அய்யா இந்தாண்டாவது முழுமையா தூர்வாருங்யா....மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் கோரிக்கை
மயிலாடுதுறை மாவட்டத்தில் நீர்வளத்துறை தூர்வாரும் திட்டப்பணிகள் 2023-24 திட்டத்தின்கீழ் தூர்வாரும் பணியை மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்துள்ளார்.
மேட்டூர் அணையில் திறக்கப்படும் காவிரி தண்ணீர் விவசாய பயன்பாட்டிற்காக தங்கு தடை இன்றி செல்வதற்காக தமிழகம் முழுவதும் உள்ள வாய்க்கால்களை தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் தூர்வாரி வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் நீர்வளத்துறை தூர்வாரும் திட்டப்பணிகள் 2023-24 ன் கீழ் காவிரி ஆறு, மகிமலையாறு, மஞ்சளாறு, வீரசோழனாறு, மண்ணியாறு, அய்யாவையனாறு, விக்ரமனாறு, மற்றும் தெற்குராஜன் ஆறுகளில் பிரியும் வாய்க்கால்கள் மற்றும் வடிகால்கள் தூர்வாரும் பணிகள் இன்று தொடங்கப்பட்டது.
தரங்கம்பாடி தாலுக்கா மேமாத்தூர் கிராமத்தில் வாழ்க்கை வாய்க்கால் தூர்வாரும் பணியை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதாமுருகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதன் மூலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் 8.06 கோடி மதிப்பீட்டில் 749.74 கி.மீட்டர் தூரம் 51 தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறியதாவது:
ஆட்சியர் பேட்டி:
பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தூர்வாரும் பணி முறையாக நடைபெற விவசாயிகள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் 5 முன்னோடி விவசாயிகள் மற்றும் உதவி செயற்பொறியாளர், வேளாண் அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் கொண்ட குழுக்கள் 51 பணிகளுக்கும் தனித்தனியே அமைக்கப்பட்டு, பணியை மேற்பார்வை செய்ய உள்ளதாகவும், மேலும், தமிழக அரசு இந்தாண்டு தூர்வாரும் பணியை கண்காணிக்க புதிய ஆப் அறிமுகப்படுத்தி தினந்தோறும் நடைபெறும் பணிகளை பதிவு செய்வதன் முலம் அரசு இந்த பணிகளை நேரடியாக கண்காணிக்க முடியும். இதனால், விரைவாக பணிகள் முடிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மேலும், தூர்வாரும் பணியில் குறைகள் இருந்தால் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் கருத்து:
இந்நிலையில் இதுகுறித்து இம் மாவட்ட விவசாயிகள் சிலர் கூறுகையில், ஆண்டுதோறும் தமிழக அரசு தூர்வாரும் பணியினை மேற்கொண்டு வருகிறது. ஆனால் தூர்வாரும் பணி என்பது பெயரளவில் மட்டுமே பல கோடி ரூபாய் செலவில் செய்யப்படுவதாகவும் அதனால் விவசாயிகளுக்கு எந்த ஒரு பயனும் இல்லை என்றும், ஒவ்வொரு முறையும் பிரதான வாய்க்கால்களான ஏ மற்றும் பி வாய்க்கால்கள் மட்டும் தூர் வாருவதாகவும், அதன் காரணமாக கிளை வாய்க்கால்களான சி மற்றும் டி வாய்க்கால்கள் பெரும்மளவு தூர்வாரமால் விட்டு விடுகின்றனர்.
இதனால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு காவிரி நீர் கிடைக்காமல் தண்ணீர் வீணாக கடலில் சென்று கலந்து வருகிறது. அதுமட்டுமின்றி மழை காலத்தில் சி மற்றும் டி வாய்க்கால்கள் தூர்வாரமால் விட்டு விடுவதால் வடிகால் வசதியும் இன்றி மழை நீர் வடிய வழியின்றி பயிர்கள் ஆண்டு தோறும் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது. இது போன்ற பிரச்சனைகளை கருத்தில் கொண்டு சாலையோர உள்ள பிரதான வாய்க்கால்களை மட்டும் தூர்வாரி மக்களையும், விவசாயிகளையும் ஏமாற்றாமல், அனைத்து வாய்க்கால்களையும் முறையாக தூர்வாரி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் வைத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்