்கு பெயர் பெற்ற தஞ்சாவூரில் 19 ஆம் நூற்றாண்டில்தான் இப்பொம்மைகள் முதலில் உருவாக்கப்பட்டன. சரபோஜி மகாராஜாவின் காலத்தில் இப்பொம்மைகளை உருவாக்கும் கலைஞர்கள் சிறப்பு பெற்று விளங்கினர். மற்றவர்களால் நன்கு மதிக்கப்பட்டனர். தஞ்சை மாவட்டத்தில் மாரியம்மன் கோயில், அம்மன் பேட்டை, வடக்கு வாசல் உள்ளிட்ட பகுதியில் சுமார் 25க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தலையாட்டி பொம்மைகளை தயார் செய்து வருகிறார்கள்.
தலையாட்டி பொம்மை என்பது ராஜா-ராணி இரண்டு பொம்மைகளையும் குறிக்கும். இந்த பொம்மைகள் அடிப்பகுதியில் பெரியதாகவும் எடைமிகுந்ததாகவும் மேற்புறம் குறுகலாகவும் எடை குறைவானதாகவும் உருவாக்கப்படுகின்றன. இதனால் இப்பொம்மைகள் சாய்த்து தள்ளினாலும் கீழே விழாமல் மீண்டும் செங்குத்தாகவே அதே நிலையில் வந்து நிற்கும் வகையில் உருவாக்கப்படுகின்றன. இந்த பொம்மையில் முதலில் அடிப்பாகம் தயரிக்கப்பட்டு, வளைவான அடிப்பாகமுள்ள கிண்ணம் போன்ற ஒரு அமைப்பில் சுத்தமான களிமண் நிரப்பி அது இரண்டு நாட்கள் நிழலிலும் பின் இரண்டு நாட்கள் வெயிலிலும் காயவைத்து நிரப்பப்படும் களிமண்ணுக்கு ஏற்பவே பொம்மைகள் செங்குத்தாக அமைகின்றன.
பின் மேல்பாகம் தயாரிக்கப்பட்டு அடிப்பாகத்துடன் இணைக்கப்படுகின்றன. தேவைக்கு ஏற்றார் போல் பல வண்ணங்கள் அடிக்கப்பட்டு உலர வைக்கப்படுகின்றன. அக்காலத்தில் களிமண் கொண்டு தயாரிக்கப்பட்டது ஆனால் தற்போது களிமண் கிடைக்காமலும், அதற்கு தேவையான வர்ணங்கள், பேப்பர் தூள்கள் கிடைக்காததால் தஞ்சை மாவட்டத்தில் சுமார் 100 குடும்பங்கள் இருந்த நிலையில் தற்போது 25 குடும்பங்கள் தலையாட்டி பொம்மைகளை தயாரித்து வருகின்றனர். தற்போது கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 வருடங்களாக ஊரடங்கு போன்ற விதிமுறைகளால், பொம்மை தொழில் நலிவடைந்து விட்டது. மேலும் வெள்ளி, சனி, ஞாயிற்றுகிழமைகளில, அனைத்து கோயில்களும் முடுவதால், போதுமான வருமானமில்லாமல் மிகவும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
இதனால் தலையாட்டி பொம்மை தொழில் போதிய வருமானம் இல்லாததால் சிலர் மாற்று தொழிலை செய்து கொண்டு பொம்மைகளை தயார் செய்து வருகின்றனர். எனவே தமிழக அரசு புகழ்பெற்ற தலையாட்டி பொம்மை தொழிலை மேம்படுத்துவதற்கு, கோயில்களை மூன்று நாட்கள் மூடுவதை மற்ற நாட்களில் மூடினால், பொம்மை தொழில் அழியாமலும், விற்பனை செய்பவர்கள், தயாரிப்பவர்கள் அனைவரையும் காப்பாற்ற முடியும். மேலும், பழங்காலத்து பாரம்பரியமான இம்பொம்மைகள் விற்பனை செய்வதற்கு ஊக்குவிக்க வேண்டும் என பொம்மை தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து பொம்மை தயாரிப்பவர் கூறுகையில்,
