திருவாரூர்: ஆகாயத் தாமரை சுத்தம் செய்யும் பணிக்கு தூய்மை பணியாளர்கள் - சிஐடியு சங்கம் எதிர்ப்பு
தூய்மை பணியாளர்கள் அச்சத்துடன் ஆகாயத்தாமரை அகற்றி வருவதாகவும்,இந்த செயல் நகராட்சி ஆணையரின் அதிகார துஷ்பிரயோகத்தை காண்பிக்கிறது எனவும் இதனை சங்கம் சார்பாக வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
திருவாரூர் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை நகர்ப்புறங்களை தூய்மையாக வைத்திருக்கும் வேலையை மட்டும் செய்ய சொல்லாமல் நகரப் பகுதிகளில் உள்ள குறிப்பாக பனகல் சாலையில் உள்ள குளத்தில் உள்ள ஆகாயத்தாமரை செடிகளை அப்புறப்படுத்த சொல்லி நகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளதாக சிஐடியு சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து சிஐடியு சங்கத்தினார் கூறுகையில், இந்த பணிகள் நேற்றிலிருந்து நடைபெற்று வருவதாகவும், சுமார் மூன்று அடிக்கு மேல் வளர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகள் குளத்தின் மேலே காடுகளைப் போல வளர்ந்துள்ளதாகவும், அதில் விஷத்தன்மை உள்ள பாம்புகள் மற்றும் பல்வேறு கிருமிகள் உள்ளே இருக்கும் என தூய்மை பணியாளர்கள் அச்சத்துடன் அந்த ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி வருவதாகவும், இந்த செயல் நகராட்சி ஆணையரின் அதிகார துஷ்பிரயோகத்தை காண்பிக்கிறது எனவும் இதனை சங்கம் சார்பாக வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் நகராட்சி பகுதிக்கு உட்பட்ட குளங்கள் நகராட்சிக்கு சொந்தமாக இருந்தாலும் ஆகாயத்தாமரை அகற்றும் பணிகளை தூய்மை பணியாளர்கள் மூலம் செய்வதை உடனடியாக நிர்வாகம் நிறுத்த வேண்டும் எனவும் திருவாரூர் சிஐடியு மாவட்ட குழுவின் சார்பில் கேட்டுக்கொள்வதாகவும், ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும் பணிகளில் ஈடுபடும் தூய்மை பணியாளர்களுக்கு ஏதாவது பாதிப்பு என்று வந்தால் முழுக்க முழுக்க நகராட்சி ஆணையர் மற்றும் நகர நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும் எனவும் நகராட்சியில் பணிபுரியும் மற்ற ஊழியர்களைப் போல தூய்மை பணியாளர்களையும் நடத்திட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். மேலும் கொரோனா காலத்தில் மட்டும் அவர்களுக்கு பாத பூஜை செய்வது மாலை போட்டு மரியாதை செய்வது மட்டும் போதுமானதாக இருக்காது.
எட்டுமணி நேர வேலை மற்றும் அவர்களுக்கு உரிய சமூக பாதுகாப்பு உள்ளிட்டவற்றை அளிப்பதே சிறந்த நிர்வாகத்திற்கான இலக்கணமாக இருக்க முடியும் என்றும் எல்லா வேலைகளையும் அடுக்கிய மூட்டையில் அடி மூட்டையாக இருக்கக்கூடிய தூய்மை பணியாளர்களை வைத்து செய்யலாம் என்று கருதுவதை திருவாரூர் நகராட்சி ஆணையர் கைவிட வேண்டும் எனவும் தொடர்ந்து இது போன்ற பணிகளை செய்யச் சொல்லி வற்புறுத்தினால் நகராட்சி ஆணையருக்கு எதிரான வலுவான போராட்டத்திற்கு செல்ல நேரிடும் எனவும் திருவாரூர் சிஐடியு மாவட்ட குழுவின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.
மேலும் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு புதிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. குறிப்பாக கழிவு நீர் சுத்தம் செய்தல் பாதாள சாக்கடை சுத்தம் செய்தல் குப்பைகள் எடுத்தல் போன்ற பல்வேறு பணிகளில் தூய்மைக் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். எனவே அதற்குரிய பாதுகாப்பு உபகரணங்களான கையுறை போன்ற பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டுகிறோம் என கோரிக்கை வைக்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்