Yercaud Traffic: ஏற்காடு போறீங்களா நாளை? போக்குவரத்தில் அதிரடி மாற்றம் - காரணம் இதுதான்!
நடைப்பயணத்தையொட்டி நாளை காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரை அஸ்தம்பட்டி வழியாக ஏற்காடு மேல்நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும், ஏற்காடு -குப்பனுார் சாலையைப் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏழைகளின் ஊட்டி என்று பொதுமக்களால் அன்போடு அழைக்கப்படும் ஏற்காடு தற்போது பிளாஸ்டிக் கழிவுகளால் தனது அழகை இழந்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் ஏற்காடு சுற்றுலா தளம் அமைந்துள்ளது. தமிழகத்தின் தவிர்க்க முடியாத சுற்றுலா தலங்களில் ஒன்றான ஏற்காட்டிற்கு தமிழக மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
ஏற்காடு எங்கள் பெருமை:
ஏற்காடு வருகைத் தரும் சுற்றுலா பயணிகள் பயன்படுத்தும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்திவிட்டு மலை பகுதியில் எரிந்து செல்கின்றனர். இதனால் ஏற்காடு அழகு குறைந்து சுகாதாரமற்ற முறையில் காட்சியளிக்கிறது. மேலும் பிளாஸ்டிக் பொருட்களால் வனப்பகுதிகள், வன உயிரினங்கள், மரங்கள் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றது.
எனவே, ஏற்காட்டை மீட்டெடுக்கும் விதமாக சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பாக "ஏற்காடு எங்கள் பெருமை" விழிப்புணர்வு நடைபயணம் நாளை நடைபெற உள்ளது. இதுகுறித்து சேலம் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "தமிழ்நாட்டில் கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள "ஏற்காடு" ஒரு சிறந்த மலைவாழ் இடம். இது சேலம் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் பிரதேசமாக அமைந்துள்ளது.
விழிப்புணர்வு நடைபயணம்:
ஏற்காடு மலை பகுதியின் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் அரசால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடும் இத்தருணத்தில் பிளாஸ்டிக் பயன்பாடற்ற, பசுமையான, தூய்மையான ஏற்காட்டை உருவாக்குவது மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய பணித் திட்டமாக உள்ளது. இதனை அடைய பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாக உள்ளது. அந்தவகையில், "ஏற்காடு எங்கள் பெருமை" என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு விழிப்புணர்வு நடைப்பயணம் ஒன்று திட்டமிடப்பட்டுள்ளது.
போக்குவரத்து மாற்றம்:
இந்த விழிப்புணர்வு நடைப்பயணம் வருகின்ற 23.09.2023 சனிக்கிழமை அன்று ஏற்காடு அடிவாரம் முதலாவது வளைவில் இருந்து காலை 6.00 மணிக்கு தொடங்கப்படவுள்ளது. ஏற்காடு அடிவாரத்தில் தொடங்கப்படும் இந்நடைப்பயணமானது 60 அடி பாலம் வரை சென்று மீண்டும் ஏற்காடு அடிவாரம் வந்துசேரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விழிப்புணர்வு நடைப்பயணத்தையொட்டி 23.09.2023 அன்று காலை 6.00 மணி முதல் காலை 10.00 மணி வரை அஸ்தம்பட்டி வழியாக ஏற்காடு மேல்நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும், ஏற்காடு -குப்பனுார் சாலையைப் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
"ஏற்காடு எங்கள் பெருமை" எனும் இவ்விழிப்புணர்வு நடைப்பயணத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் மாவட்ட நிர்வாகத்தால் பங்கேற்புச் சான்றிதழ், டி-சர்ட் மற்றும் காலை சிற்றுண்டி வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அரசு அலுவலர்கள், சுற்றுசூழல் தன்னார்வலர்கள், மாணவர்கள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள், நடைப்பயண ஆர்வலர்கள் என அனைவரும் இதில் கலந்து கொண்டு நெகிழிப் பயன்பாடற்ற, பசுமையான, தூய ஏற்காட்டை உருவாக்கிட தங்களது ஈடுபாட்டையும், உறுதியையும் காட்டிட அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது" என்று சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.