மயிலாடுதுறையில் 1000 மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்க தருமபுரம் ஆதீனம் முடிவு
’’ஏற்கெனவே தருமபுரம் ஆதீனம் சார்பில் கொரோனா காலத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்கள், உணவு, மற்றும் மருத்துவ சாதனங்களை இலவசமாக அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது’’
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீனம். இந்த ஆதீனத்தின் 27 ஆவது மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் இருந்து வருகிறார். இந்நிலையில் தருமபுரம் 26 ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முக்தி அடைந்ததை அடுத்து மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் தருமபுரம் ஆதீனத்தின் மடாதிபதியாக பொறுப்பேற்றார்.
அவர் பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு நற்காரியங்களில் ஈடுபட்டு வருகிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஆக்சிஜன் சிலிண்டர்கள், உணவு, மற்றும் மருத்துவ சாதனங்களை இலவசமாக அரசு மருத்துவமனைக்கு வழங்கினார். மேலும் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான கல்லூரிகளில் கொரோனாவால் பாதித்தவர்களுக்கு சிகிச்சை மையம் அமைத்து கொடுத்தார். தற்போது பல்வேறு கோயில்களின் கும்பாபிஷேகம் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
இந்த சூழலில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான குருஞானசம்பந்தர் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் இந்த கல்வியாண்டில் 1000 மாணவர்களைச் சேர்த்து, அவர்களுக்கு இலவச கல்வி வழங்க தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகா சந்நிதானம் முடிவெடுத்தார். இதனை அடுத்து, அதனை நடைமுறைப்படுத்தும் விதமாக விஜயதசமி தினத்தன்று இப்பள்ளியில் நடைபெற உள்ள மாணவர் சேர்க்கையின்போது மாணவர்களை பள்ளியில் சேர்க்க தருமபுரம் ஆதீனத்தில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவுக்குள் உள்ள அகரஅன்னவாசல், அரும்பூர், விளநகர், மணக்குடி, பால்பண்ணை, மூங்கில் தோட்டம் உள்ளிட்ட கிராமங்களுக்குச் சென்று அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் வெங்கடேசன் தலைமையில் பள்ளி ஆசிரியர்கள் துண்டு பிரசுரங்களை வழங்கி பெற்றோருக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர்.
மேலும், தருமபுரம் ஆதீனத்தால் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு வழங்கப்படும் நலஉதவிகள் மற்றும் தமிழக அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை ஒலிப்பெருக்கி மூலம் பெற்றோருக்கு விளக்கினர். 1000 மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்க பள்ளி நிர்வாகத்தினர் வீடுவீடாக சென்று அழைப்பு விடுத்து வருவதை கண்ட கிராம மக்கள் மற்றும் சமுக ஆர்வலர்கள் கல்வியை வியாபாரமாக பலர் செய்துவரும் தற்போதைய காலகட்டத்தில் ஆயிரம் மாணவர்களுக்கு இலவசமாக கல்வி வழங்க முடிவெடுத்த தர்மபுரம் ஆதீன மடாதிபதி மற்றும் அதற்கான செயல் வடிவம் கொடுப்பதற்கான பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை வியந்து பாராட்டி வருகின்றனர்.