மயிலாடுதுறை மாவட்டத்தில் வரலாறு காணாத மழை, அதிகபட்சமாக சீர்காழியில் 43 சென்டிமீட்டர் மழை பதிவு!
மயிலாடுதுறை மாவட்டத்தில் விடிய விடிய பெய்த அதீத கனமழையால் சீர்காழியில் 43 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது, இதனால் மாவட்ட முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
தமிழகத்தில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்ததை அடுத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதே போன்று மயிலாடுதுறை மாவட்டத்திலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்றுமுன்தினம் இரவு தொடங்கிய மழையானது தற்போது வரை தொடர்ந்து நீடித்து வருவதாலும், மேலும் நாளை மழை தொடரும் என்பதால் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் இன்று நவம்பர் 12 மற்றும் 13 ஆகிய இரண்டு நாட்களுக்கு வடகிழக்கு பருவ மழை மிக கன மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வுத்துறை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்க வேண்டும், யாரும் நீர்நிலைகளுக்கு குளிக்க செல்லக் கூடாது. மின் கம்பங்களை தொடக்கூடாது. கொதிக்க வைத்த குடிநீர் அருந்த வேண்டும். என மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் பதிவான மழை அளவுகள் கடந்த அக்டோபர் 01 -ஆம் தேதி முதல் 31 -ஆம் தேதி வரை மயிலாடுதுறை மாவட்டத்தில் 172 மி.மீ மழையளவும், மணல்மேடு 65 மி.மீ மழையளவும், சீர்காழியில் 128.7 மி.மீ மழையளவும், கொள்ளிடத்தில் 98.6 மி.மீ மழையளவும், தரங்கம்பாடியில் 61.2 மி.மீ மழையளவும் பதிவாகியுள்ளது. தொடர்ந்து கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சீர்காழியில் 43 சென்டிமீட்டர் ( 436.2 மில்லிமீட்டர்) மழையும் குறைந்த பட்சமாக மணல்மேடில் 160 மில்லிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது மயிலாடுதுறையில் 161.60 மி.மீ மழையளவும், கொள்ளிடத்தில் 316.8 மி.மீ மழையளவும், தரங்கம்பாடியில் 184 மி.மீ மழையளவும் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து இன்றும் மற்றும் நாளை மறுநாளும் மிக மற்றும் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனால் மிகவும் கவனத்துடன் பொதுமக்கள் இருக்க வேண்டும் எனவும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவசர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளாது எனவும், பொதுமக்கள் தங்கள் குறைகளை 04364-222588 – 9487544588 என்ற எண்ணிலும் 8148917588 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த வரலாறு காணாத மழை பதிவு மற்றும் தொடரும் மழையால் மிகுந்த அச்சத்திற்கு பொதுமக்கள் ஆளாகியுள்ளனர். மேலும் மாவட்டம் முழுவதும் பல வீடுகளில் தண்ணீர் புகுந்தும், சம்பா பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கியதால் விவசாயிகளும், பொதுமக்களும் வேதனை அடைந்துள்ளனர். பல இடங்களில் மரங்கள் முறிந்தும், மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதால் போக்குவரத்து மற்றும் மின்சாரம் தடைபட்டுள்ளது.
மேலும் மழை தொடர்பான பல செய்திகளை காண :
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற