ஆக.31க்குள் தடுப்பூசி போடாவிட்டால் வர்த்தகர்கள் மீது நடவடிக்கை பாயும்- மயிலாடுதுறை ஆட்சியர்
மயிலாடுதுறையில் வர்த்தகர்கள் ஆக.31-க்குள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சிக்கு உள்பட்ட அனைத்து வர்த்தக நிறுவன உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களும் இந்த மாத இறுதிக்குள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது: மயிலாடுதுறை மாவட்டத்தில் எதிர்வரும் ஆகஸ்ட் 31 தேதிக்குள் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிக்கு உள்பட்ட அனைத்து வர்த்தக நிறுவன உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களும் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் ஆய்வின்போது வர்த்தக நிறுவன உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான உரிய ஆவணத்தை காண்பிக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி போட்டுகொள்ளாமல் வர்த்தக நிறுவனங்களில் ஊழியர்கள் பணிபுரிவது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட வர்த்தக நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் லலிதா தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடத்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், மூன்று அலை ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட கூடாது என்ற நோக்கத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது வரை மாவட்டத்தில் 21 ஆயிரத்து 677 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு அதில் 21 ஆயிரத்து 156 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 244 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே தீர்வு என மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகிறது. அதனைத் தொடர்ந்து ஒருங்கிணைந்த மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று வரை 5 லட்சத்து 15 ஆயிரத்து 703 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும், முதல் தவணை தடுப்பூசியை 4 லட்சத்து 43 ஆயிரத்து 887 பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசியை 71 ஆயிரத்து 816 பேரும், கோவாக்சின் தடுப்பூசியை 52 ஆயிரத்து 577 பேரும், கோவிஷீல்ட் தடுப்பூசியை 4 லட்சத்து 63 ஆயிரத்து 126 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் நோக்கில் மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. அதன் காரணமாக தற்போது வர்த்தக நிறுவனங்களுக்கு தடுப்பூசி கட்டாயம் என்பதை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஆனால் இது குறித்து பொதுமக்கள் சிலர் கூறுகையில் தடுப்பூசி குறித்து இன்னும் முழுமையான ஒரு அறிக்கை இல்லாத நிலையில் பொதுமக்களுக்கு கட்டாயத்தின் பேரில் தடுப்பூசி வழங்குவது என்பது மிகவும் கண்டனத்துக்கு உரியது என்றும் கருத்து தெரிவித்து உள்ளனர்.