Mayiladuthurai: 50 வருசத்துக்கு முன்னாடி காலேஜ் லைஃப் எப்படி இருந்துச்சு தெரியுமா? - மயிலாடுதுறையில் நெகிழ்ச்சி
மயிலாடுதுறையில் 50 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் கல்லூரி மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கல்லூரி காலத்தில் எடுத்துக்கொண்ட குழு புகைப்படத்தை பார்த்து ஆனந்த கண்ணீர் வடித்த நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த மன்னம்பந்தல் கிராமத்தில் தனியார் ஏவிசி கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் 1970 - 1973 -ஆம் ஆண்டுகளில் வேதியியல் பிரிவில் 35 மாணவர்கள் பயின்றுள்ளனர். இவர்களில் பெரும்பான்மையானோர் அரசு மற்றும் தனியார் பணிகளில் பணியாற்றி தற்போது ஓய்வு பெற்றுள்ளனர். பலர் விவசாயிகளாகவும், தொழிலதிபர்களாகவும் உள்ளனர். இந்த சூழலில் 50 ஆண்டுகள் உருண்டோடிய நிலையில் அப்போது வேதியியல் பிரிவில் பயின்ற மாணவர்களில் ஒருவரும், அஞ்சல்துறை அதிகாரியுமான சாமி.கணேசன் என்பவர் மீண்டும் தன்னுடன் பயின்ற நண்பர்களை ஒன்றாக காண ஆசைப்பட்டுள்ளார்.
அதனை நிறைவேற்றும் வண்ணம் அவர் தீவிரமாக முயன்று, தன்னுடன் பயின்ற தனது வகுப்பு மாணவர்களின் முகவரியை கண்டுபிடித்துள்ளார். அதில், 5 மாணவர்கள் இறந்தது தெரியவந்ததுடன், 5 பேரின் முகவரியை கண்டுபிடிக்க முடியவில்லை. அதனைத் தொடர்ந்து, 50 ஆண்டுகளுக்கு முன்பு பயின்ற முன்னாள் மாணவர்கள் 20 பேரையும் ஒன்று இணைக்கும் விதமாக அவர்கள் பயின்ற ஏவிசி கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிமை ஏற்படும் செய்து, அதனை அடுத்து அவர்கள் ஒன்று கூடி தங்கள் கல்வி பயின்று முடித்து கல்லூரியில் 50 ஆண்டுகள் நிறைவடைந்த பொன்விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.
அப்போது முன்னாள் மாணவர்கள் தங்களுக்கு கல்வி பயிற்றுவித்த தங்களது ஆசான் அப்போதைய வேதியியல் துறைத் தலைவர் விஸ்வநாதனுக்கு மரியாதை செய்தனர். தொடர்ந்து அவர்கள் ஏவிசி கல்லூரி வேதியியல் துறையில் பயிலும் இந்நாள் மாணவர்களுக்கு கணினி உள்ளிட்ட உபகரணங்களை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்கள் தங்களது பசுமை மாறாத நினைவுகளை அப்போது ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமல் போன மாணவர்கள், வீடியோ காலிங் மூலம் தங்களது கல்லூரி தோழர்களை கண்டு மகிழ்ச்சியை தெரிவித்ததுடன், அடுத்த சந்திப்பில் அனைவரும் கலந்து கொள்வதாக உறுதி அளித்தனர்.
மேலும், கல்லூரி பயின்ற கடைசி நாளில் தாங்கள் எடுத்துக்கொண்ட குழுப்புகைப்படத்தினை பார்த்த அனைவரும் அரை நூற்றாண்டுக்குப் பிறகு ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் நாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கல்லூரியில் பயின்று பணிபுரிந்து தற்போது ஓய்வு பெற்ற நிலையில் இவர்கள் ஒன்று கூடிய சம்பவம் பார்ப்பவர்களை நிகழ்ச்சி அடைய செய்தது.
அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் அமைந்துள்ள சுவாமி கால சம்ஹாரமூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயனுக்காக எமனை சம்ஹாரம் செய்த இக்கோயிலில் சிறப்பு ஹோமம் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் ஆயுள் விருத்தி ஏற்படும் என்பது ஐதீகம் என்பதால் முன்னாள் மாணவர்கள் 20 பேர் தங்கள் குடும்பத்தினருடன் கோயிலுக்கு வந்திருந்து தங்கள் கல்வி பயின்று முடித்து 50 ஆண்டுகள் நிறைவடைந்த பொன்விழாவையொட்டி ஆயுள் விருத்தி வேண்டி சிறப்பு பூஜைகள் செய்து கள்ளவர்ண விநாயகர், ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர், காலசம்காரமூர்த்தி, ஸ்ரீ அபிராமி அம்மன் சன்னதிகளுக்கு சென்று வழிபட்டனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.