மைத்துனர் மனைவிக்கு பேரூராட்சி தலைவர் பதவி - பூம்புகார் திமுக எம்.எல்.ஏவை கண்டித்து பதவியை ராஜினாமா செய்த நிர்வாகி
தம்பதியினர் இருவரும் கூட்டாக தங்கள் பதவியை ராஜினாமா செய்தது திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் பதவி தனது மனைவிக்கு கிடைக்காததால் தரங்கம்பாடி பேரூராட்சி திமுக செயலாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக வெற்றிவேல் என்பவர் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக திமுகவின் செயலாளராக கட்சி பதவி வகித்து வருபவர் வெற்றிவேல். இவரது மனைவி சரஸ்வதி, 2001 ஆம் ஆண்டு முதல் 2006 வரை தரங்கம்பாடி பேரூராட்சி தலைவராக மக்களால் நேரிடையாக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகித்தவர். இந்நிலையில் தற்போது நடந்து முடிந்த தரங்கம்பாடி பேரூராட்சி தேர்தலில் 13 ஆவது வார்டு கவுன்சிலராக வெற்றி பெற்றுள்ளார்.
மேலும் தரங்கம்பாடி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் திமுக கூட்டணி 16 வார்டுகளை கைப்பற்றினர். இந்த சூழலில் தரங்கம்பாடி பேரூராட்சி தலைவராக பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பாளருமான நிவேதா.முருகனின் உறவினர் சுகுணசங்கரி வெற்றி பெற்றார். இதனையடுத்து பாரம்பரியமிக்க திமுக குடும்பத்தை சேர்ந்த தரங்கம்பாடி பேரூர் கழக செயலாளர் வெற்றிவேலும் 13 ஆவது வார்டு கவுன்சிலராக வெற்றி பெற்ற அவரது மனைவி சரஸ்வதியும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர்.
இது குறித்து தரங்கம்பாடி பேரூர் திமுக செயலாளர் வெற்றிவேல் கூறுகையில், தரங்கம்பாடி பேரூராட்சி திமுக. செயலாளராக கடந்த 10 ஆண்டுகளாக கட்சி பணியாற்றி வந்த எனக்கு கடந்த 2001, 2006 பேரூராட்சி தலைவர் பதவிக்கு எனது மனைவி சரஸ்வதிக்கு நேரடியாக போட்டியிட்டு தலைவராக தேர்ந்தெடுத்து மக்கள் பணியாற்றினார். இந்நிலையில் தற்போது திமுக ஆட்சி அமைந்து உள்ள இந்த நேரத்தில் எனது மனைவி சரஸ்வதிக்கு மீண்டும் தலைவர் பதவிக்காக வாய்ப்பு கேட்ட போது திமுக. மாவட்ட பொறுப்பாளரும், பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா.முருகன் தலைவர் பதவிக்கு வாய்ப்பளிக்காமல், அவரது மைத்துனர் மனைவி சுகுண சங்கரி என்பவரை தலைவராக தேர்ந்தெடுத்துள்ளனர்.
இதுகுறித்து தொகுதி பொறுப்பாளரான அமைச்சர் மெய்யநாதனை தொடர்பு கொண்டு கேட்டபோது துணை தலைவர் பதவியை மாவட்ட பொறுப்பாளர் வழங்குவார் என்று தெரிவித்தார். ஆனால் துணை தலைவர் பதவியும் வழங்கவில்லை என்றும், இதுகுறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்ல முயற்சிகள் மேற்கொண்டும் எந்த பலனும் கிடைக்காததால் தனது பேரூராட்சி செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து தரங்கம்பாடி பேரூராட்சி 13 வது வார்டு கவுன்சிலராக வெற்றி பெற்ற சரஸ்வதி தனக்கு பேரூராட்சி தலைவர் ஆகும் வாய்ப்பை மாவட்ட பொறுப்பாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா.முருகன் வழங்காததை கண்டித்து தானும் கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார். அதிமுக ஆட்சி காலத்தில் பேரூராட்சி தலைவராக இருந்தபோது புதிய பேருந்து நிலையம் கொண்டு வந்தது திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை கொண்டு வந்தது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். தம்பதியினர் இருவரும் கூட்டாக தங்கள் பதவியை ராஜினாமா செய்தது திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.