TN Corona LIVE Updates: தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்தது
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மேலும் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்தன. டீ கடைகள் திறக்க அனுமதியில்லை. மளிகை, காய்கறி, பலசரக்கு, இறைச்சி, மீன் விற்பனை கடைகள் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டுமே இயங்க அனுமதித்து தமிழக அரசு உத்தரவு
LIVE

Background
தமிழகத்தில் கொரோனா தொற்றினால் ஒரே நாளில் 303 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் நேற்று 31 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில், இன்று ஒரே நாளில் மட்டும் 33 ஆயிரத்து 658 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 15 லட்சத்து 65 ஆயிரத்து 35 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் மாநிலம் முழுவதும் 303 நபர்கள் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்து 17 ஆயிரத்து 359 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 905 ஆகும். இதனால், மொத்தம் குணம் அடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்து 39 ஆயிரத்து 887 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா நிவாரணத் தொகையை நாளையும் பெறலாம் - தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக ஊரடங்கு மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணமாக ரூபாய் 4 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக ரூபாய் 2 ஆயிரம் வழங்க அரசு சார்பில் டோக்கன் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், முழு ஊரடங்கு நாளானா நாளையும் நியாய விலைக்கடைகளில் நிவாரணத் தொகையை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 3 நாட்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு சரி செய்யப்படும் - அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி
விருதுநகர் மாவட்டத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழகத்தில் அடுத்த 3 நாட்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு சரி செய்யப்படும். ஸ்டெர்லைட் ஆலையில் 40 டன் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அவை 3 நாட்களில் சரி செய்யப்பட்டு தொடங்கப்படும். தமிழகத்தில் சுகாதாரத்துறையுடன் தொழில்துறையும் இணைந்து ஆக்சிஜன் தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. நெதர்லாந்து நாட்டில் இருந்து 4 டன் வெப்பநிலை கொதிகலன்கள், சீனாவில் இருந்து 12 கண்டெய்னர் மூலமாக ஆக்சிஜன் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
ஆக்சிஜன் சிலிண்டர்களை பதுக்கினால் குண்டர் சட்டத்தில் கைது - தமிழக முதல்வர் உத்தரவு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினசரி 30 ஆயிரத்திற்கும் அதிகம் என்றளவில் பதிவாகி வருகிறது. இந்த நிலையில், மாநிலத்தின் சில பகுதிகளில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை, ரெம்டெசிவிர் மருந்து மற்றும் படுக்கைகள் வசதி தட்டுப்பாடு என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இந்த சூழலில், தமிழகத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் ரெம்டெசிவிர் மருந்துகளை பதுக்கினால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
பெருநகரங்களிலும் வார் ரூம் அமைக்க தமிழக அரசு முடிவு
கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாநகரங்களில் கொரோனா வார் ரூம்கள் அமைக்கப்படும் - சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல். கோவையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், ஆய்வுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசும் போது இந்த தகவலை தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