தலையாட்டி பொம்மைகள் செய்வது மிகவும் சிரமமாகும். அதை காயவைத்து , கீழ் பாகத்தில் களிமண்ணை சரியாக வைத்தால் தான் தலையாட்டி பொம்மையாக இருக்கும். கொஞ்சம் களிமண் சரியாக வைக்காவிட்டால் ஒருபுறம் சாய்ந்து விடும். செய்த பொம்மைக்கான நேரங்கள் தான் வீணாகும். கைக்குழந்தைகள் தலையாட்டி பொம்மை பார்த்து அதே போல் ஆடுவதால் , அவர்களின் எண்ணங்கள் நல்லபடியாகவும், இருபுறமும் ஆடுவதால் உடல்கள் வலுவாகும். ஆனால் இப்போது பிளாஸ்டி மற்றும் வெளிநாட்டு ரப்பர் பொம்மைகள் வந்து விட்டன. இதில் குழந்தைகள் விளையாடினால் பல்வேறு சரும நோய்கள் தான் வரும். அதை பற்றி எல்லாமல் இப்போதுள்ள பெற்றோர்கள் நினைக்காமல் இது போன்ற பொம்மைகளை வாங்கி கொடுக்கின்றனர். இந்நிலையில் தலையாட்டி பொம்மை செய்வதற்கு போதிய களிமண் கிடைக்காததாலும், பேப்பர் துாள்கள் மற்றும் வர்ணங்கள் விலை உயர்வினாலும் பொம்மையின் விலை அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு ஒரு ஜோடி பொம்மையின் விலை 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இப்போது ஜோடி பொம்மையின் விலை 200 ரூபாய் வரை உயர்ந்து விட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பு பொம்மை தயாரிப்பவர்கள் அதிக அளவில் இருந்தார்கள். ஆனால் தற்போது வெளிநாட்டு பொம்மைகள், பிளாஸ்டிக் பொம்மைகள் வரத்தினால் பழங்காலத்து தலையாட்டி பொம்மைகளுக்கு அதிகமாக வாங்குவதில்லை. மேலும், தற்போது கொரோனா தொற்றால், கடந்த சில மாதங்களாக கோயில்கள் அனைத்தும் பூட்டப்பட்டன. இதனால் எங்களது தலையாட்டி பொம்மை தொழில் மிகவும் மோசமானது. பின்னர் ஊரடங்கு தளர்த்தப்பட்டன. ஆனால் சுற்றுலா வாசிகள், அதிகமாக வரும், வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் கோயில்களை பூட்டுவதால், வியாபாரம் நடைபெறாமல், காத்துகிடக்க வேண்டியுள்ளது.
தஞ்சாவூர் பெரியகோயிலுக்கு, வாரந்தோறும் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் வெளி மாநிலம், மாவட்ட, வெளியூரிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வருவார்கள். அவர்கள், கோயிலில் தரிசனம் செய்து விட்டு, அனைவரும் கட்டாயம் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையை வாங்கி செல்வார்கள். ஆனால் பிரதானமான மூன்று நாட்கள் கோயில்களை மூடுவதால், விற்பனையாகாமல் பல தலைமுறைகளாக பொம்மை தயாரித்து வந்த எங்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமடைந்துள்ளது. இதனால் கடந்த சில மாதங்களில் ஏராளமான தலையாட்டி பொம்மை தயாரிப்பவர்கள், கொத்தனார், சித்தாள் என மாற்றுத்தொழிலுக்கு சென்று விட்டனர். எங்களது தலையாட்டி பொம்மை விற்பனை நடக்காததால், மிகவும் அபாயக்கட்டத்தில் வாழ்ந்து வருகின்றோம். இதே நிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் தலையாட்டி பொம்மை தயாரிக்கும் தொழில் அழிந்து விடும். எனவே, தமிழக அரசு, வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் கோயில்கள் மூடுவதை தவிர்த்து, மற்ற நாட்களில் கோயில்களை மூடினால், எங்களது பொம்மைகள் விற்பனையாகும், எங்களின் வாழ்வாதாரமும் நலிவடையாமல் பாதுகாக்கப்படும் என்றார்.