டெல்டா மாவட்ட மக்களின் 40 ஆண்டு கோரிக்கை நிறைவேற்றம்...நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் திறப்பு: அமைச்சர் பெருமிதம்
டெல்டா மாவட்ட மக்களின் 40 ஆண்டு கோரிக்கையான டெல்டா மாவட்டங்களுக்கென ஒரு கண்காணிப்புப் பொறியாளர் அலுவலகம் உருவாக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் நெடுஞ்சாலைத் துறை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள வட்ட அலுவலகத்தை (கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம்) உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் இன்று (02.10. 2025) திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் .எஸ்.கல்யாணசுந்தரம், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, சென்னை தலைமை பொறியாளர் (நெ) க (ம ) ப பொறி ஜி.சத்யபிரகாஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் திருவையாறு துரை.சந்திரசேகரன், தஞ்சாவூர் டி.கே.ஜி.நீலமேகம், கும்பகோணம் க.அன்பழகன், பட்டுக்கோட்டை கா.அண்ணாதுரை, பேராவூரணி என்.அசோக்குமார், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வட்ட அலுவலகத்தை திறந்து வைத்து உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதல்வர் உத்தரவின்படி, தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறையில் பணிகளை சிறப்பாக செயல்படுத்திடும் நோக்கில் டெல்டா மாவட்ட மக்களின் 40 ஆண்டு கோரிக்கையான டெல்டா மாவட்டங்களுக்கென ஒரு கண்காணிப்புப் பொறியாளர் அலுவலகம் உருவாக்கப்பட்டு 01.04.2025 அன்று முதல் தஞ்சாவூரை தலைமையிடமாக கொண்டு நெடுஞ்சாலைத் துறையில் வட்ட அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இப்புதிய வட்டத்தின் கீழ் 5 கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய 5 கோட்டங்களில் உள்ள அனைத்து அரசு சாலைகளில் உள்ள சாலைகள் மற்றும் பாலங்ளை கட்டுமானம் செய்யவும், பராமரிப்பு செய்யவும் பணிகளை தேர்வு செய்வதிலிருந்து முடிவுச் சான்றிதழ் வழங்குவது வரையிலான அனைத்து துறை நடைமுறைகளையும் செயல்படுத்தும் வட்ட அலுவலகம் இங்கு இன்று புதிய கட்டிடத்தில் திறக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் வட்டத்தில் தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை கோட்டங்களில் மாநில சாலைகள் - 1105 கி.மீ, மாவட்ட முக்கிய சாலைகள் 1057 கி.மீ, மாவட்ட இதர சாலைகள் 3524 கி.மீ என மொத்தம் - 5686 கி.மீ நீளமுள்ள சாலைகள் பராமரிக்கப்படுகிறது.
தஞ்சாவூர் வட்ட அலுவலகத்திற்கான உட்கட்டமைப்புகளை வசதிகளை ஏற்படுத்திட ரூ.2.50 கோடி மதிப்பில் 10000 சதுரஅடி பரப்பளவில் இருதளங்களுடன் கூடிய இப்புதிய கட்டிடம் நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்களால் தஞ்சாவூர் நகரில் கட்டப்பட்டு இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தஞ்சாவூர் கண்காணிப்பு பொறியாளர் (நெ) க (ம) ப பொறி.சீ.பாலசுப்பிரமணியன், தஞ்சாவூர் கோட்டப்பொறியாளர் நெடுஞ்சாலைத்துறை க(ம)ப செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.





















