தஞ்சாவூர் மாவட்டத்தில் கொள்முதல் நிலையத்தில் பணியாற்ற இளைஞர்களுக்கு நேர்முகத்தேர்வு
’’டிகிரி படித்து விட்டு தகுதியான வேலை கிடைக்காததால், இப்பணிக்கு வந்துள்ளோம். நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டவர்களில் தகுதியின் அடிப்படையில் பணி வழங்கப்பட உள்ளது’’
தஞ்சாவூர் மாவட்டத்தில் வரும் சம்பா, தாளடி நெல் பருவத்தில் 650 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளது. இந்த கொள்முதல் நிலையங்களில் பணியாற்ற பருவகால அடிப்படையில், பட்டியல் எழுத்தர், உதவியாளர், காவலர் ஆகியோர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கான அறிவிப்பு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது பட்டியல் எழுத்தர் பணிக்கான நேர்முகத் தேர்வு, தஞ்சாவூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. நேற்று மட்டும் 460 இளைஞர்கள் பங்கேற்றனர். நீண்ட வரிசையில் காத்திருந்த அவர்களது சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, நேர்முகத் தேர்வு நடைபெற்றது.
இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் கூறுகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் வரும் சம்பா, தாளடி நெல் பருவத்தில் 650 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளது. தற்போது 309 கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இதுவரை 2,18,784 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கொள்முதல் நிலையங்களுக்கு பணியாற்ற தேவையான பணியாளர்கள் தேர்வுக்கு அறிவிப்பு செய்யப்பட்டது. இதில் 1,317 பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. நேர்முகத் தேர்வு 24, 25, 27 ஆகிய தினங்களில் நடைபெறுகிறது. தேர்வானவர்களுக்கு பின்னர் பணி நியமன ஆணை வழங்கப்படும். நேர்முகத்தேர்வுக்கு வந்திருப்பவர்கள் அனைவரையும் தகுதியின் அடிப்படையில் பணி வழங்கப்படும் என்றனர்.
இது குறித்து நேர் முகதேர்வில் கலந்து கொண்டவர்கள் கூறுகையில், டிகிரி படித்து விட்டு தகுதியான வேலை கிடைக்காததால், இப்பணிக்கு வந்துள்ளோம். நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டவர்களில் தகுதியின் அடிப்படையில் பணி வழங்கப்பட உள்ளது. இதில் அரசியல்வாதிகளின் தலையீடு இல்லாமல், தகுதியிலுள்ளவர்களுக்கு பணி வழங்க வேண்டும். இங்கு வந்திருக்கும் பெரும்பாலானோர் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள். தங்களது குடும்பத்தை காப்பாற்ற வேண்டும், படித்த படிப்பிற்கு தகுதியான வேலை வேண்டும் என்பதற்காக வந்துள்ளோம். எங்களின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு, தகுதி உள்ளவர்களுக்கு பணி வழங்க வேண்டும். கடந்த காலங்களில் அரசியல்வாதிகளின் தலையீடு இருந்ததால், அவர்களது கட்சியை சேர்ந்தவர்களுக்கும், அதிகாரிகளுக்கு வேண்டியவர்களுக்கும் பணி வழங்கப்பட்டது.
இதனால் படித்த, ஏழ்மையில் உள்ளவர்கள், அரசியல் செல்வாக்கு இல்லாதவர்கள் ஏராளமான இளைஞர்கள் வேலை கிடைக்காமல் போய் விட்டது. எனவே, மாவட்ட நிர்வாகம், நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டவர்களில் எந்தவிதமான தலையீடு இல்லாமல் நேர்மையான முறையில் தேர்வு செய்து, தகுதியின் அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்றனர்.