(Source: ECI/ABP News/ABP Majha)
’முடாக்கு முறை நடவு மூலம் கருப்பு கவுனி நெல் நடவு’- பறவைகளாலும் மழையாலும் பாதிக்காது என தகவல்
’’இந்த முறையினால், துார் அதிகம் வெடித்து, நெல்மணிகள் அதிகமாகும். விவசாய கூலி தொழிலாளர்களின் செலவும் குறையும்’’
தஞ்சையில் மூடாக்கு முறையை பின்பற்றி காகித நடவு மூலம் 6 ஏக்கரில் கருப்பு கவுனி ரக சம்பா பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது இந்த முறை நடவு செய்வதால் பறவைகள் மற்றும் மழை விதைநெல் சேதம் ஆவது தடுக்கலாம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு குறுவை சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது சம்பா சாகுபடி பணிகள் டெல்டா முழுவதும் தொடங்கியுள்ளது. தஞ்சையை அடுத்த சாமிபட்டி கிராமத்தில் ஆதித்தியன் என்பவருக்கு சொந்தமான 6 ஏக்கரில் தமிழ்நாட்டில் பழமையான மூடாக்கு முறையில், காகித நடவு செய்யப்பட்டுள்ளது.
இயந்திர நடவு அல்லது நேரடி விதைப்பு முறையில் சாகுபடி செய்யப்பட்டு வரும் நிலையில், தஞ்சை அடுத்த சாமிபட்டி கிராமத்தில், ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளில் பின்பற்றப்படும் மூடாக்கு முறையில், நவீன தொழிநுட்பத்தை பயன்படுத்தி, கருப்பு கவுனி நெல் ரகத்தை, பேப்பர் நடவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக விசேஷமாக நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட இயந்திரத்தை கொண்டு நடவு, செய்யும்போது 6 அங்குலம் இடைவெளி விட்டு நான்கு வரிசையாக ஒரே நேரத்தில் விதை நெல் நடவு செய்யப் படுவதோடு, நடவு செய்யப்படும் இடத்தை மேலே காகிதம் கொண்டு மூடப்டுகிறது. இந்த நடவு முறை மூடாக்கு நடைமுறையாகும். மூடாக்கு முறையில் நடவு செய்வதால் மகசூல் அதிகமாக கிடைப்பதோடு, மயில், கிளி உள்ளிட்ட பறவைகள் வயல்களில் விதை நெல்லை திண்பதும், சேதப்படுத்துவது தடுக்கப்படுகிறது.
மேலும், மழைக்காலங்களில் நடவு விலகாமல் வரிசைப்படுத்தி இருப்பதோடு மூடாக்கு முறை காகித நடவு பயன்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர். இது குறித்து பேப்பர் நடவு செய்யும் விவசாயி கூறுகையில், விவசாயத்தில் குறைவான செலவில் அதிக மகசூல் பெற வேண்டும், நஞ்சில்லா உணவு உற்பத்தி செய்ய வேண்டும் என்பதை இலக்காக கொண்டு, மூடாக்கு முறை எனும், காகித விதை நெல் நடவு முறையில் பணி நடைபெற்று வருகிறது. ஒரு ஏக்கருக்கு 5 கிலோ நெல் விதையை, காகிதத்தில் 6 செ.மீ இடைவெளியில் நெல்லை வைத்து மடிக்து பட்டாசு போல் சுருளாக மடிக்க வேண்டும். பின்னர் அதை அதற்காக உள்ள நவீன இயந்திரத்தில் பொருத்தி வயலில் உருட்டிக்கொண்டு நேரடியாக நடவு செய்யலாம்.
அந்த நெல் மணியிலிருந்து 6 நாளில் பருவம் வந்துவிடும், 15 வது நாளில் களையை எடுக்கலாம், இந்த முறையினால், துார் அதிகம் வெடித்து, நெல்மணிகள் அதிகமாகும். விவசாய கூலி தொழிலாளர்களின் செலவும் குறையும். ஆறு, வாய்க்கால் தண்ணீரை கொண்டு நடவு செய்யும் போது, பறவைகள் மற்றும் மழையினால் பெரும் சேதம் ஏற்பட்டு,நெற்பயிர்கள் நாசமாகி விடும். மேலும், போதுமான தண்ணீர் பற்றாகுறை ஏற்பட்டால், நெற்பயிர்கள் கருகி விளைச்சல் இல்லாமல் போய் விடும். இதனால் விவசாயிகளுக்கு மன உளைச்சலாவதுடன், பணம் மற்றும் நேரம் விரையமாகும். இதனை கருத்தில் கொண்டு, ஜப்பான் மற்றும் வெளிநாட்டில், நடைபெறும் பேப்பர் நடவுப்பணி செய்யும் முறையை கடந்த இரண்டு ஆண்டுகளாக செய்து வருகின்றோம். ரசாயன உரங்களை பயன்படுத்தியும், மழை அதிகம் பெய்யும் போது பூச்சி தாக்குதல் ஏற்பட்டு மகசூல் குறைவாக கிடைக்கும். சாகுபடி செலவும் அதிமாக இருந்தது. மேலும் கடுமையாக வெயில் அடித்தாலும் நெல் விதைகள், உலராமல், பேப்பர் மற்றும் வயல்களில் உள்ள ஈரத்திலிலேயே இருக்கும். மூடாக்கு முறை எனும் பேப்பர் நடவு மூலம் விதை நெல்லை காகிதத்தில் மடித்து நாடா போல் திரித்து வயலில் நடவு செய்வதற்கு, ஏக்கருக்கு 4500 ரூபாய் செலவானது.
ஒரு முறை மட்டுமே களை எடுத்து, ஒரு முறை இயற்கை உரம் தெளித்தால் போதுமானதாகும். இதற்கு ஏக்கருக்கு 7000 மட்டுமே செலவானது. தற்போது தமிழகத்தின் பாரம்பரியமான பழமையான கருப்பு கவுனி நெல் ரகத்தை நடவு செய்துள்ளோம். இது போன்ற பாரம்பரிய நெல்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் என்பதால், இனி வரும் காலங்களில் பாரம்பரிய நெல்லை பயிரிடுவதோடு மற்ற விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளேன். இது போன்ற நடவு செய்யும் முறை தமிழ்நாட்டில் பழமையான மூடாக்கு முறையாகும் என்றார்.