நெல் கொள்முதல் நிலையத்தில் 1000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசம்!
மயிலாடுதுறையில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து, கிடங்குக்கு அனுப்பப்படாமல் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கியிருந்த 1000 நெல்மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்து சேதம் அடைந்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் அக்டோபர் 28ஆம் தேதி தொடங்கியது. அன்று முதல் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டின் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் புதுச்சேரி கடலூர் மயிலாடுதுறை திருவாரூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த 3 நாட்களுக்கும் மேலாக இரவு பகல் பாராது கன மழை கொட்டி வருகிறது.
இந்நிலையில் காவிரி கடைமடை மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் விவசாயம் மீன்பிடி தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறையில் பயிரிடப்பட்டுள்ள என்பது ஆயிரம் ஏக்கர் சம்பா சாகுபடி மழை நீரில் மூழ்கி அழுகி வீணாகும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளது. அதேபோன்று மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களில் கடல் சீற்றம் காரணமாக கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி மீனவர்கள் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் தங்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.
இந்த சூழலில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பெரம்பூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு, குறுவைப்பருவத்துக்கான நெல் கொள்முதல் தொடங்கி கடந்த அக்டோபர் 6- ஆம் தேதி முழுவதுமாக கொள்முதல் நிறுத்தப்பட்டது. ஆனால், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல், கிடங்குக்கு அனுப்பப்படாமல் 5000 மூட்டைகளுக்குமேல் கொள்முதல் நிலையத்திலேயே அடுக்கி வைத்துள்ளனர். இந்த கொள்முதல் நிலையத்தில் மேற்கூறை வசதி உள்ளபோதிலும், கூடுதலாக உள்ள 3000 மூட்டை நெல் திறந்தவெளியில் அடுக்கப்பட்டுள்ளது. இவற்றைப் பாதுகாக்க அரசு போதுமான அளவில் தார்ப்பாயை வழங்காததால், ஏற்கெனவே இருக்கின்ற தார்ப்பாய்களை வைத்து முடிந்தவரை நெல்மூட்டைகளை கொள்முதல் நிலைய ஊழியர்கள் பாதுகாத்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
Watch Video | நடு இரவு..! கொட்டும் மழை! நிற்காத பணி! நெகிழ வைக்கும் சென்னையின் தூய்மை பணியாளர்கள்!
இருப்பினும், 1000 மூட்டைகளுக்கு மேல் மழையில் நனைத்து முளைத்து வீணாகியுள்ளது. இதனால் அந்த நெல்மூட்டைகள் பசும்புல் போர்த்தியது போல பச்சை நிறத்தில் காட்சியளிக்கிறது. மழையில் நனைந்து மீதம் உள்ள நெல் மூட்டைகளும் வீணாவதற்கு முன்பாக அவற்றை லாரிகள் மூலம் கிடங்குக்கு கொண்டு சென்று, அரசுக்கு நஷ்டம் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும் என்று நுகர்பொருள் வாணிபக்கழகத்துக்கு அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.