Thiruvarur : பருத்தியை படுத்தி எடுத்த பூச்சிகள்: 10 ஆயிரம் ஏக்கர் விவசாயம் பாதிப்பு!
Thiruvarur district : சப்பாத்தி பூச்சி, அஸ்வினி பூச்சி, இலைப்பேனு பூச்சி போன்ற பூச்சிகள் பருத்தி பயிர்களை தாக்கி வருவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் பருத்தி பயிர்களில் பூச்சித் தாக்குதல். பத்தாயிரம் ஏக்கர் பருத்தி பயிர்கள் பாதிப்பு. 50 சதவிகித மானிய விலையில் பூச்சி மருந்து வழங்க விவசாயிகள் கோரிக்கை.
காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர் தஞ்சாவூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை சம்பா தாளடி என 3 போகம் நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் இந்த ஆண்டு கோடை சாகுபடியில் பருத்தி சாகுபடி பணிகளில் விவசாயிகள் அதிக அளவில் ஈடுபட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு 40 ஆயிரத்து 695 ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். மாசி பட்டத்தில் பருத்தி பயிரிட்ட விவசாயிகள் அப்போது பெய்த கனமழையின் காரணமாக பருத்தி பயிர்கள் அழகி பாதிக்கப்பட்டவுடன் மீண்டும் தை மாதத்தில் பருத்தி பயிர் செய்தனர். அப்போது பருத்தி பயிரிடப்பட்டு 40 நாட்கள் ஆன நிலையில் இலை வைத்து நன்றாக வளர்ந்து வந்த நிலையில் எதிர்பாராவிதமாக பெய்த கனமழையின் காரணமாக பருத்தி வயலில் முழுவதுமாக மழைநீர் தேங்கி பயிர்கள் அழுகி சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி பயிர்கள் பாதிக்கப்பட்டன.
அதிலிருந்தும் மீண்டு வந்து விவசாயிகள் பருத்தி பயிர்களை பராமரித்து வந்த நிலையில் தற்போது பருத்தி பயிர்கள் காய் வைத்த பூ பூத்து நன்றாக வளர்ந்து வந்துள்ளது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பருத்தி பயிர்களில் பூச்சித் தாக்குதல் என்பது காணப்படுகிறது. சப்பாத்தி பூச்சி, அஸ்வினி பூச்சி, இலைப்பேனு பூச்சி போன்ற பூச்சிகள் பருத்தி பயிர்களை தாக்கி வருவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். இந்தப் பூச்சி தாக்குதல் காரணமாக காய்கள் கொட்டி பாதிக்கப்படக் கூடிய நிலை உருவாகும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக மேல கூத்தங்குடி, கீழ கூத்தங்குடி, கமலாபுரம், கண்கொடுத்தவனிதம், நன்னிலம், குடவாசல், கூடுர், அம்மையப்பன், கள்ளிக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பத்தாயிரம் ஏக்கர் பருத்தியில் இந்தப் பூச்சி தாக்குதல் என்பது காணப்படுகிறது.
பருத்தி பயிரிட்ட நாள் முதல் பல்வேறு இன்னல்களுக்கும் இடர்பாடுகளுக்கும் இயற்கைச் சீற்றங்களுக்கும் இடையில் ஏக்கருக்கு இதுவரை 20 ஆயிரம் வரை செலவு செய்து பருத்தி பயிரிட்டு பராமரித்து வரக்கூடிய நிலையில் இந்த பூச்சி தாக்குதல் என்பது விவசாயிகளிடையே மேலும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு ஏக்கருக்கு பூச்சிமருந்து அடிக்க வேண்டுமென்றால் இரண்டாயிரம் ரூபாய் செலவாகும் நிலை உள்ளது எனவே அரசு இந்தப் பூச்சி தாக்குதலுக்கான காரணத்தை வேளாண் அதிகாரிகளைக் கொண்டு ஆய்வு செய்து அதற்கான பூச்சி மருந்தை 50 சதவீத மானிய விலையில் வழங்க வேண்டும் எனவும் மேலும் பருத்தி பயிர்களுக்கு ஊட்டச்சத்து மருந்துகளையும் மானிய விலையில் வழங்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர். அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு உளுந்து பயிர் சாகுபடிக்கு காப்பீடு தொகையை விவசாயிகள் கட்டியும் இதுவரை காப்பீட்டுத் தொகை என்பது விவசாயிகளுக்கு வழங்கப்படாமல் உள்ளது பல்வேறு பொருளாதார சிக்கல்களுக்கு இடையில் விவசாய பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டுத் தொகையை உடனடியாக மாவட்ட நிர்வாகம் பெற்றுத்தர வேண்டும் எனவும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.