மயிலாடுதுறையில் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் ராமச்சந்திரன்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பூம்புகார் சுற்றுலா தளங்களில் நடைபெறும் மேம்பாட்டு பணிகள் விரைவில் முடிவுற்று மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த புகழ்பெற்ற டேனிஷ் கோட்டை சுற்றுலாத் துறை சார்பில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதுபோன்று தரங்கம்பாடியில் தொல்லியல் துறை மூலம் ஆளுநர் மாளிகை 4.17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணி, அருங்காட்சியகம் 3 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தும் பணி என மொத்தம் 10.17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதுபோன்று பூம்புகாரின் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலா தளத்தை பல்வேறு உள்கட்டமைப்புகளுடன் கூடிய உலக தரத்தில் மேம்படுத்துவதற்கான பணிகள் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பாக 23 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடந்த ஏப்ரல் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, திருக்கடையூரில் தமிழ்நாடு தங்கும் விடுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் சுற்றுலாத்துறை மானியக் கோரிக்கையின்போது, மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் 1620-ஆம் ஆண்டு கட்டப்பட்ட டேனிஷ் கோட்டை 3 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இப்பணிகள் இந்த வாரம் துவங்கி, பொதுமக்கள் பார்ப்பதற்காக மிக சிறப்பாக புனரமைக்கப்படும். மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பூம்புகாரில் 23.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உலக சுற்றுலாத் தளத்திற்கு இணையாக பூம்புகார் சுற்றுலாத் தளம் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி ஆறு மாதங்களில் நிறைவடையும் என தெரிவித்தார். ஆய்வின்போது, சுற்றுலா இயக்குநர் சந்தீப் நந்தூரி, மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த் குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.