ஊரை விட்டு ஒதுக்கியதால் தந்தை, மகன், மகள் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி...!
சீர்காழி ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததால் மனமுடைந்த மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் எலி மருந்தை குடித்து தற்கொலை முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த தொடுவாய் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் ராமையன். இவர் அதே கிராமத்தில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார், இந்நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்தில் பெண் ஒருவருடன் தவறான உறவில் இருந்ததாக கூறி இவரை ஐந்தாண்டுகள் தொடுவாய் கிராம பஞ்சாயத்தார்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.
இந்த சூழலில் தொடுவாய் கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஆடி மாத ஊர் திருவிழாவில் ராமையன் ஊர் கட்டுப்பாட்டை மீறி ஐந்தாண்டுகள் முடிவதற்குள் முன்னதாகவே கலந்து கொண்டுள்ளார். அப்போது அருகிலுள்ள மீனவ கிராமத்தினர் ராமையனுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளனர். இதனை அறிந்த கிராம நிர்வாகிகள் ஊர் கட்டுப்பாட்டை மீறி ஐந்தாண்டுகள் முடிவதற்குள் திருவிழாவில் கலந்துகொண்டதாக கூறி ராமையன் குடும்பம் மற்றும் அவரது சகோதரர்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களை மேலும் 20 ஆண்டுகள் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாக கூறியுள்ளனர்.
இதனால் மனமுடைந்த ராமையன் அவரது 15 வயது மகள் ரபினா, 11 வயது மகன் ரித்திஷ் ஆகிய மூவரும் எலி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதனை அறிந்த உறவினர்கள் மூன்று பேரையும் மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சீர்காழி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்துள்ளனர். இதுகுறித்து சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சக மனிதர்களை சக மனிதர்களே துன்புறுத்துவது நிலையானது இந்த பேரிடர் காலத்திலும் தொடர்ந்து வருகிறது. தவறை சட்டபூர்வமாக அணுகாமல், கிராம பஞ்சாயத்த்தை சேர்ட்ந்த நபர்கள் அவரை தண்டிப்பதாக நினைத்து, சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு அவருடன் தொடர்புடைய ராமையன் மட்டுமின்றி அவரது குடும்பத்தினரையும் சட்டத்திற்கு புறம்பாக தண்டித்துள்ளனர். இதனை ஏற்க முடியாத காரணத்தாலேயே ராமையன் தனது மகள் மற்றும் மகனுடன் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கிராம பஞ்சாயத்துகளால் சட்டத்திற்கு புறம்பாக பலர் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்படுவது அப்பகுதி வழக்கமாக நடைபெறும் நிகழ்வுகளின் ஒன்றாக மாறிவிட்டதால் இந்த பிரச்னையில் அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.
மாநில உதவிமையம்- 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்-044-24640050