ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு பூர்வாங்க பூஜைகள் தொடக்கம்
கும்பகோணத்தில் உலக பிரசித்தி பெற்ற ஆதிகும்பேஸ்வரர் கோயில் உள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகாமகம் விழாவில் தொடர்புடை முதன்மை கோயில் ஆகும்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு பூர்வாக பூஜைகள் தொடங்கின. வரும் 27ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்குகிறது.
கும்பகோணத்தில் உலக பிரசித்தி பெற்ற ஆதிகும்பேஸ்வரர் கோயில் உள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகாமகம் விழாவில் தொடர்புடை முதன்மை கோயில் ஆகும். இக்கோயிலில் மந்திர பீடேஸ்வரி என்ற மங்களாம்பிகை அம்பாளுடன் ஆதி கும்பேஸ்வரர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
இந்த கோயிலில் கடந்த 2009ம் ஆண்டு குடமுழுக்கு விழா நடந்தது. இதையடுத்து வரும் 1-ந் தேதி குடமுழுக்கு நடக்கிறது. இதற்காக கடந்த 2023-ம் ஆண்டு பாலாலயம் செய்யப்பட்டது. தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக கோயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கோயில் திருப்பணிகள் 200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கொண்டு நடந்து வருகிறது. கோபுரங்களில் பொறுத்துவதற்காக தங்கமுலாம் பூசப்பட்ட கலசங்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும் ராஜகோபுரம், புதிய கொடிமரம், சுவாமி விமானங்கள், மண்டபங்களின் தூண்கள், மதில் சுவர்கள், தரைத்தளம் ஆகியவை சீரமைக்கும் பணிகள் நடந்து முடிந்துள்ளது.
குடமுழுக்கு விழாவை முன்னிட்டு வரும் 27-ந் தேதி (வியாழக்கிழமை) யாகசாலை பூஜைகள் தொடங்குகிறது. தொடர்ந்து 1-ந் தேதி அதிகாலை வரை 8 கால யாக சாலை பூஜைகள் நடக்கிறது. குடமுழுக்கு விழாவிற்காக பூர்வாங்க பூஜைகள் தொடங்கியது. இதற்காக கும்பேஸ்வரர் சன்னதியில் புதிய கொடி மரம் அருகே சிறப்பு யாக குண்டம் அமைக்கப்பட்டது. பின்னர் தேவதா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, எஜமான் அனுக்ஞை, கணபதி ஹோமம், திரவ்யாஹூதி நடந்தது. தொடா்ந்து 6 காலம் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர் கலசங்கள் புறப்படாகி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து நேற்று மாலை விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.
இந்நிகழ்ச்சியில் கோயில் செயல் அலுவலர் முருகன், அறங்காவலர் குழு தலைவர் பாலசுப்பிரமணியன், அறங்காவலர்கள் சங்கர், சிதம்பரநாதன், ராணி தனபால், சிவானந்தம் மற்றும் கோயில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பூர்வாங்க பூஜையில் போலந்து நாட்டை சேர்ந்த சுற்றுலா பணிகள் கலந்து கொண்டனர். மேலும் அவர்கள் கோயில் வளாகத்தில் உள்ள சிற்பங்கள் ஓவியங்கள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டனர்.






















